திங்கள், 30 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 11

பரிபாடல் – அரிய செய்தி - 11
வையை வெள்ளம்  - பறை முழக்கம்
அகல்வயல் இளநெல் அரிகால் சூடு
தொகு புனல் பரந்தெனத் துடிபட……
மையோடக் கோவனார். பரிபா. 7 : 27 -28
வையை யாற்றில் பெருக்கெடுத்து வந்த பெரு வெள்ளம் ; ஒரு பக்கம் வயலில் விளைந்து முற்றிய இள நெல்லின் மீதும் – அறுத்து அடுக்கி வைத்திருந்த அரிகளின் மீதும் மிகுதியான வெள்ளம் பெருகிப் பரந்தது என்று சொல்லி அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு அறிவிப்பதற்குப் பறையை முழக்கினர். ( ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு ஊரினுள் வெள்ளம் புகுமானால் உடைப்பை அடைக்க பறை முழக்கி மக்களைத் திரட்டுவர். பண்டிருந்த இவ்வழக்கம் அண்மைக்காலம் வரை  தஞ்சை மாவட்டத்தில் இருந்தது. மேலும் வெள்ள நீர் வடியவும் பறை முழக்குவர் – காடு கரைகளை மக்கள் விழிப்புடன் காக்க வேண்டும் என்பதை உணர்த்துதலே பறை ஒலியின் கருத்துப் புலப்பாடாகும். பறை ஓசைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி கருத்துப் புலப்பாட்டுத் திறம் உண்டு- அவற்றை அறிந்து ஆய்க - மேலும் காண்க: 10 ஆம் பாடல் .) 

ஞாயிறு, 29 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி – 9 - 10

பரிபாடல் – அரிய செய்தி – 9 - 10
நீர் மாசுபடல்
மாறு மென் மலரும் தாரும் கோதையும்
வேறும் தூரும் காயும் கிழங்கும்
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து
வேறாகின்று இவ்விரி புனல் வரவு
நல்லந்துவனார். பரிபா. 6 : 46  – 50

மக்கள் சூடிக் கழித்த மலர்கள் மணம் நிறம் மாறுபட்டு மெல்லிய சருகுகளாயின; அவற்றையு ஆடவர் – மகளிர் அணிந்த மாலைகளையும் ; ஆற்றின் கரையிலுள்ள மரம் செடி கொடிகளினுடைய வேர்கள் தூர்கள் காய்கள் கிழங்குகள் ஆகியவற்றையும் கீழ்மக்கள்  பன்னாடையில் வடித்த கள்ளினைச் சிந்தியதால்  வையையின் நீர்  தூய்மை இழந்து மாறுபட்டு விட்டது. ( நீரின்றமையாது உலகு – வள்ளுவர் வாக்கையும் எண்ணுக; நீர் வளமன்றோ நாட்டின் வளம்-  (தமிழ்) உணராதார் உலகாள வந்தாரே! ) 30
பரிபாடல் – அரிய செய்தி - 10
தமிழ் மதுரை
தமிழ் வையைத் தண்ணம் புனல்
நல்லந்துவனார். பரிபா. 6 : 60 
 தமிழை உடைய வையை ஆற்றில் வந்த குளிர்ந்த புதுப் புனல்
( தமிழ் கெழு கூடல் – புறநா. 58 ; தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மதுரை – சிறுபாண்.) 

சனி, 28 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 8

பரிபாடல் – அரிய செய்தி - 8
வையை நீர் - புதுப் புனலாடல்
புது வெள்ளம் பாய்ந்துவரும் வையை ஆற்றில்
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும் யாறு வரலாறு
நல்லந்துவனார். பரிபா. 6 : 41 – 42
புதுப் புனலில் நீராட இளையோர் செல்ல அரிதாயும் ; மெலியோர் புகுந்து செல்ல இயலாதாயும் ; வலியர் புகுந்து நீராடுதலால் அவர்கள் அணிந்த மண நீரும் சந்தனம்முதலியவற்றின் குழம்பும் நறுமண எண்ணெயும் சூடிய பூக்களும் மணக்கும்படி வையை ஆற்றின் நீரோட்டம் நிகழும்.
விளக்கம்:
சாறு – மண நீர் ; பத்துவகைத் துவரினும் ஐந்து வகை விரையிலும் முப்பத்திருவகை ஓமாலிகையிலும் ஊறிய நீர்.
பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை ஓமா லிகையினும்
ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்தல் .. என்றார் இளங்கோவடிகள்.
பத்துத் துவர் – “ பூவந்தி திரிபலை புணர் கருங்காழி நாவலொடு நாற்பான் மரமே” என்பன.
ஐந்து விரை – கோட்டம் துருக்கம் தகரம் அகில் சந்தனம் என்பன
முப்பத்திரண்டு ஓமாலிகையாவன –
” இலவங்கம் பச்சிலை கச்சோலம் ஏலம்
குலவிய நாகனங் கொட்டம் – நிலவிய
நாகமதா வரிசி தக்கோலம் நன்னாரி
வேகமில் வெண்கோட்டம் மேவுசீர்
போகாத கத்தூரி வேரி யிலாமிச்சம் கண்டில்வெண்ணெய்
ஒத்தகடு நெல்லி உயர்தான்றி துத்தமொடு
வண்ணக் கச்சோலம் அரேணுக மாஞ்சியுடன்
எண்ணும் சயிலேக மின்புழுகு  - கண்ணுநறும்
புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம்
பின்னு தமாலம் பெருவகுளம் – பன்னும்
பதுமுகம் நுண்ணேலம் பைங்கொடு வேரி
கதிர்நகையா யோமாலிகை “ என்னுமிவை.
(இவற்றுக்கு அகராதியிலும் பொருள் காண்டல் அரிதாயிற்று – மூலிகை ஆய்வாளர்களிடத்துப் பொருள் அறிந்து கொள்க. ) 

