சனி, 14 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 4

பட்டினப்பாலை – அரிய செய்தி – 4
பண்டைய விளையாட்டுகள்
நீல் நிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாள்மீன் விராஅய கோள்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி
பெருஞ் சினத்தான் புறக் கொடாது
இருஞ் செருவின் இகல் மெய்ம்பினோர்
கல் எறியும் கவண் வெரீஇப்
புள் இரியும் புகர்ப் போந்தை
பறழ்ப் பன்றி பல் கோழி
உறைக் கிண்ற்றுப் புறச்சேரி
மேழகத் தரொடு சிவல் விளையாட
                                கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 67 – 77
                        அகன்ற இடத்தையுடைய மன்றத்தில் ஆட்டுக் கிடாக்களையும்  கெளதாரிப் ( குறும்பூழ் / காடை)பறவைகளையும் மோதவிட்டுப் போர் புரியச் செய்ய்யும் விளையாட்டைக் காண்பதற்காகப் பலரும் ஒருங்கு கூடுவர். அக் காட்சி, நீல நிறத்தையுடைய வானத்தில் வலமாக எழுந்து செல்லும் நாள் மீன்களுடன் கூடி நிற்கும் கோள்மீன்களைப் போல் விளங்கும்.
                            பொழுதுபோக்க, விளையாட்டை மேற்கொள்ளும்போது, அவர்களிடையே தோன்றும் மாறுபாடு காரணமாக வலிமை மிக்குப் பெருஞ்சினம் கொள்வர், பகைத்த வீரர்கள் புறமுதுகிட்டு ஓடாமல், கையால் குத்தியும் படைக் கருவிகளால் வெட்டியும், ஒருவர் உடலுடன் ஒருவர் உடல் பொருந்தியும் போர் புரிவர். இவ்வாறு தங்களுக்குள் முரண்பட்டுப் புரியும் பகையைத் தவிர, செருக்குடைய குடிமக்கள் பலரும் கலங்கி வருந்துவதற்கு ஏதுவாகிய பகை, சோழ நாட்டில் இல்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக