திங்கள், 29 பிப்ரவரி, 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி முன்னுரை

 முல்லைப்பாட்டு – அரிய செய்தி
முன்னுரை
பத்துப்பாட்டில் ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டு அகம் சார்ந்த நூலாகும். 103 அடிகளைக் கொண்டிலங்கும் இப்பாட்டு பத்துப்பாட்டுள் மிகச் சிறியதாகும். இதனைப் பாடியவர் காவிரிப்பூம் பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். சங்க இலக்கியத் தொகை நூல்களில் இவர் பாடியதாக வேறு எந்தப்பாடலும்  காணப்படவில்லை.
 புலவர் நப்பூதனார் ’ நல்லொழுக்கமுடன் வல்லென்ற இயல்பும், அறிவாழமும் மிக்க மனவமைதியும் உடையவரென்பது குறிப்பாக அறியப்படும்’ என்று ‘முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை’ யில் மறைமலையடிகள் குரிப்பிடுவார்.
முல்லைப்பாட்டு,  முல்லைத்திணையின் இயல்புகளை மட்டுமல்லாமல். ‘ வஞ்சிதானே முல்லையது புறனே’ (தொல். புறத்.61) எனத் தொல்காப்பியம் கூறுவதற்கேற்ப, வஞ்சித்திணை இயல்புகளையும் இயைத்துப் பாடுகின்றது.
’ முல்லை சான்ற கற்பு’ – என்று கற்புடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் இத்திணையின் உரிப்பொருள் “ இருத்தல்” ஆகும். அஃதாவது இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆகிய முல்லை உரிப்பொருளாம்.  போர், கல்வி, பொருள்தேடல் ஆகிய காரணங்களால் பிரிந்துசென்ற தலைவன் கார்காலத் தொடக்கத்திற்குள் வந்து விடுவதாகக் கூறிப் பிரிவான், அவ்வாறு அவன் திரும்பி வரும்வரை  ஆற்றியிருத்தல் தலைவியின் கடமையாகும் . இதுவே முல்லத்திணை என்று சிறப்பித்துப் பேசப்படுகின்றது. 

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 21

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 21
பொற்றாமரை
ஆடுவண்டு இமிரா அழலவிர் தாமரை
நீடுஇரும் பித்தை பொலியச் சூட்டி
உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப்
பகற்பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு
புனைஇருள் கதுப்பகம் பொலிய பொன்னின்
தொடைஅமை மாலை விறலியர் மலைய
                       கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 481 – 486
இளந்திரையன் கொடை :  இருண்ட வானத்தின்கண் திங்கள் போன்று, வண்டுகள் மொய்க்காத , தீயிடத்தே கிடந்து மலர்ந்த வெண் பொற்றாமரையை, நீண்ட கரிய மயிரிடத்தே அழகு பெறச் சூட்டி, வலிய கடலின் நீரை முகந்து கொண்ட முகிலினின்றும் பகற்காலத்தே பெய்யும் மழைத்துளி ஊடே மின்னல் ஓடினாற் போன்று, ஒப்பனை செய்யப்பட்ட கூந்தல் அழகுறும்படி பொன்னாற் செய்து தொடுத்தல் அமைந்த மாலையை விறலியர் சூடத் தருவான் மன்னன்.
பண்டைய நாளில், தம்மை நாடிவந்த பாணர்க்குப் பொற்றாமரை மலரையும், விறலியர்க்குப் பொன் மாலையையும் பரிசிலாகத் தருவது மன்னர்களது வழக்கம். மேலும் காண்க:
“ அழல் புரிந்த அடர்த் தாமரை
ஐதடர்ந்த நூற்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல்
பாறுமயில் இருந்தலை பொலியச் சூடிப்
பாண்முற் றுகநின் நாண்மகிழ் இருக்கை – (புறநா.29: 1-5)
( மங்குல் – இருள்திசை ; அழலவிர் தாமரை – தீயில் புனைந்த பொற்றாமரை ; நீடு இரும்பித்தை – நீண்ட கரிய மயிர் ;  உரவுக்கடல் – வலிய கடல் ; விறலியர் – விறல்பட ஆடும் மகளிர்.)

சனி, 27 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 20

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 20
நில்லா உலகத்து….
நாவலம் தண்பொழில் வீவுஇன்று விளங்க
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
அந்நிலை அணுகல் வேண்டி ……..
  கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 :  465 -467
நாவலாற் பெயர் பெற்ற அழகு நிறைந்த குளிர்ந்த இவ்வுலகமெல்லாம் கேடின்றி விளங்கும்படி, இவ்வுலகத்தே நிலைத்து நிற்கும் பேறு உடையது புகழ் ஒன்றே என்பதனை ஆராய்ந்து அறிந்து , நீ நிற்கின்ற சேய்த்தாய நிலையினின்றும் தன்னை அணுகுதற்கு விரும்பியழைத்து….
காண்க: ‘ ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
                பொன்றாது நிற்பதுஒன்று இல். (குறள்.233)
ஆடை : ‘ ஆவியன்ன அவிர்நூற் கலிங்கம்’ என நுட்பமாக நெய்யப்பட்ட ஆடையைக் குறித்தார் புலவர். ‘ புகைவிரிந்தன்ன பொங்கு துகில்’ (சீவக.67) – ’ஆவியன்ன பூந்துகில்’ (சீவக. 1094) – ‘ ஆவிநுண் துகில் அணிகலம்’ – (பெருங். 40: 228) என்றும் பிற நூல்களில் வருதலையும் காண்க. 