வெள்ளி, 27 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 7

பரிபாடல் – அரிய செய்தி - 7
முருகன் பிறப்பு – ஆறு வேறு உருவானவன்
உமையொடு புணர்ந்து காம வதுவையுள்
அமையாப் புணர்ச்சி அமைய……
………………………………..
வடவயின் விளங்கு ஆல் உறை ஏழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோரும் அந்நிலை அயின்றனர்
…………………………………………….
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ்சுனைப்
பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்
பெரும் பெயர் முருக நிற்பயந்த ஞான்றே.
கடுவன் இளவெயினனார். பரிபா. 5 :  22 – 54
சிவபெருமான் வெள்ளி பொன் இரும்பு ஆகிய  முப்புரம் என்னும் மூன்று மதில்களை அழித்தவன். சிவன் உமையம்மையோடு புணர்ந்து காமத்தை நுகர்கின்ற  திருமண நாளில்  அமையாத  புணர்ச்சியை  இந்திரன் வேண்டுகோளை ஏற்று ஒருநாள் தவிர்த்தான்.  இந்திரன் உனது புணர்ச்சியால் தோன்றிய கருவினை அழ்ப்பாயாக என்று வேண்டி வரம் பெற்றான் சிவன் வாய்மை தவறாது தனது கருவின் உருவினைச் சிதைத்து பல துண்டுகளாக்கி  இந்திரன் கையில் கொடுத்தான். இந்திரனிடமிருந்து அக் கருத்துண்டுகள் ஏழு முனிவர்கள் ஏற்றுக்கொண்டு தம் தவ வலிமையால் இக்கரு ஆறுமுகத்தை உடைய மைந்தனாகி அமரர் படைக்குத் தலவனாகும் என் அறிந்து – இக்கருத்துண்டங்களைத் தம் மனைவியர் உட்கொண்டு தம் வயிற்றில் கருவை வளர்த்தால் கற்புடைமைக்குப் பொருந்தாது என்று எண்ணி – அவற்றை வேள்வித் தீயில் இட்டனர்.
 வேள்வியில் கிடைத்த அவிப் பாகத்துடன் சேர்ந்த எச்சிலாகிய அவற்றை வானின் வட திசையில் உறையும் ஏழு மகளிருள் கடவுட் கற்பினை உடைய சாலினி நீங்கலாக ஏனைய அறுவரும் அப்பொழுதே உண்டனர்.
தம் கணவர் விரும்பியதாலே அம்மகளிர் உண்டதால் குற்றமற்றவராகிய கார்த்திகை மகளிர் அறுவரும் உன்னைத் தங்கள் வயிற்றில்  கருஅரவாகத் தாங்கி இமயமலையில் சரவணப் பொய்கையில் தாமரைப் பாயலில் ஒருசேர உன்னைப் பெற்றெடுத்தனர்.
(பிறனுடைய கருவைத் தம் மனைவியர் வயிற்றில் தாங்குதல் கற்புடைமைக்கு இழுக்கு என்று கருதித் தீயில் இட்டனர்.)

வியாழன், 26 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி – 5 -6

பரிபாடல் – அரிய செய்தி – 5 -6
உலகத் தோற்றம்
மாநிலம் இயலா முதன்முறை அமையத்து
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே
கடுவன் இளவெயினனார். பரிபா. 3 : 91 – 94
ஆதி ஊழியின்கண் நீரினூடே பெரிய நிலம் தோன்றாத காலத்தே – அச்சந்தரும் அப் பெரிய வெள்ளத்தின் இடையே தோன்றியதும் –  வேதத்தை உரைக்கும் மகனாகிய பிரமனோடு மலர்ந்ததுமாகிய உந்தித் தாமரையை உடையோனே ! நினது நேமியே உலகிற்கு நிழலானது.

பரிபாடல் – அரிய செய்தி - 6
உலகத் தோற்றம்
புருவத்துக் கருவல் கந்தத்தால்
தாங்கி இவ்வுலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினொடு ஒக்கும்
கடுவன் இளவெயினனார். பரிபா. 4 :  22 – 24
பண்டை நாளிலே இந் நிலம் வெள்ளத்தில் மூழ்கியபொழுது – நீ பன்றியாகி வன்னையுடைய கழுத்தாலே தாங்கி – இவ்வுலகத்தை மேலே கொணர்ந்து திருத்திய செயல் – நிலத்தின் நடுவே நின்று அதனைத் தாங்கி- உயர்ந்த  பலரானும் புகழப்படும் மேருவின் செயலை ஒக்கும்.
( உலகத்தோற்றத்தின் முதல் நிலையாக இமயம் தோன்றியது ஈண்டுச் சுட்டப்படுதல் கொண்டு நிலத் தோற்றம் அறிவியல் ஆய்வு நோக்கில் அமைந்துள்ளது – ஆய்க.)

புதன், 25 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 4

பரிபாடல் – அரிய செய்தி - 4
எண்ணியல் …?
பாழ் எனக் கால் எனப் பாகு என ஒன்று என
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என
ஆறு என ஏழு என எட்டு எனத் தொண்டு என
 நால்வகை ஊழிஎன் நவிற்றும் சிறப்பினை
கடுவன் இளவெயினனார். பரிபா. 3 : 77 – 80

பாழ் - புருட தத்துவமும் ; கால்-  வானம் முதலிய ஐம்பெரு பூதங்களும் ; பாகு - வாக்கு முதலிய தொழில் கருவிகள் ஐந்தும்; ஒன்று - ஓசையும் ; இரண்டு - ஊறும் ; மூன்று - ஒளியும் ; நான்கு -  சுவையும் ; ஐந்து – நாற்றமும் ஆகிய ஐந்து புலன்களும்; ஆறு -  மெய் வாய் கண் மூக்கு செவி மனம் என்னும் அறிகருவிகள் ஆறும் ; ஏழு -  அகங்காரமும் எட்டு   புத்தியும்;  தொண்டு - மூலப் பகுதியும்;  ஆகிய இவ்வெண்களானே நால்வகை ஊழியின்கண்ணும் ஆராய்ந்து கூறப்படும் பெருமையினை உடையோய் !
ஒன்று – முதற் பூதம் வானம் – சிறப்புப் பண்பு – ஓசை
இரண்டாம் பூதம் – காற்று -             ”                  --  ஊறு
மூன்றாம் பூதம் – தீ                          ”        -  ஒளி
நான்காம் பூதம் – நீர்                        ”        - சுவை
ஐந்தாம் பூதம் -  நிலம்                      ”        - நாற்றம்
ஆறாம் பூதம் -  (ஐந்தொடு)மனம்              -ஞானேந்திரியம் 
ஏழு -  அகங்காரம்
எட்டு – புத்தி
ஒன்பது – மூலப்பகுதி
நால்வகை ஊழி – கிருத யுகம் ; திரேத யுகம் ; துவாபர யுகம் ; கலி யுகம்.
( பாழென… காலென… பாகென… என  இவற்றை இறைத் தத்துவங்களாக ஏற்றிக் கூறினும் தமிழர்தம்  எண்ணியல் தொடர்பான .. பாழ் – சுழி ; கால் : கால் பகுதி ;  பாகு (பகு) அரைப் பகுதி என எண்ணியல் அறிவியலுக்கு ஏற்றம் தருவதாகக் கொள்ளலாமா ? ஆய்க.) 

செவ்வாய், 24 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 3

பரிபாடல் – அரிய செய்தி - 3
உலகத் தோற்றம்
தீவளி விசும்பு நிலன் நீரைந்து
ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசில் எண்மரும் பதினொரு கபிலரும்
தாமா இருவரும் தருமனும் மடங்கலும்
மூவேழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின்வயிற் பரந்தவை உரைத்தோம்
கடுவன் இளவெயினனார். பரிபா. 3 : 4 – 10
நெருப்பும் காற்றும் வானமும் நிலமும் நீருமாகிய ஐம்பெரும் பூதங்களும் ஞாயிறும் திங்களும் வேள்வி முதல்வனும்  - கோள்களில் நீங்கிய செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்னும் ஐவரும் – அசுரர்களும் - விதியின் மக்களாகிய ஆதித்தர் பன்னிருவரும் – பதினோர் உருத்திரர்களும் – அச்சுவனி தேவர் இருவரும் – இயமனும் அவன் ஏவலனாகிய கூற்றுவனும் – முத்திரத்து இருபத்தோர் உலகங்களும் – அவ்வுலகினுள் வாழும் உயிர்க் கூட்டங்களும் ஆகி விரிந்தவனே ! 

விளக்கம்:
அவ்விறைவனிடமிருந்து தோன்றிய உலகமாவது -  இறைவன் வடிவங்களாகத் திகழும் எண் வகை வடிவங்களாவன - வானம் காற்று தீ நீர் நிலம் என்னும் பூதங்கள் ஐந்தும் ;  ஞாயிறு திங்கள் வேள்விமுதல்வன் ( இயமானன்) ஆகிய மூன்றும்  இவ்வெட்டினையும் “ அட்டமூர்த்தங்கள்” எனப. கோள்கள் ஒன்பதனுள் ஞாயிறும் திங்களும் எண்வகை வடிவங்களுள் அடங்குதலானும் – இராகு கேதுக்கள் காணப்படாதன ஆகலானும் எஞ்சியவற்றைப் பெயர் கூறாது ஐவரும் எனத் தொகையாகக் கூறினார். ஐவர் என்றது செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்னும் கோள்கள் ஐந்தினையும் என்க.
(இதன்கண் உள்ள புராணக் கதைகளை மீட்டுருவாக்கி  அறிவியல் உண்மைகளை  அறியுமாறு ஆய்க.) 

திங்கள், 23 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 2

பரிபாடல் – அரிய செய்தி - 2
உலகத் தோற்றம் - ஒடுக்கம்
தொன்முறை இயற்கையின் மதியொ……….
…………………………   மரபிற் றாக
பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊமூழ் செல்லக்
கருவளர் வானத்து இசையிற் றோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்துவளி கிளர்ந்த ஊமூ மூழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
 தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடுயர்பு ஈண்டு அவற்றிற்கும்
 உள்ளி டாகிய இருநிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலுமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி யீட்டம் கழிப்பிய வழிமுறை
கீரந்தையார் . பரிபா. 2 : 1 – 15
ஒன்றற்கொன்று மாறிவரும் இயல்புடைய திங்களும் ஞாயிறும் கெட்டு – விண்ணுலகமும் வெறும் பாழாகி விடப் பின்னர் – வானமும் கெட்டு இல்லையாகச் சிதைந்து ஒடுங்கிய ஊழிக் காலங்கள் பற்பல – முறைமுறையாகக் கழிந்தன –
அவ்வூழிகளின் பின்னர் – அப்பாழினின்றும் வானம் தோன்றிய முதற் பூதத்தின் ஊழியும் – அவ்வானத்தினின்றும் காற்றுத் தோன்றிக் கிளர்ந்து வீசி நிற்கும் இரண்டாம் பூதத்தின் ஊழியும் – அந்தக் காற்றினின்றும் தீத் தோன்றிச் சுடர் வீசிய மூன்றாம் ஊழியும் – அந்தத் தீயுனின்றும் பனியும் மழையும் தோன்றிப் பெய்த நான்காம் பூதத்தின் ஊழியும் –
 ஒடுங்கும் காலத்தே நீரினுள் முழுகி ஒடுங்கிய பெரிய நிலமாகிய ஐந்தாம் பூதம் மீண்டும் அவ்வெள்ளத்தினூடே பீடு பெற்றுத் திரண்டு செறிந்த ஐந்தாம் ஊழியும் – பற்பல எண்ணிறந்தனவாகக் கழிந்த பின்னர் – இந்நிலத்தின் கண்ணே உயிர்கள் தோன்றும் பொருட்டுத் திருமாலே நீ பன்றி உருவம் கொண்டு நீரினுள் முழுகிக் கிடந்த நிலத்தினை மேலே கொணர்ந்தாய்.
விளக்கம்:
 இப்பாடலின்  முதல் நான்கு அடிகளில் உலகத்தின் ஒடுக்க முறை கூறப்படுகின்றது. பாடலில் அழிந்து போன சொற்றொடர் “ ஞாயிறும் கெடுதலால் அழகிழந்து “ என்னும் பொருளுடையது என்பார் பரிமேலழகர்.
 தொல் முறை – தொன்றுதொட்டு நிகழும் முறைமை . உலகம் ஒடுங்குங்கால் – நிலம் நீரினுள் ஒடுங்க ; நீர் தீயினுள் ஒடுங்க ; தீ காற்றினுள் ஒடுங்க ; காற்று வானத்தில் ஒடுங்க ;  வானம் பிரகிருதியில்
ஒடுங்க இம்முறையே ஊழிகள் பலவும் கழிய என்பார்.
 உலகம் ஒடுங்குங்கால் திங்கள் மண்டிலமும் ஞாயிற்று மண்டிலமும் ஒளி இழந்து துகளாகி வான வெளியிலே சிதறிப் போக - நிலம் முதலிய உலகங்கள் பின்னர்ச் சத்தி கெட்டு நொருங்கித் துகள்பட்டு ஒழியும்.
“ Antarctica’s  ice to melt if all fossil fuel is burned “ – A subsequent sea level rise of 200 feet will see London. Paris. NewYork.Hong Kong and Tokyo being submerged. ….. Dr. Caldeira said “ To melt all of Antarctica I thought it would take something like 10000 years.” – Times of India 13/9/15 – P 12.

(இவ்வறிவியல் உண்மையால் நீரால் உலகம் அழியும் என்பதும் – அப்படி அழிந்தும் இருக்கிறது என்பதும் – இத்தகய அழிவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் என்பதும் –அக்கால அளவைத் தொல் ஊழி – பல் ஊழி எனப் பல்லாயிரம் ஆண்டுகளைக் கொண்ட காலத்தை ஊழி என்று சுட்டியதும் தமிழ்ச் சான்றோரின் தொன்மைக்கும் புலமைக்கும் சான்று - உலகத் தோற்றம் – ஒடுக்கம் குறித்த செய்திகளை இன்றைய  அறிவியலோடு ஒப்பிட்டு ஆய்க. ) 

ஞாயிறு, 22 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 1

பரிபாடல் – அரிய செய்திகள்
உரையாசிரியர் : பெருமழைப் புலவர்
திரு பொ. வே. சோமசுந்தரனார்
”ஓங்கு பரிபாடல்” – இது தமிழ் மொழிக்கே சிறப்புரிமையாகப் பெற்ற அகப் பொருள் – புறப் பொருள் ஆகிய இருபொருள்களையும் தழுவிப் புலமைச் சான்றோரால் ஆக்கப்பட்ட செவ்விய நூலாகும். இந்நூல் முழுமுதற் கடவுளராகிய திருமாலையும் செவ்வேளாகிய முருகப்பெருமானையும் உலகு புரந்தூட்டும் உயரிய ஒழுகலாற்றைக் கொண்ட வையைப் பேரியாற்றையும் வாழ்த்துதலாக உட்பொருள் கொண்டு – இடையிடையே நம் தமிழகப் பண்பு அன்பு காதல் வீரம் அறம் காவிய ஓவியத் திறங்களை விளக்கிச் செல்லும் பெருமை மிக்கது. அந் நூற்பாடல்களுள் நம் தமிழ் மாநிலத்துச் சிதைந்தன போக எஞ்சிய ( 22 ) பாடல்களே இன்றுகாறும் நம்மிடையே நின்று நிலவுகின்றன.
பரிபாடல் – அரிய செய்தி     - 1
திருமால் மகன்கள்
பொருவேம் என்றவர் மதங்கபக் கடந்து
செருமேம் பட்ட செயிர்தீர் அண்ணல்
இருவர் தாதை இலங்குபூண் மாஅல்
………………………………… 1:  26 -28
 அண்ணலே ! நின்னொடு பகைத் தெழுந்தவருடைய வலி கெட வென்று போரிடத்தே மேம்பாடுடைய தலைவனாக விளங்கி நின்றனை ; நீ காமனும் சாமனுமாகிய இருவருக்கும் தந்தை யாவாய்………


சனி, 21 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து –அரிய செய்திகள் முற்றின. பரிபாடல் – அரிய செய்திகள் … தொடரும்….

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 41
ஏராளர் பெறும் திருமணிகள்
பல் விதை உழவின் சில் ஏராளர்
……………………………………..
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
 அரிசில் கிழார் . பதிற். 76  :  11  - 14
உழவர்களுக்கு  வயல்களில் அழகிய மணிகள் கிடைக்கின்றன. மழை பெய்தலானே ஏராளர் உழுது விளைத்துக் கோடலேயன்றி உழுத இடங்கள் தோறும் ஒளியையுடைய திருமணிகளை எடுத்துக் கொள்ளும் இடத்தை உடைய ஊர்கள்.சேர நாட்டு மண் வளம் குறித்து ஆய்க.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 42

இரும்பொறை  இருக்கை
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர்
அரசு உவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய
அணங்குடை மரபின் கட்டில் மேல் இருந்து
அரிசில் கிழார் . பதிற். 79  :  12  - 14

வெல்லும் போரைச் செய்கின்ற அரசருடைய முரசின் கண்ணைக் கிழித்து – அவருடைய பட்டத்து யானை வருத்தத்தாற் கதறும்படி அதனுடைய கொம்பை வெட்டி – தெய்வத் தன்மையுடைய கட்டில் செய்து இருந்தனை…
பதிகம்
அருந் திரள் ஒள் இசைப் பெருஞ் சேரல் இரும் பொறையை
மறு இல் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப் பாட்டு.
செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு வேளாவிக் கோமான் பதுமன் என்பானின் மகள் பெற்ற மகன் பெருஞ் சேரல் இரும்பொறை.
தகடூர்  எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை பதினேழு ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான். 22/11/15
பதிற்றுப்பத்து –அரிய செய்திகள் முற்றின.

பரிபாடல் – அரிய செய்திகள் … தொடரும்….

வெள்ளி, 20 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 39 -40

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 39 -40
போர் ஒழிய வேண்டுவல்
கொல்லிப் பொருந கொடித் தேர்ப் பொறைய நின்
வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவு இறந்தன எனப் பல நாள்
யான் சென்று உரைப்பவும் தேறார் பிறரும்
 சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல் என
ஆங்கும் மதி மருளக் காண்குவல்
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே
அரிசில் கிழார் . பதிற். 73   :  15  - 21

கொல்லி மலைக்குத் தலைவ ! கொடியணிந்த தேரை உடைய சேரனே ! நின்னுடைய செல்வமும் வீரமும் கொடையும் மக்களின் அளவைக் கடந்தவையென்று தாமே அறிய வேண்டியவராக இருந்தும் – யான் பல நாள் சென்று நின் பகைவரிடத்துச் சொல்லவும்  - அவர் அதனைத் தெளிய மாட்டாராயினர் – பிற சான்றோர் கூறக் கொள்வாரோ எனின் அச்சான்றோர் கூறவும் பகைவரது அறிவு மயங்கக் கண்டேன் – யான் எவ்வாறு அவர் மனம் தெளியும் வண்ணம் உரைப்பேன் என்று வருந்துவேன் – இதனை அறிந்து அவர்பால்  நீ அருள் செய்தல் வேண்டும்.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 40
ஒழுக்கமுடையோர் பேறு பெறுவர்
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு …
அரிசில் கிழார் . பதிற். 73   :  25  - 26
பிறர்க்குக் கொடுத்தலும் மாட்சிமையுடைய குணங்களும் செல்வமும் பிள்ளைப் பேறும் தம்மால் வழிபடப் பெறும் தெய்வமும்  மற்ற எல்லா நற்பேறுகளும் தவமுடையோர்க்கு உரியன.

