திங்கள், 9 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-9


தன்னேரிலாத தமிழ்-9

தொல்காப்பியர் குறிப்பிடும்  முதற் பொருளாகிய நிலமும் பொழுதும்..!

“நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய
படுதிரை வையம் பாத்திய பண்பே.”     
                                        
பாலை என்றொரு நிலமின்மையின், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய அவை ஒலிக்கும் கடல் சூழ்ந்த இந்நிலப்பரப்பு நால்வகையாகப் பகுக்கப்பட்ட இயல்புடையனவாம்.

ஆண்டுப் பகுப்பு : பருவங்கள்; பெரும்பொழுது: கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் எனும் பருவங்கள்.

சிருபொழுது: காலை , நண்பகல், எற்பாடு, மாலை, இடையாமம், விடியல்.
பகல்: 30 நாழிகை; இரவு; 30 நாழிகை = ஒருநாள்-60 நாழிகை.(24 மணி நேரம்.)

காலப் பகுப்பு

”இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணரப்
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்.”

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற கூறுபாடுடையதாகக் கூறப்படும் பகுதிக்கண், ஆராய்ந்து உணருமாறு பொருள் நிகழ்ச்சியைக் கூறுவதே காலம் ஆகும்.தமிழ் இலக்கண விதிப்படி- பெயர், வினை என்னும் சொல்வகை இரண்டனுள் வினை ஒன்றே காலம் காட்டி நிற்கும். ஒரு வினைச்சொல் முதல் நிலையால் தொழிலையும் இறுதிநிலையால் அத்தொழிலைச் செய்தாரையும் இடைநிலையால் காலத்தையும் காட்டி நிற்கும்.

இந்நூற்பா உரைக்கும் பொருள், நிகழ்ச்சியைக் கூறுவதே காலம் ஆகும் என்ற கருத்தைச் சார்பியல் கோட்பாட்டினைக் கொண்டு சிறிது நோக்குவோம்.”……விசும்புக்கு நேர்ந்த கதியே காலத்துக்கும் நேர்கிறது.’மாறாத ஒரே இடம்’ என்கிற தொடர் எப்படியோ அதேபோல், ‘மாறாத ஒரே நேரம்’ என்ற தொடரும் அர்த்தமற்றதாய் இருப்பது தெரியவருகிறது.”

”இரு நிகழ்ச்சிகளுக்கு இடையிலான நேர இடைவெளி அவற்றுக்கு இடையிலான தொலைவு, தொலைவு எப்படியோ அதேபோல, எதைச் சார்ந்து அது நிர்ணயிக்கப் பட்டிருக்கிறதோ அந்தப் தொகுப்பைப்பற்றிய குறிப்பும் சேர்க்கப்பட்டு நிறைவுடையதாக்கப்பட வேண்டியிருக்கிறது.”

வினைச் செல்லின் இலக்கணம் அதாவது ’மாறாத ஒரே நேரம் என்ற ஒன்றில்லை என்னும் முக்கால உண்மை,’ இவ்வறிவியல் கோட்பாட்டோடு ஒத்திருப்பதைக் காணமுடிகிறதல்லவா..?


1 கருத்து:

  1. ஒரு நாள் என்பது 60 நாழிகையினைக் கொண்டது என்பதை இப்போதுதான் அறிந்தேன் ஐயா. நன்றி.
    சிருபொழுது என்றுள்ளது. அது சரியா? சிறுபொழுது அல்லவா?

    பதிலளிநீக்கு