புதன், 8 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 9

மலைபடுகடாம் – அரிய செய்தி : 9
உறவும்  -  விருந்தும்
நோனாச் செருவின் வலம்படு நோன் தாள்
மான விறல்வேள் வயிரியம் எனினே
நும் இல்போல் நில்லாது புக்கு
கிழவிர் போலக் கேளாது கெழீஇ
சேட் புலம்பு அகல் இனிய கூறி
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர்
                  பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 163 – 169
                       பகைவரைப் பொறாமல் போர் செய்யும் போரினையும் வெற்றியைத் தரும் வலிய முயற்சியையும் மானத்தையும் வெற்றியையும் உடைய நன்னனுடைய கூத்தரேம் – என்று அவர்களிடம் நீங்கள் கூறுவீராயின்…..
                    சிற்றூர் வாழ் மக்கள், மலை போன்ற அவர்களுடைய வீட்டின் வாயிலில் நில்லாமல் நேரே உள்ளே சென்று பல நாட்களுக்கு முன்பே உறவுடையவர் போல அவர்களைக் கேளாதே உறவு கொள்வதால், சேணிடை நடந்து வந்த நும் வருத்தம் நீங்கும்படி இனிய மொழிகளைக் கூறி அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வர், மிகச் சொரிந்த நெய்யில் பொரித்து வெந்த பருத்த தசையையும், நிறமுடைய அழகிய தினையரிசிச் சோற்றையும் அவர்கள் வழங்க, நீங்கள் பெறுவீர்.
( வயிரியம் – கூத்தரேம் ; குறை – தசைத் துண்டு ; வேவை – வெந்த / பொரியல் ; இறடி – தினை ; பொம்மல் – சோறு.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக