ஞாயிறு, 5 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 6

மலைபடுகடாம் – அரிய செய்தி : 6
நன்னன் மூதூர்
இரை தேர்ந்து இவரும் கொடுந்தாள் முதலையொடு
திரைபடக் குழிந் தகல் அகழ் கிடங்கின்
வரைபுரை நிவப்பின் வான் தோய் இஞ்சி
உரைசெல வெறுத்த அவன் மூதூர் மாலையும்
கேள் ….. …… ……        ………
                          பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.   90 – 94
இரையைத் தேடி உலாவும், வளைந்த காலினையுடைய முதலைகளுடன்,
திரை உண்டாகும்படி ஆழமாகக் கல்லை அகழ்ந்து உண்டாக்கப்பட்ட அகழியையும், மலையைப் போன்ற உயர்ச்சியை உடைய வானைத் தீண்டும் மதிலையும் கொண்டு , புகழ் எங்கும் பரவுமாறு செறிந்த அவனது பழைய ஊரின் இயல்பு இவ்வாறு உள்ளது என்பதை , யான் கூறக்கேட்பாயாக.
 நவிர மலையில் விளங்கும் காரியுண்டிக் கடவுளின் இருக்கை கூறு முகத்தான் அத்தகைய ஆற்றல் உடையவன் நன்னன் என்பதைக் குறிப்பால் உணர்த்தினார் புலவர்.
நவிர மலை – திரிசூல மலை, பருவத மலை  என வழங்கப்பெறும் இம்மலை, திருவண்ணாமலையின் வடமேற்குத் திசையில் உள்ளது.
 ( இஞ்சி – மதில் ; வெறுத்த – செறிந்த ; மாலை – இயல்பு ; காரி உண்டிக் கடவுள் – நஞ்சினை  உண்ட இறைவன் , சிவபெருமான்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக