புதன், 18 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 7

பட்டினப்பாலை – அரிய செய்தி – 7
மாளிகை மகளிர்
பெறற்கரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூமலி பெருந்துறை
துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும்
                           கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.104 - 110
                            பெறுதற்கு அரிய பழைய தலைமையுடைய துறக்க உலகத்தைப் போன்று, நெடிய தூண்கள் கொண்ட மாடங்கள் விளங்கும். அவற்றில் உறைபவர், பாடல்களைக் கேட்பர், நாடகங்களை விரும்பி நோக்குவர், வெண்ணிலவின் பயனைத் துய்ப்பர். தாம் உடுத்திய பட்டாடைகளை நீக்கிப் புணர்ச்சிக் காலத்திற்கென மெல்லிய வெண்ணிறத் துகிலை உடுத்துவர், கள் குடித்தலைக் கைவிட்டு இனிய மதுவை (காம பானத்தை) விரும்பி உண்பர், மதுவின் மயக்க மிகுதியால் மகளிர், தம் கணவர் சூடிய கண்ணியைத் தம் கோதையாக நினைத்துத் தங்கள் கூந்தலில் சூட்டிக் கொள்வர். மகளிர் கூந்தலில் அணிந்திருந்த கோதையை, ஆடவர் தங்கள் கண்ணியாக நினைத்துத் தங்கள் தங்கள் தலையில் சூட்டிக் கொள்வர், கணவனைக் கூடிய மடப்பத்தையுடைய மகளிர், இரவின் கடையாமப் பொழுதில் துயில் கொள்வர்.
( துகில் – மென்மையான ஆடை ; கண்ணி – ஆடவர், தலையில் சூடும் மாலை ; கோதை – மகளிர் மார்பில் அணியும் மாலை ,) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக