தன்னேரிலாத தமிழ்-7
அறிவியல் நோக்கில்...
1.. அக அறிவியல்.
2. புற அறிவியல்.
அக அறிவியல், உயிரினங்கள் தொடர்பான வாழ்வியலைச் சார்ந்திருப்பது.குறிப்பாக
மனித சமுதாயத்தின் அகவாழ்க்கைப் பற்றியதாகும்.
மண்ணில் நல்லவண்ணம் மக்கள் வாழ்வதற்கான நெறிமுறைகளைக் கூறுவது; இப்படித்தான்
வாழ வேண்டும் என்பதை வரையறுத்துக் கூறுவது. அஃதாவது, பிறப்பால் பேதமுறாது ; வளர்ப்பால்
வழிதவறாது; இல்லரத்தால் உறவு மாறாது ; யாதும்
ஊரென யாவரும் உறவென இயற்கையோடியைந்து வாழ வற்புறுத்துவது. வளமான வாழ்க்கை நலமுடன் விளங்க,
ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாக அனைத்து உயிர்களும் இயற்கை அன்னையின் மடியில் இன்புற்று இயைந்திருக்க, இயங்க, அறம் பல வகுத்துரைப்பது.
அக அறிவியலின் அடிப்படை ஒழுக்கமுடைமையே.
ஒழுக்கமின்றி மனித சமுதாயம் இணக்கமாக வாழ முடியாது ; வழவும் கூடாது. இஃது எக்காலத்திற்கும்
பொருந்தும் அறிவியல் உண்மையாகும். ஒருவன், ஒருத்தி எனும் கற்பொழுக்க வாழ்க்கைமுறை,
புற அறிவியல் வளர்ச்சியால் புறந்தள்ள முடியாத அக அறிவியலாகும். பிறப்பு முதல் இறப்புவரை
உயிர்களின் தனித்தன்மையையும் வாழ்வியலின் அனைத்து நிலைகளையும் அறிவியல் நோக்கில் ஆராய்ந்து
எடுத்துரைப்பதே அக அறிவியல்.
புற அறிவியல்
மனித சமுதாயத்தின் புறத்தேவைகளைப்
புதிய புதிஅ அறிவியல் கண்டுபிடிப்புகளால் இயக்கி வருவது. புற அறிவியலில் நிலையான கண்டுபிடிப்புகள்
என்று எதுவும் இல்லை ; இன்றைய கண்டுபிடிப்புகள் நாளை வழக்கொழிந்து விடுகின்றன. ஆயினும்
அறிவியல் வளர்ச்சி விரைவான, நிலையான இருப்பை
நோக்கி மாற்றங்களை எடுத்து வைத்துக்கொண்டே இருக்கின்றது.; இயற்கையின் இயல்பை மாற்ற
/ அழிக்க முயல்கிறது. இயற்கை, செயற்கை அறிவியலால்
சிதைக்கப்படுகின்றது. இன்று, புற அறிவியல் அனைத்து உயிரின்ங்களுக்கும் அச்சுறுத்தலாக
அமைந்துள்ளது. வானும் மண்ணும் நிலமும் நீரும் வளியும் இவற்றால் கட்டமைக்கப்பட்ட வாழ்வும்
மாசடைந்துள்ளன. இயற்கையின் மீது புற அறிவியல் தொடுக்கும் ஆதிக்கப் போர், உயிரினங்களைப்
பேரழிவை நோக்கிச் செலுத்துகிறது. உலக உருண்டை உள்ளங்கையில் வந்துள்ளது என்னவோ உண்மைதான்.
ஆனால், வானூர்தியோ, கைப்பேசியோ இல்லாமல் வாழ்ந்து விடலாம் ; ஒழுக்கமின்றி வாழ்தல் உயர்வாகுமோ..?
அருமை..அருமை.நன்றி.
பதிலளிநீக்கு