ஞாயிறு, 10 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 15

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 15
வலமாக எழுதல்
வலமாகச் சூழ்ந்து எழுவது என்றால் என்ன?
பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை 4 -
நப்பூதனார், முல்லைப். 4 - 6

அலையோசை முழங்கும் குளிர்ந்த கடல் நீரைக்குடித்து எழுந்த மேகம், மலைகளில் தங்கி, வலமாகச் சுழன்று எழுந்து, அகன்ற உலகத்தை வளைத்து, மழையைப் பொழிந்த புல்லிய மாலைக் காலம்..
வலமாக எழ- மழை பொழிதல்
மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங்கு எழிலி பெளவம் வாங்கித்
தாழ்பெயல் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய ஏமுறு காலை
                                     மதுரை எழுத்தாளன்,அகநா.84 : 1- 5
மலைமீது வில் – மேகம் முழங்க – கடல் நீரை முகந்து -  உலகினை வலனாக எழுந்து- இறங்கிப் பெய்யும் மிக்க மழை – திசையெல்லாம் மறையப் பொழிந்து நிலம் அழகுற இன்பம் எய்திய இக்காலத்தே. மழை –
 அறிவியல் நோக்கு

                   சூறாவளி , பூமியைப் போல் ஒரே திசையில் சுற்றும் அடர்த்தியான, உருண்டையான நிலையற்ற இயக்கத்தைக் கொண்ட பரப்பு என்று வானிலையியல் கூறுகிறது.[1][2]. மேலும் வானிலையியலானது சூறாவளியின் போது வட துருவத்தில் சுருண்டு ஏறுகின்ற  காற்று இடஞ்சுழியிலும் தென் துருவத்தில் ஏறுகின்ற காற்று வலஞ்சுழியிலும் வீசும் என்று கூறுகிறது.
 ( விக்கிபீடியா)
.                       மேகங்கள் வலமாகச் சூழ்ந்து எழுதல் – என்ற கருத்தாவது பூமியின் நிலநடுக் கோட்டிற்குத் தென்பகுதியில் நீர்ச்சுழற்சி, காற்றுச் சுழற்சி  வலமாகச் சுழன்று எழும் என்பது இன்றைய அறிவியல் உண்மை. இத்தகைய அறிவியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கச் சான்றோர் கண்டுபிடித்துள்ளனர் என்பது வியத்தற்குரியதன்றோ…!
 சங்க இலக்கியங்களில் மழை பொழிதல் குறித்த செய்தி பல பாடல்களில் இடம்பெற்றுள்ளன, ஓரிடத்திலாவது மழைபொழிதல் “ வருணபகவான்” ஆற்றல் என்று சுட்டப்படவில்லை. சங்கச்சான்றோரின் அறிவியல் அறிவாற்றலுக்கு இஃதும் ஓர் சான்றாகும். 

1 கருத்து:

  1. ஊர்வலம் என்றுதான் சொல்கிறார்கள்.இடமாக நாம் சுற்றினால் இதயம் கேடுறும் என்கிறார்களே,சரியா.

    பதிலளிநீக்கு