வியாழன், 19 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 37 - 38

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 37 - 38
எட்டாம் பத்து – அரிசில் கிழார்
உறை – ஒற - Hora – Hour
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவிந்தாங்கு
அரிசில் கிழார் . பதிற். 71 : 3 - 5
வயலில் விளைந்த நெல்லை மகளிர் அறுத்து -  மிக நெருங்கிய காடாவிடும் களமாகிய போரடிக்கும் நெற்களத்தில் சேர்ப்பர். அவற்றைப் பருத்த எருமைகளால் மிதிக்கச் செய்து செந்நெல்லை மரக்காலால் அளத்தற்  பொருட்டுக் குவித்து வைப்பர்.  (  அம்பணம் – மரக்கால் ; அம்பண அளவை உறை – அறுபது மரக்கால் – ஓர் உறை ; அக் குவியலைப் பொலி என்பர். இந்த அறுபது அலகு கொண்ட உறை – திரிந்து ஒற – ஓறா – ஹவர்  என்று மணியைக் குறித்ததாகப்  புள்ளி என்னும் என் ஆய்வுக் கட்டுரையில் சுட்டியுள்ளேன் - கண்டு தெளிக. )
கை விடுப்பு – தம் கையினின்று பிறருக்கு விடுத்தல் – கைமாற்று என்பர். பசு தரும் பயன் பெற்று வாழ்பவர் ஆயர்-  அவர்களின் தலைவன் கழுவுள் – ஊர்- காமூர் – இது பதினான்கு குடி வேளிரால் அளிக்கப்பட்டதென்றும் கூறுவர்-அகநா. 135.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 38
ஆழிப் பேரலை - சுனாமி
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி
உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம்
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து
அரிசில் கிழார் . பதிற். 72  : 8  - 11
 எல்லா உயிர்களும் இறக்கின்ற ஊழிக் காலத்தின் இறுதி புகுகின்ற போது – நிலவுலகின் பாரம் நீங்க – நீரானது எங்கும் பரவும்படி வந்து நெருங்கும் – அந்நீரில் மோதும் அலைகள் விரைந்து வீசும் – இவ்வாறு உயிர்களைக் கொல்வதற்குச் சினந்து எழுகின்ற வெள்ளம் – எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாத திசைகளில் இருளொடு சேர்ந்து பரவும்.

( ஊழியின் இறுதியில் உலகமெலாம் இருள் பரவுமெனவும் கடல் பொங்கி எழுந்து நீரால் உலகத்தையே மூடுமெனவும் பின்னர் பன்னிரு சூரியர்களும் வடவைத் தீயும் கிளர்ந்தெழுந்து இருளப் போக்கி நீரையெல்லாம் வற்றச் செய்யுமெனவும்  நூல்கள் கூறும்.ஊழி பற்றிய குறிப்பு பரிபா.6; பதிற். 28. துஞ்சல் உறூஉம் – இறந்துபடுதலைப் பொருந்தும் ; பகல் – ஊழிக்காலம் ; ஒராஅ – நீங்க; ஞெமர – பரவும்படி .)   

புதன், 18 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 35 -36

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 35 -36
மக்கட் பேறு
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்
 கபிலர். பதிற். 70  : 20 - 22
 பெரியோரிடத்து வணங்கிய மென்மையும் பகைவர்க்கு வணங்காத ஆண்மையும் உடைய -  இளந்துணையாகிய புதல்வர்களைப் பெற்றமையால் – நின் குலத்து முன்னோர்களான பிதிரர்களைக் காப்பாற்றி – இல்லறத்தார்க்கு உரிய பழைய கடன்களைக் செய்து முடித்த – வெல்லும் போரைச் செய்யும் தலைவனே. ( பிள்ளைகள்  பிதிரர்க் கடன் செய்வதன் மூலம் முன்னோரைக் காத்தலால்)19/11/15

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 36
பதிகம்
ஓத்திர நெல்
 ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனன் உறப் பெற்று அவற்கு
ஓத்திர நெல்லின் ஓகந்தூர் ஈத்து…
பல யாகங்களையும் – பெரிய அறச் செயல்களையும் செய்து முடித்தவன் சேரன் வாழியாதன்.  கரிய நிறமுடைய திருமாலைத் தன் மனத்துப் பொருந்தப் பெற்றவன். அத்தெய்வத்திற்கு ஓத்திர நெல் என்னும் ஒருவகை நெல் விளையும் ஓகந்தூர் என்னும் ஊரினைத் தேவதானமாகக் கொடுத்தவன். (  ஓத்திர நெல் – இராசா அன்னம் : இந்நெல் ஒரு பறவையின் பெயர் பெற்றதாம்; இதனை மின்மினி நெல் என்றும் கூறுவர்.)
மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடினார் பத்துப் பாட்டு
அந்துவஞ்சேரலுக்கும் – பெருந்தேவிக்கும் பிறந்தவன்  செல்வக் கடுங்கோ வாழியாதன். இவன் இருபதாண்டு ஆட்சி வீற்றிருந்தான். 

செவ்வாய், 17 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 33 - 34

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 33 - 34
கொடுமணம்
கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
 பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர்
கடன் அறி மரபின் கைவல் பாண
தெண் கடல் முத்தொடு நன் கலம் பெருகுவை
கபிலர். பதிற். 67  : 1 - 4
பாணனே ! கொடுமணம் என்னும் ஊரிலே உண்டான நல்ல அணிகலன்களையும் பந்தர் என்னும் பெயருடைய புகழ் வாய்ந்த பழைய ஊரிடத்தேயுள்ள தெளிந்த கடலில் முத்துக்களையும் பெறுவாய். ( கொடுமணம் தொழில்மாட்சிமைப்பட்ட நல்ல அணிகலன்களுக்கும்  பந்தர் முத்துக்களுக்கும் பெயர் பெற்றன.)
யூபம் – தலையற்ற முண்டம் ( போர்க்களத்தில் வெட்டுண்டு தலையற்று வீழ்ந்து துடிக்கும் பிணம்.)   (ஊனம் – இறைச்சி ; பாசவர் – இறச்சி விற்பார்.)
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 34
உத்தரகுரு – வட புலம்
நாமம் அறியா ஏம வாழ்க்கை
வடபுல வாழ்நரின் பெரிது அமர்ந்து அல்கலும்
இன் நகை மேய பல் உறை பெறுபகொல்
கபிலர். பதிற். 68  : 12  - 14
துன்பத்தால் வரும் அச்சத்தை அறியாத – இன்பமேயான வாழ்வை உடைய வடக்கேயுள்ள நிலமாகிய உத்தரகுருவின்கண் வாழ்வாரைப் போலப் பெரிதும் விரும்பி நாள்தோறும் இனிய இன்பம் பொருந்திய பல நாட்களைப் பெறுவார்களோ…. பெறார் என்பதாம். ( போக பூமி  - அறத் தானாகிய தலைப்படு தானம் செய்தோரே உத்தரகுருவை எய்துவர். “ அத்தகுதிருவின் அருந்தவம் முடித்தோர் . உத்தரகுருவின் ” –சிலம்பு. 2: 9-10 )  (நாமம் – அச்சம் ; ஏமம் – இன்பம் ) 

திங்கள், 16 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 31 - 32

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 31 - 32
நீர் வார்த்துக் கொடுத்தல்
உரைசால்  வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அருங் கலம் ஏற்ப நீர் பட்டு
இருஞ் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து
கபிலர். பதிற். 64  : 4 - 6
வேதத்தை ஓதி வேள்வி முத்த அந்தணர் – அரசனால் அளிக்கப்படும் பெறுதற்கரிய அணிகலன்களை ஏற்பர்.சேரன் அந்தணர்களுக்கு பொருள்கள்( தானம்) வழங்கும்போது நீர் வார்த்துக் கொடுப்பதால்  மணல் மலிந்த முற்றம்  பெரிய சேறாகிய இடமாயிற்று.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 32
பாலைப் பண்
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்ந்தாங்கு
சேறு செய் மாரியின் அளிக்கும் நின்
சாறு படு திருவின் நனை மகிழானே
கபிலர். பதிற். 65  : 14 - 17

இனிய நரம்புகளை உடைய பாலை யாழை இசைப்பதில் வல்லோன் பண்கள் எல்லாவற்றுள்ளும் துன்பத்தைச் செய்யும் உறுப்பையுடைய பாலைப் பண்களை மாறி மாறி வாசித்தாற் போலச் சேற்றைச் செய்கின்ற மழையைப் போல அளிக்கும் விழாவின் – செல்வத்தைப் போன்ற மதுவால் மகிழ்ச்சியயுடைய ஓலக்க இருப்பின் கண்ணே. ( வெவ்வேறு சுவை உடைய மதுவிற்கு எல்லாப் பண்களிலும் உள்ள வருத்தத்தைச் செய்யும் சுவையுடைய வெவ்வேறு பாலைப் பண்கள் உவமை. நனை – கள் . மதுவிற்கெல்லாம் பொதுப் பெயர்.) 

ஞாயிறு, 15 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 30 - 31

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 30 - 31
ஏழாம் பத்து – கபிலர்
பகுத்தறிவு உடையோன்
பொன்னின் அன்ன பூவின் சிறியிலை
புன்கால் உன்னத்துப் பகைவன் எம் கோ
கபிலர். பதிற். 61 : 5 -6
     பொன் போன்ற நிறமுடைய பூவினையும் சிறிய இலைகளையும் பொலிவற்ற அடிமரத்தினையும் உடைய உன்ன மரத்துக்குப் பகைவனாகிய எம்முடைய அரசன் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
உன்னத்துப் பகைவன் – நிமித்தம் (சகுனம்) பாராது பகை வென்றவன்.
 உன்னம் –  உன்னமரம் - நிமித்தம் பார்க்கும் மரம் ; தன் வேந்தருக்கு வெற்றி உண்டாகுமாயின் செழித்தும் ; தோல்வி உண்டாகும் காலமாயின் கரிந்தும் காட்டும் இயல்புடையது என்பது நம்பிக்கை.
பகைவரொடு போர் செய்யக் கருதி நிமித்தம் பார்த்தவழி உன்னம் கரிந்து காட்டியது அதனால் தனக்கு வெற்றியில்லை எனக் கருதித் தவிர்ந்திராது போர்மேற் சென்று பகைவரை வென்றான்; நிமித்தத்தைப் பொய்யாக்கியவன் ஆதலால் “ உன்னத்துப் பகைவன் “ என்றார்.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 31
வடவைத் தீ  - முகாக்கனி
 …………………. பசும் பிசிர் ஒள் அழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந் திறல்
கபிலர். பதிற். 62 : 5 - 8
 பசிய தீப் பொறிகளை உடைய ஒளி பொருந்திய நெருப்பு ( ஊழியின் இறுதிக் காலத்தில்) சூரியன் பல உருவம் கொண்டது போன்ற மாயத்தோடு ஒளி திகழப் பெற்று உயிர்களுக்குப் பொறுத்தற்கு இயலாத மயக்கத்தைச் செய்தலோடு இலியைச் செய்து திரிகின்ற ஊழித்தீயின் தன்மையைக் கொள்ளுதற்குக் காரணமான கடிய திறலால்……..
  மடங்கல் - வடவைத் தீ ; கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரைகடந்து உலகை அழிக்காதபடி அதன உறிஞ்சி வற்றச் செய்வதொரு தீ – பெண் குதிரையின் தலை வடிவில் கடலின்கண் உள்ளதென்று கூறுவர்.  
( இக்கூற்றை அறிவியல் நோக்கில்  ஆய்க.) 

சனி, 14 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 28 - 29

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 28 - 29
மாசி மாதம்
பகல் நீடு ஆகாது இரவுப் பொழுது பெருகி
மாசி நின்ற மா கூர் திங்கள்
பனிச் சுரம் படரும் பாண்மகன் …….
 காக்கைபாடினியார் நச்செள்ளையார். பதிற்.59 : 1 - 3
பகல் பொழுது நீளாது  இரவுப் பொழுது மிக்கு விளங்குகின்ற மாசி மாதத் தன்மை நிலைபெற – மாக்கள் எல்லாம் குளிரால் உடம்பு நடுங்குகின்ற மாதத்தில் பனி பெய்யும் அரிய வழியிலே செல்லும் பாணன்…
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 29
மரம் படு தீங்கனி
மிஞிறு புறம் மூசவும் தீஞ் சுவை திரியாது
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி
காக்கைபாடினியார் நச்செள்ளையார். பதிற். 60  : 4 - 5

நறு மணத்தால் வண்டுகள் புறத்தே மொய்க்கவும் – தம் இனிய சுவை மாறுபடாத – அரிவாளும் பிளத்தற்கு இயலாத மரங்களில் விளைந்த அழகிய சாறு நிரம்பிய – முட்டை போல் வடிவான முதிர்ந்த இனிய பழங்கள் …. மரம் படு தீங்கனி – பலாப் பழம் என்பர். உரையாசிரியர் உ.வே. சா. அவர்கள் விளாம்பழம் என்பார். ஆசிரியர் அருளம்பலவனார் அவர்கள்  சுவைக் காய் நெல்லி என்பார்.( வண்டு மொய்த்தலால் – மரம் படு தீங்கனி – பலாப்பழம் எனக் கொள்ளலாம் – ஆய்க.)
பதிகம்
ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.
குட நாட்டின் தலைவனாகிய நெடுஞ் சேரலாதற்கு வேளாவிக் கோமான் மகளாகிய தேவி பெற்ற மகன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன். இவன் முப்பத்தெட்டு ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 26 - 27

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 26 - 27
ஆறாம் பத்து – காக்கைபாடினியார் நச்செள்ளையார்
இறக்குமதி
இன் இசைப் புணரி இரங்கும் பெளவத்து
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்
கமழும் தாழைக் கானல் அம் பெருந்துறை
தண் கடற் படப்பை நல் நாட்டுப் பொருந.
காக்கைபாடினியார் நச்செள்ளையார். பதிற்.55 : 3 - 6
 இனிய ஓசை உடைய  அலைகள் ஒலிக்கும் கடல் வாயிலாக வந்த நல்ல ஆபரணங்களாகிய செல்வம் தங்கும் பண்டகசாலைகளை உடையதும் மணம் வீசுகின்ற தாழை மரங்கள் பொருந்திய கடற்கரைச் சோலைகள்  - அழகிய பெரிய துறைகள் உடையதுமாகிய குளிர்ந்த கடல் பக்கத்தே விளங்கும் நல்ல நாட்டிற்கு உரிய ஒப்பற்றவனே( ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்.)
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 27
வஞ்சினம்
 இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை
மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது
உண்குவம் அல்லேம் புகா எனக் கூறி
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
 காக்கைபாடினியார் நச்செள்ளையார். பதிற்.58 : 5 - 8
இன்று இனிதாக உண்டோம் – நாளை அரைத்த  மண்ணால் கட்டப்பட்ட இஞ்சியை உடைய மதிலைக் கடந்தால் அல்லாமல் உணவை உண்ண மாட்டோம்.என்று வஞ்சினம் கூறித் தாம் சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ற வினை செய்யக் கருதிய வீரர்களை உடைய பெருமை உடையவன் வானவரம்பன்.