திங்கள், 4 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –131 : 45 . எழுத்துடை நடுகல்

தொல்தமிழர் அறிவியல் –131 : 45 . எழுத்துடை நடுகல்

                                      45. எழுத்துடை நடுகல்

விழுத் தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் ……. 
                                                      --- ஓதலாந்தையார், ஐங். 352: 1-2
                  விழுமிய அம்பு தொடுத்தலை உடைய மறவர் தம் வில்லினின்று விடுத்த அம்பினால் உயிர் நீத்து வீழ்ந்த கரந்தை வீரர் பொருட்டுப் பெயரும் பீடும் பொறித்து நட்ட நடுகல்
(அக்காலத்துத் தமிழ் எழுத்துகள் பற்றிய வரலாறு  இதனாற் புலப்படும் ; மேலும் காண்க : அகநா. 53 ; புறநா. 264.)

 ……………………………… ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல். 
                                            மதுரை மருதனிளநாகனார், அகநா. 131: 9-11.
          ஆநிரை மீட்ட போரில் இறந்துபட்ட கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து, மயிற்பீலி சூட்டப்பெற்று விளங்கும்  சிறப்பினைக் கொண்ட நடுகல்

 குயில் எழுத்து

 இருங்கவின் இல்லாப் பெரும்புன் தாடிக்
கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர்பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்.
                                      --–மதுரை மருதனிளநாகனார், அகநா. 297: 5-10.
               அழகிழந்த பொலிவற்ற தாடியினையும் அஞ்சாமையையும் உடைய மறவர்கள் தம் அம்புகளை அச்சம் தரும் நடுகல்லில் தீட்டுவர் ; அதனால் பக்கம் தேய்ந்து மெலிந்துபோன நடுகல்லில் பெயரும் பெருமையும் விளங்கத் தோன்றுமாறு பொறிக்கப்பட்ட எழுத்துகளை ஒன்று சேர்த்துப் பொருள் பொருத்தமுடன் படித்துப் பார்க்க இயலாதவராய், வழிநடை வருத்தத்தால் தளர்ச்சியுடன் செல்லும் வழிப்போக்கர்கள் அதனை விடுத்து அகன்று செல்வர்.

மரங்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்றலை சிதைத்த வன்றலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குற்
கூருளி குயின்ற கோடுமாய் எழுத்து அவ்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
                                       --–மதுரை மருதனிளநாகனார், அகநா. 343: 4-8.
                    வண்டியினைக்கொண்ட உப்பு வணிகனது, பெயர்ந்து செல்லும் உருளின் பொலிவில்லாத பூண், சிதையச் செய்த வலிய பாறையில் உள்ள நடுகல்லின், இடப்பெற்ற கண்ணி வாடப்பெற்றதும் நீராட்டப் பெறாததுமாகிய இடத்தில் கூரிய உளியால் இயற்றப்பெற்ற கீற்றுகள் மறைந்த எழுத்துகள், அவ்வழியிலே செல்லும் புதியவர்க்கு வேறு பொருளினவாகப் பிறழ்ந்து காணப்படும்.

                   “ நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் ஆகும். இவற்றைவீரக்கற்கள்என்றும் கூறுவர். நினைவுக்கற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ அல்லது தனிப்பட்ட பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும்பெருங்கற்காலம்’  முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. ‘இந்தியாவிலும்வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும், ’வீரச்சாவுஅடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக்கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. ------தொடரும்....

1 கருத்து:

  1. எழுத்துடை நடுகல். இந்த சொல்லை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் ஐயா. அருமை. வழக்கமாக ஆங்கில இணைப்பை தருவீர்கள். இதில் காணவில்லையே?

    பதிலளிநீக்கு