தன்னேரிலாத தமிழ்-4
அகப்பொருள்
புனைவு
அகப்பொருள் மரபுகளை வகுத்தளித்த
தொல்காப்பியர், அம்மரபுகள் பிறழா வண்ணம் ‘புனைவு’ முறைகளையும் விளக்கிக் கூறியுள்ளார்.
அகப்பொருள் செய்தியாகிய ‘காதலர்’
இன்பவாழ்வு, உலகியல் அடிப்படையிலான நாடக வழக்கில் புனைந்துரைக்கப்பட வேண்டும் என்பது
தொல்காப்பியர் கருத்து,
‘நாடக வழக்கினும்
உலகியல் வழக்கினும்
பாடல்சான்ற
புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு
ஆயிரு பாவினும்
உரியதாகும்
என்மனார் புலவர்.’
இந்நூற்பாவிற்கு உரை வகுத்த இளம்பூரணர்,’நாடக வழக்காவது சுவைபட வருவனவெல்லாம்
ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல், அஃதாவது செல்வத்தானும் குலத்தானும் ஒழுக்கத்தானும்
அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும்
அவ்வழிக் கொடுப்போருமின்றி அடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும்,
பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும், பிறவும்
இந்நிகரனவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல்’ என்கிறார்.
காதல் ஒழுக்கங்கள் நாடகப் பாங்கில்
புனையப்பட்டுள்ளன ; அவ்வகப்பாடல்கள், சங்கச் சான்றோரின் ஆளுமையைப் புலப்படுத்துகின்றன.
நாடகத் தலைமை மாந்தர் தலைவன்-தலைவி ஆவர்.
‘மக்கள் நுதலிய
அகனைந் திணையும்
சுட்டி ஒருவர்
பெயர் கொளப் பெறாஅர்.’
மக்கள் நுதலிய என்பதனால் எல்லா
மக்களுக்கும் (ஐந்திணை) பொதுவானது என்கிற அகப்பொருள் மரபையும் ‘சுட்டி ஒருவர் பெயர்
கொளப் பெறாஅர்’ என்பதனால் அகப்பொருள் பாடும் இலக்கிய நெறியையும் வகுத்துரைத்தார் தொல்காப்பியர்.
இன்றைய இலக்கியங்களில் தொன்மை அகப்பொருள் மரபுகளைக் காண முடிவதில்லையே ஐயா! ஆபாசம் நிறைந்துள்ளது! பயனுள்ள விளக்கங்கள். மிக்க நன்றி.
பதிலளிநீக்குகடந்த சில ஆண்டுகளாக பக்தி இலக்கியங்கள் படித்து வருகிறேன். அவற்றை நிறைவு செய்தபின் இவ்வகை இலக்கியங்களை படிக்க ஆவலாக உள்ளேன் ஐயா.
பதிலளிநீக்கு