திங்கள், 16 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-14


தன்னேரிலாத தமிழ்-14

ஆடவர் - பெண்டிர் இயல்புகள்

தொல்காப்பியர் குறிப்பிடும்  இயல்புகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையாக இருக்கவேண்டிய குணநலன்கள்.

ஆணும் பெண்ணும் தாமே தம்முள்  கண்கள்  நோக்கியவழி  உள்ளத்தால் ஒன்றுவர். அந்நிலையில் இருவர்மாட்டும் களவொழுக்கம் ஏற்படல் இயல்பே.

கள்வொழுக்க உணர்வுகள்

‘வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று அச்
சிறப்புடை மரபின் அவை களவு என மொழிப.’

அஃதாவது காதல் வயப்பட்ட பெண்டிரிடத்துத் தோன்றும் உள் உணர்வுகளாவன,

குறையாத விருப்பம் ; இடைவிடாது நினைத்தல் ; இளைத்தல் ; ஆவதற்குரிதைக் கூறல் ; தம் நாண எல்லையைக்கடத்தல் ; காண்பன அனைத்தும் தம்மைப் போன்றிருப்பதாகத் தோன்றுதல் ;  தம் செயல்களை மறத்தல் ; தெளிவின்மை ; சாதல் நினைவு இவை களவுக்குரிய ஒழுகலாறுகளாகும்.

களவில் கண்டு மகிழ்ந்த அவளை உள்ளத்தில் வரைந்து கொண்ட  அவன் மன நிலையோ..!

‘முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல்
நன்னயம் உரைத்தல் நகைநனி உறாஅது
அந்நிலை அறிதல்  மெலிவு விளக்குறுத்தல்
தன்னிலை உரைத்தல் தெளிவகப் படுத்தல் என்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர்,’

அஃதாவது, தலைவியை முன்னிலைப்படுத்தல் ; தன் சொல்வழிப்படுத்தல் ; தான் விரும்பியதை எடுத்து இயம்புதல் ; புன்னகைத் தோற்றத்தால் அவள் நிலை அறிதல் ; தன் மெலிவை வெளிப்படுத்தல் ; தன்னிலை உரைத்தல் ; தெளிவைத் தன்கைப்படுத்தல் என்று இவை நிகழும் என்று கூறுவர்.


1 கருத்து: