வெள்ளி, 8 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 13

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 13
மழை  - அறிவியல்
               மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில்இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின்வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களைஅடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகிவிடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும்ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.(விக்கிபீடியா)
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் அறிவு
மழை குறித்த இவ்வறிவியல் உண்மையைச்  சங்கச் சான்றோர்களின் பாடல்களில் காணலாம்.
மழைக் கோள்
வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப
 பாலைக் கெளதமனார். 24 : 23 –  25

விளங்குகின்ற  கதிர்கள் வானத்திலெங்கும் பரந்து ஒளி வீச – வடக்கே சிறிது சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளி என்னும் கோளானது பயன் பொருந்திய பிற கோள்களோடு தனக்குரிய நல்ல நாளிலே மழை பொழிவதற்கு நிற்க…..
 ( மழைக் கோளாகிய வெள்ளி- மழை பெய்வதற்கு ஏதுவாகச் சிறிது வடக்கே சாய்ந்து நிற்குமாறு தோன்ற “ வறிது வடக்கிறைஞ்சிய வெள்ளி” என்றார். வெள்ளி தெற்கே நின்றால் மழை இல்லை. வெள்ளி – சுக்கிரன். மேலும் காண்க : ”வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கேகினும் …… புயன் மாறி வான் பொய்ப்பினும் “ ப.பாலை. 1-2. ஆநியம் – நல்ல நாள். )

Author: -முனைவர் ப. பாண்டியராஜா
  • First Published: Mar 29, 2015 2:00 AM
  • Last Updated: Mar 29, 2015 5:59 AM

“இப்போது பட்டினப்பாலை அடிகளை மீண்டும் பார்ப்போம். பொதுவாக, தெற்குப்பக்கம் தோன்றி, வடக்குப்பக்கமாக நகரும் மாலை வெள்ளி, 2013-ஆம் ஆண்டில் வடக்குப்பக்கம் தோன்றி தெற்குப்பக்கம் நகர்ந்துள்ளது - அதாவது, திசை திரிந்து தெற்கு ஏகியுள்ளது. எனவே, வானம் பொய்க்கும் என்ற சங்ககால மக்களின் நம்பிக்கை அந்த ஆண்டு மெய்யாகியிருக்கிறதா?
2013-இல் தென்மேற்குப் பருவக்காற்று குடகு நாட்டிலும், அதனையும் தாண்டி தமிழகத்திலும் மிகுதியாகவே மழையைக் கொட்டியது. அதனால் மலைத்தலைய காவிரி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. இது நடந்தது 2013 - ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அப்போது வெள்ளி வடக்குப் பக்கம் வெகுதொலைவிற்கு நகர்ந்துள்ளதைக் காணலாம்.”
மழை – அறிவியல்
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த  கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
                                                           நப்பூதனார், முல்லைப். 5 : 1 – 6
அலையோசை முழங்கும் குளிர்ந்த கடல்நீரைக் குடித்து எழுந்த மேகம், இடமகன்ற உலகத்தை வளைத்து, வலமாக உயர்ந்தெழுந்து, மலைகளில் தங்கிப் புல்லிய மாலைப் பொழுதில் பெருமழையைப் பொழிந்தது. இக்காட்சி, சக்கரத்தொடு வலம்புரிச் சங்கினை ஏந்திய கைகளையும், திருமகளை வைத்த மார்பினையும் உடைய திருமால், வாமனனாகச் சென்று இரந்தபோது, மாவலி வார்த்த நீர் கையில்பட்ட அளவில், விண்ணையும் மண்ணையும் அளாவும்படி உயர்ந்ததுபோல விளங்கியது.
( நனந்தலை – அகன்ற இடம் ; நேமி – சக்கரப்படை ; மாஅல் – திருமால் ; பாடு – ஓசை ; ஏர்பு – எழுந்து ; கோடு – மலை ; எழிலி – மேகம் . )
மழை அறிவியல்
பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர்பருகி
குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்கு எர்பு
வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே ….
                           கருவூர்க் கலிங்கத்தார், அகநா.183: 6-10
பெருங் கூட்டமான  மேகங்கள் திரண்டு சுருண்டு வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய துறைகளையும் உடைய பெருங்கடலினுட் சென்றன, சென்று  நீரினை மிகுதியாக  உண்டன. உண்டு, மேற்குத் திசையில் எழுந்து சூலுற்ற பெண் யானைக் கூட்டம் போல இடந்தோறும் இடந்தோறும் வந்து தோன்றி ஒலியுடன் மழையைப் பொழிவதற்கு ஒன்றுகூடக் கார்காலம் காலையே வந்து விட்டது.

மழை – அறிவியல்
 ……………………. இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர் என
…………………. நற்.115 : 3 – 4
 மேகங்களும் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு – எஞ்சிய கடலின் நீர் சிறிது நீர் என்னும்படி கொணர்ந்தன.
மழை – அறிவியல்
இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார். நற். 329 : 11 – 12
 கருமை மிக்க வானம் ஒலியுண்டாகுமாறு இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்து எழுந்த கார்காலம் வந்துற்றது.
மேற்சுட்டிய மேற்கோள்களில் மழை எவ்வாறு பொழிகிறது என்பதற்கான அறிவியல் நுட்பம் செறிந்த உண்மைகளை இன்றைய அறிவியல் சிந்தனைகளோடு ஒப்பிட்டு உணரவும் – பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல் தெற்றென விளங்கக் காணலாம்.
……………………… தொடரும் …………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக