புதன், 25 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 14

பட்டினப்பாலை – அரிய செய்தி – 14
திருமாவளவன் – அரசுரிமை
……………………………. கூர் உகிர்க்
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு
பிறர் பிணியகத்து இருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்தி குழி கொன்று
பெருங்கை யானை பிடி புக்காங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப்பு ஏறி வாள் கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்தி
                          கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.  220 – 227
                            கூர்மையான நகங்களையும் வளைந்த வரிகளையும் உடைய புலிக்குட்டி, கூட்டுக்குள் அடைப்பட்டு வளர்ந்தது போலத் திருமாவளவன் பகைவர் காவலில் சிறைப்பட்டுக்கிடந்தனன், அவனுடைய பெருமை, காழ்ப்பு ஏறியதுபோல் முதிர்ச்சியுற்றது, தன்னுடைய நுண்ணுணர்வினால் செய்யத்தக்க செயல்களை அவன் ஆராய்ந்து கண்டனன்.
                            பெரிய கைகளை உடைய யானை, தன்னை அகப்படுத்திய குழியின் ஏறுதற்கரிய கரைகளைத் தன் கோட்டால் குத்திக் குழியைத் தூர்த்து வெளிப்பட்டுத் தன்னுடைய பிடியை அடைவதுபோலத் திருமாவளவன், தன்னுடைய பகைவர்களின் நெருங்கிய வலிய காவலாகிய வாட்படையை வென்று அவர்தம் காவலிலிருந்து புறம் போந்தனன், அவன் தன்னுடைய அச்சம் பொருந்திய அரச உரிமையை முறைப்படி பெற்றனன்.
“ தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி “ – பொருநராற்றுப்படை.
( கொடுவரி – புலி (ஆகுபெயர்) ; உகிர் –நகம் ; பீடு – பெருமிதம் ; காழ்முற்றி – வயிரமாக முதிர்ந்து ; தாயம் – அரசுரிமை ;  உரு – உட்கு , அச்சம்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக