திங்கள், 11 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –138 : 47. தமிழர் மருத்துவம்

தொல்தமிழர் அறிவியல் –138 : 47. தமிழர் மருத்துவம்

47. தமிழர் மருத்துவம்

                        ஒட்டுமொத்த உலக மக்களுக்கெல்லாம்  நெறியான வாழ்க்கை முறையை ஒற்றை வரியில் உணர்த்தினான் தமிழன்.

                      ”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு” (  Too much of anything is good for nothing )  தொன்மைத் தமிழின் பழமொழியாம் இத்தொடர் இவ்வுலகில்பொருந்தா இடம்என்று ஒன்றில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்றும் இளமையுடன் இருக்கவல்ல ஆற்றல் வாய்ந்த ; பொருள் பொதிந்த பொன்மொழி இதுவே.

திருவள்ளுவரும்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. (941) என்றார்.

                       சித்தர்களாகிய மருத்துவ நூலார் வகுத்தளித்த மருத்துவத்தில் வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற மூன்றனுள் எதுவொன்று மிகினும் குறியினும் நோய் செய்யும் என்றார். இஃது உடலியல் சார்ந்த அறிவியலாகும்.

                                 நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று- மருத்துவ நூலார் ஊதை(வாதம்) முதலாக எண்ணிய முக்கூறுகளும்; மிகினும் குறையினும் நோய் செய்யும்-தாம் இருக்க வேண்டிய அளவிற்குக் கூடினாலும் குறைந்தாலும் உடம்பிற் பல்வேறு நோய்களை உண்டுபண்ணும்.

                         'வளிமுதலா வெண்ணிய மூன்று' ஊதை பித்தங் கோழை (சிலேட்டுமம்) என்பன. அல்லது ஐயம் என்பதும் கோழைக் கொருபெயர். இம் முன்றும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில் செய்யும் இன்றியமையாத கூறுகளேயன்றி நோய்களல்ல.மூச்சும் பேச்சும் உட்பொருளிடமாற்றமும் வெளியேற்றமும் தனித்தும் பிற தாதுக்களோடு கூடியும் நிகழ்த்துவது ஊதையின் தொழில்கள்; உண்டதன் செரிமானத்திற்கு உதவுவது பித்தநீர்; தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவுநெய்போற் பயன்படுவது கோழை. இவை உணவுடை செயல்களின் ஒவ்வாமையாலும் இயற்கை வேறுபட்டாலும் மிகுதலுங் குறைத்தலும் நேரும் பொழுதே, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும் என அறிக. ----ஞா. தேவநேயப் பாவாணர்.

                                  கிரேக்கத்தில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிப்போகிரடிஸ் நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகின்றார். நோய்பேயினாலோ சாபத்தினாலோ வருவதல்ல ; அது மனித உடலில் ஏற்படும் குறைபாட்டினால்தான் வருகிறது. உடலில் ஏற்படும் குறைபாடுகளை உடலே தன்னளவில் சரி செய்துகொள்ளும் ஆற்றலுடையது என்று கூறினார்.
                             திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் கூறியுள்ள செய்திகளைப் படித்துப்பாருங்கள் திருவள்ளுவரின் மருத்துவ அறிவியல் அறிவு தெரியும். இயற்கை வழிப்பட்ட நமது மருத்துவத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பது புரியும். சித்தர்களின் அன்றைய மருத்துவ அறிவியல் இன்றும் பொருந்துகிறது என்றால் அதன் மகத்துவத்தை என்னவென்று சொல்வது..! நோயும் பிணியும் கண்டறிந்ததோடு அறுவை மருத்துவமும் செய்ததற்கான சான்றுகளும் இலக்கியங்களில் உள்ளன.

                                 இந்த மருத்துவ அறிவியலின் வளர்ச்சியும் தொடர்ச்சியும் நைந்து போனதற்கு என்ன காரணம்ஆங்கில மோக அடிமைப்புத்திதானே..; தீங்கு தருவதாயினும் ஆங்கில மருத்துவத்தை நாடி ஓடுவதேன் ? நாம் இயற்கையை விட்டு வெகுதொலைவு சென்றுவிட்டோம் ; ஓடி ஒளிந்த இடத்தில் உண்மை உறங்கிக்கிடக்கிறது. தமிழன் மருத்துவத்தைத் தொழிலாகச் செய்யாமல் தொண்டாகவே செய்தான் ; அதனால் அதன் அருமை புரியாமல் போயிற்று. ;
                           சித்தர் மருத்துவம் உயிரோடும் உடலோடும் ஒருங்கிணைந்து வளர்ந்து வருவது. இதன் முதன்மைப்பணி நோய் வாராமல் காப்பதே ( Prevention is better than cure) நோய் வந்துற்றால் முதல் நிலையில் முழுப்பயன் கிட்டும் ; இடை நிலையில் ஓமியோபதி மருத்துவம் கைகொடுக்கும். இவ்விரண்டு மருத்துவ முறைகளும் உடலின் இயல்பான இயக்கமுறைகளில் ஊறு விளைவிக்காதவை. நோயின் கடை நிலைக்குமருந்துகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஆங்கில மருத்துவத்தின் அறுவை மருத்துவம் துணைபுரியும். ஆங்கில மருத்துவத்தின் நோய் கண்டறியும் முறை வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளது ; அதுபோல நோய்களும் புதிய தோற்றமுறைகளைப் பெற்றுள்ளன.------தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக