வியாழன், 12 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 2

பட்டினப்பாலை – அரிய செய்தி – 2
இரண்டு ஏரிகள்
மழை நீங்கிய மா விசும்பில்
மதி சேர்ந்த மக வெண்மீன்
உருகெழு திரள் உயர் கோட்டத்து
முருகு அமர் பூ முரண் கிடக்கை
வரியணி சுடர் வான் பொய்கை
 இருகாமத்து இணை ஏரி
                    கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 34 – 39

மழை நீங்கிய பெரிய ஆகாயத்தில், திங்களைச் சேர்ந்து விளங்கும் மகம் என்னும் வெண்ணிற நாள் மீனின் வடிவத்தைப் போன்ற வடிவத்தைக்கொண்டதாக வலிமையுடன் அமைக்கப்பட்ட உயர்ந்த கரைகளைப் பெற்ற நல்ல பொய்கை உள்ளது, பொய்கை, மணம் வீசும் பன்னிறப் பூக்களின் சேர்க்கையால், பல நிறத்துடன் காட்சியளிக்கும். மிக்க காம இன்பங்களைக் கொடுப்பதற்கு உரிய இணைந்த இரண்டு ஏரிகள் புகார் நகரின் புறத்தே உள்ளன.
மக வெண்மீன் வளைந்த நுகத்தடிபோல் விளங்கும் விண்மீன் கூட்டமாகும். புகார் நகரில் திங்களுக்குக் கோயில் இருந்தமை இதனால் அறியப்படும்.
ஒப்பு நோக்கு ;
இரு ஏரிகள் சோம குண்டம் சூரிய குண்டம் எனக் குறிப்பர் உரையாசிரியர்.
 ‘ சோமகுண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவனொடும்
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலர்’ (சிலம்பு. 9: 59)
இவ்வுலகில் இன்புறுதல், போக பூமியில் பிறத்தல் என இவ்விரு ஏரிகளும் தரும் பயன்களைக் குறிப்பார் அடியார்க்குநல்லார். 

1 கருத்து:

  1. குறிஞ்சிப்பாட்டை நிறைவு செய்து தற்போது பட்டினப்பாலையைத் தொடர்ந்து தங்கள் பதிவுகளின் மூலமாகக் காண்கிறேன்.

    பதிலளிநீக்கு