செவ்வாய், 10 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-10


தன்னேரிலாத தமிழ்-10

அகப்பொருள் புனைவு முறைகள்

”புணர்தல், பிரிதல் முதலிய ஐந்திணை யொழுக்கத்தின் அரிய குறிக்கோளையும் அதன்னல் விளையும் அறப்பயனையும் கண்ட சான்றோர் தாம் பாட்டுக்களிலெல்லாம் அகவொழுக்கத்தையே பெரிதும் எடுத்துப் பாடினர்.மேலும் இவ்வகப் பொருட்காட்சியும் அறிவும் அறம்புரிந்தொழுகும் தூய மக்கட் சமுதாயம் தோன்றுவதற்கு இன்றியமையா எனக் கண்டதனால், இதனை வழக்கு நூன் முறையிற் கூறுவதே புலநெறி என்று மேற்கொண்டனர்.” –ஒளைவை சு. துரைசாமிப்பிள்ளை.

அகத்திணைச் செய்திகள்

மனித இனம் மேற்கொண்டு ஒழுக வேண்டிய அகத்திணை நெறிகளைத் தனது அறிவுக்கூர்மையால் ஆராய்ந்து எடுத்துரைக்கிறார் தொல்காப்பியர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களில் நான்கு இயல்கள் அகவொழுக்கம் பற்றியன. அவை  அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்பனவாம். ஏனைய இயல்களிலும் அகத்திணைச் செய்திகள் விரவி வந்துள்ளன. அகத்திணை ’இன்பம்’ என்னும் பொருள் பற்றியதாகும். அகவொழுக்கங்களைத் திட்பமாகவும் நுட்பமாகவும் இயற்றிய தொல்காப்பியர் தமிழில் அகப்பொருள் குறித்து, ஒரு கோட்பாட்டை உருவாக்கியுள்ளார்.

புனைவு முறைகள்

அகப்பொருள்  மரபுகளை வகுத்தளித்த தொல்காப்பியர் அம்மரபுகள் பிறழா வண்ணம் கருத்துக்களைப் புலப்படுத்தும் புனைவு முறைகளையும் கூறியுள்ளார்.

அகப்பொருள் செய்தியாகிய காதலர் தம் இன்பவாழ்வு, உலகியல் அடிப்படையிலான நாடக வழக்கில் புனைத்துரைக்கப்பட வேண்டும் என்பது தொகாப்பியர் கருத்து.

இனி,  ‘நாடக  வழக்கு’  என்பதற்கு  உரையாசிரியர் நச்சினார்க்கினியர், “ இவ்வதிகாரத்து நாடக வழக்கென்பன புணர்ச்சி, உலகிற்குப் பொதுவாயினும் மலைசார்ந்து நிகழுமென்றுங் காலம் வரைந்தும் உயர்ந்தோர் காமத்திற்குரியன வரைந்தும் மெய்ப்பாடு தோன்றப் பிறவாறுங் கூறுஞ் செய்யுள் வழக்கம்.” என்பார்.

செய்யுள் வடிவம்

சங்க காலத்துக் கருத்துப் புலப்பாட்டு வடிவம் செய்யுள் ஆகும். அளவான சொற்களைக் கொண்டு சுருக்கமாகவும் தெளிவாகவும் ஆழமாகவும் நயமாகவும் புனைதல் வேண்டும். இவ்வகையில் அகப்பொருளுக்குரிய செய்யுள் வடிவங்களாக,’ கலியே, பரிபாட்டு ஆயிரு பாவினும் உரியதாகும் என்மனார் புலவர்’ என்பார் தொல்காப்பியர். இந்நூற்பாவிற்கு உரை வகுத்த இளம்பூரணர்,”கலியும் பரிபாடலும் என்னு இரண்டு பாவிலும் உரிமையுடைத்தாம் ”என்றும் “எனவே, இவை இன்றியமையாதன என்றவாறு, ஒழிந்த பாக்கள் இத்துணை அகப்பொருட்கு உரியவாய் வருதலின்றிப் புறப்பொருட்கும் உரியவாய் வருதலின் ஓதாராயினர். புறப்பொருள் உலகியல்பான்ன்றி வாராமையின், அது நாடக வழக்கம் அன்றாயிற்று” என்பார்.

புனைவு நெறி

 தொல்காப்பியர், பொருள் புலப்பாட்டு வடிவமாகிய செய்யுளுக்குரிய உறுப்புக்களைத் தொகுத்துக் கூறுகின்றார். செய்யுளுக்குரிய 34 உறுப்புகளுள் அகப்பொருள் புனைவுக்குரியதாக 12 உறுப்புக்களைக் குறிப்பிடுகிறார், அவை...

1.   திணை 2. கைகோள் 3.கூற்றுவகை 4. கேட்போர் 5. களன் 6. காலவகை 7. பயன். 8. மெய்ப்பாடு 9. எச்சவகை 10.முன்னம் 11. பொருள் 12. துறைவகை. இவையே அகப்பொருள் புலப்பாட்டிற்குரிய புனைவு உத்திகளாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக