புதன், 20 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 25

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 25
காவிரியில் கல்லணை – 2
காவிரி யாற்றின் சிறப்பு
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்             
திசை திரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப்பு யன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத் தலைய கடற் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
                        -- பட்டினப்பாலை : 1 – 7
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றோடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல் வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியே ….
காண்க:  வாய்த்தலை – நீரைத் தேக்கும் தலை மதகு (உழவர் வழக்கு)
  --- சிலப்பதிகாரம் : 10 : 102  –  109
 இதன் பொருளாவது – கோள்களிற் சனிக்கோள் இடபம் சிங்கம் மீனமென்னு மிவற்றினோடு மாறுபடினும், ஆகாயத்தே தூமக்கோள் எழினும், விரிந்த கதிரையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக்கண்ணே பெயரினும் காற்றுப்பொரும் குடகவரையினது உச்சிக்கண்ணே கடிய குரலையுடைய உருமேற்றோடு சூன்முதிர்ந்த பருவப்புயல் தன்பெயலாகிய வளத்தைச் சுரத்தலானே அவ்வரையிற்பிறந்த பல பண்டத்தோடு கடுகிவருதலையுடைய காவிரியினீர், முகத்தைக் குத்தியிடிக்குங் கடல் தன் வளத்தைக் கொண்டு எதிர்தலானே தேங்கி, வாய்த்தலைக்கிட்ட கதவின் மீதெழுந்து குதிக்கின்ற அப்புதுப்புன லொலியல்லது ஆம்பி முதலாயின ஒலித்தல் செல்லாவென்க.
“ வனைகலந் திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓ இறந்து ஒலிக்கும் – மலைபடு. 474 – 475
 சேயாறு  - ஆற்று நீர் வாய்த்தலை வழியாகக் குமிழ்த்து வரும் .
 தலைவாய் – வாய்த்தலை – மதகு.

கோள்நிலை திரிந்து கோடை நீடினும் …
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்
பெருவறன் ஆகிய பண்புஇல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறைதுறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பு அகம்புகு தொறும்
புனலாடு மகளிர் கதுமெனக் குடைய
கூனி குயத்தின் வாய்நெல் அரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாள்தொறும்
குன்றுஎனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாக
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 :  236 – 248
சோழ நாட்டில் – கடுங்கோடையில் பயிர்கள் கருகவும் – அருவி நீர் இல்லாது ஒழியவும் - முகில்கள் கடல் நீரை முகத்தலை மறந்தொழியவும் – இவற்றால் பெரிய வற்கடம் (பஞ்சம்) உண்டாகும் . அத்தகைய காலத்தும் நறைக்கொடியும் நரந்தம் புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சுமைகளைச் சுமந்து கொணர்ந்து அவற்றை நீர்த்துறைதோறும் இட்டு – இளைப்பாறிப் பின் மேலும் நடந்து செல்லும் இயல்புடையது காவிரி – நுரையைத் தலையிலேயுடைய ஆரவாரம் பொருந்திய தன் வெள்ள நீர் கரை சூழ்ந்த குளங்களிலும் – பிற நீர்நிலைகளிலும் புகுந்தொறும் – நீர் விளையாடலை விரும்பும் மகளிர் விரைந்து சென்று அவற்றில் குடைந்து விளையாடுவர்- உழத்தியர் தம் உடல் வளைந்து குனிந்து நின்று அரிவாளால் முதிர்ந்து விளைந்த நெற்றாளை அரிந்து – தாள் அரிந்து திரட்டிய சூட்டினைச் சுமையாகக் கட்டிக்கொண்டுபோய் மலையாகப் போராக்கி – நாள்தொறும் கடா விட்டு (பிணையலடித்து) மலையெனக் குவிப்பர் – அள்ள அள்ளத் தொலையாத அந்நெற்பொலி நன்கு தைத்த மூடைகளிலே குதிர் முதலியவற்றில் இடமின்மையால் யாண்டும் கிடக்கின்ற செந்நெல் விளைகின்ற வரம்பு கட்டப்பட்ட  - ஒரு வேலி நிலம் ஆயிரங்கல நெல் விளையும்படி காவிரியாற்றால் வளமாக்கப்படுகின்ற நாடு முழுவதும் தனக்கே உரிமையுடையதாய தன்மையன் கரிகாலன்.
 ( எல்லை – பகல் ; பல்கதிர் பரப்பி – கோடைக் காலம் ; குல்லை -கஞ்சங்குல்லை – கஞ்சா செடி : புரத்தல் – உயிர்களை ஓம்புதல் ;  நறை – நரந்தம் – மணமுடைய கொடி – புல் .) தொடரும் ……. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக