தன்னேரிலாத தமிழ்-23
மக்கட் பேறு
“ கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்னராட்டி …. “ ------ அகநானூறு.
தெய்வத்தன்மை பொருந்திய கற்புடன்
குடிக்குச் சிறப்பினைத்
தரும் மகனைப்
பெற்ற நற்குணங்கள்
நிரம்பிய இல்லத்தரசி.
“ ஒடுங்கு ஈரோதி ஒண்ணுதல் கருவில்
எண் இயல் முற்றி ஈரறிவு புரிந்து
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற்கு அமைந்த அரசு துறை போகிய
வீறுசால் புதல்வற் பெற்றனை…” --- பதிற்றுப்பத்து.
வேந்தே..! நின் மனைவியின் கருவில்
பத்துத் திங்களும்
நிரம்பி, பேரறிவை விரும்பி, அன்பும் நாணும் ஒப்புரவும்
கண்ணோட்டமும் வாய்மையும்
நடுநிலைமையும் உளப்படப்
பிற குணங்களும்
குடிகளைக் காத்தற்குப்
பொருந்திய அரசின்
துறைகளை முற்றக்
கற்ற சிறப்புகளையும் உடைய புதல்வனைப் பெற்றனை.
” இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர் பயந்த செம்மலோர்….. ” ---- அகநானூறு.
பகைவரும் விரும்பும்
குற்றமற்ற அழகுடைய
மக்களைப் பெற்ற
சிறப்புடையவர்கள், இவ்வுலகத்தே
புகழொடு விளங்கித்
துறக்க வாழ்வினையும்
தப்பாது அடைவர்.
“ மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை… “ --- நான்மணிக்கடிகை.
தந்தையின் இயல்புகளை
மகனின் நடத்தை
வெளிப்படுத்தும் ; மனத்தில்
உள்ள எண்ணங்களை
முகமே வெளிப்படுத்தும்.
சிறப்பான பதிவு 👍
பதிலளிநீக்கு