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 19

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 19
கலங்கரை விளக்கம்
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இஅவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடு கலம் கரையும்
 துறை பிறக்கு ஒழியப் போகி..
   கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 :  346 -351
வானம் விழாதபடி முட்டுக்காலாக ஊன்றிவைத்த ஒரு அற்றுக்கோல் போல விண்ணைத் தீண்டும்படி உயர்ந்து, ஏணி சாத்தியும் ஏறுதற்கு அரிய தன்மையினையுடையதாய், வேயாது, சாந்து பூசப்பட்ட மாடத்திடத்தே, இரவு நேரத்தில் கொளுத்திய விளக்குச் சுடர் , திசைத் தப்பிப் பெருங்கடற்பரப்பில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும் நீப்பாயல் (மாமல்லபுரம்) துறைமுகம்..
( கறயானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை அதன் மதலை (விழுதுகள்) தாங்கி நிற்பது போலக் கலங்கரை விளக்கம் வானம் ஊன்றிய மதலை போல விளங்குகிறது. மதலை – முட்டுக்கால் ; மாட்டிய – கொளுத்திய ; வேயா மாடம் – கூரை வேயாது சாந்து பூசப்பட்ட ;  இலங்கு -  விளங்கித் தோன்றுகின்ற ; உரவுநீர் அழுவம் -  பெரு நீர்ப்பரப்பு, கடல்.) 

வியாழன், 25 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 18

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 18
 கள் அடு மகளிர்
கள் விற்கும் இடம் என்பதைக் குறிக்க  அடையாளக் கொடி (பச்சைக்கொடி)  பறக்கவிடுவதும் ; கள்ளை வீட்டிலேயே  பெண்கள் சமைத்தலும் ; ஆண் பன்றிக்கு அரிசி மாவு கொடுத்துக் கொழுக்கச் செய்து தசையை உண்ணுதலும் அக்காலத்தில் இருந்தமையை அறியலாம். தோப்பி – நெல்லாற் சமைத்த கள்.
……            …..             …… முட்டுஇல்
பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயில்
செம்பூத் தூஉய செதுக்குடை முன்றில்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில்நீர் வழிந்த குழம்பின்
ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
பல்மயிர் பிணவொடு பாயம் போகாது
               கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 :  337 - 343

 “முட்டில்”  கள்ளுக்கடையில்  கள் உண்பதற்காக பலர் புகினும் கள் இல்லை என்னாது தட்டுப்பாடில்லாமல்  வழங்கும் வாயில் – பச்சை நிறக்கொடிகள் அசைகின்ற , செதுக்கி அழகுடன் அமைந்த புல் படர்ந்த செவ்விய மலர்கள் தூவப்பட்ட முற்றத்தினைக் கொண்ட இடம் , கள்ளுண்ணப் பலரும் புகும் வாயில்  -  கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டிலைக் கழுவியதனால் வடிந்த நீர் குழம்பி ஈரமாகிய சேற்றினை அளைந்து கொண்டிருக்கும் கரிய பல குட்டிகளையுடைய  பெண் பன்றிகள் – அவற்றுடன் புணர்ச்சியை விரும்பிப் போகாதபடி பாதுகாத்து – நெல்லை இடித்து மாவாக்கி அதை உணவாக்கிக் கொடுத்துப் பல நாளும் குழியியிலே நிறுத்தி வளர்த்த குரிய காலையுடைய ஆண் பன்றியின் கொழுவிய நிணமுடைய தசையுடன் – களிப்பு மிக்க கள்ளையும் முட்டுப்பாடில்லாமல் பெறுவீர்.
( பச்சைக் கொடி – கள்ளுக்கடையின் அடையாளம் –’ கட்கொடி நுடங்கும் ஆவணம்’ , பதிற். ‘  நெடுங் கொடி நுடங்கு நறவுமலி மறுவில்’ (அகம்), ’கள்ளின் களி நவில் கொடி ‘(மதுரைக்.)’ நறவுநொடைக் கொடியொடு’ (பட்டினப்.) எனவும் வருதலைக் காண்க. நுடங்க – அசைய ; பைங்கொடி – பச்சைக்கொடி ;  அடுதல் – சமைத்தல் ;இருமை – கருமை ; பிணவு – பெண் பன்றி ;  குறுந்தாள் ஏற்றை ; குறிய கால்கள் உடைய ஆண் பன்றி ; தடி – தசை ; கூர்நறா – களிப்பு மிக்க கள்.) 

புதன், 24 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 17

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 17
 நீர்ப்பெயற்று - கடல் வாணிகம்
நீர்ப்பெயற்று என்பது ‘நீர்ப்பாயல் துறை’ என்பதன் மரூஉ – மாமல்லபுரம் துறைமுகப்பட்டினம்.
…. … ……     …..               ……பாற்கேழ்
வால்வுளைப் புரவியொடு வடவளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை
 மாடம் ஓங்கிய மணல்மலி மறுகின்
பரதர் மலிந்த பல்வேறு தெருவின்
சிலதர் காக்கும் சேணுயர் வரைப்பின்
 பால் போன்ற நிறத்தினையும், வெள்ளிய தலையாட்டத்தையும் உடைய குதிரைகளோடு வடநாட்டின்கண் உள்ள நுகர் பொருள்களையும் கொணர்ந்து தருகின்ற மரக்கலங்கள் சூழ்ந்து கிடக்கும் பெருமையையுடைய கடற்கரை ; மாடங்கள் உயர்ந்து நிற்கின்ற மணல்மிக்க தெருக்கள் ; பரதர் வாழும் பற்பல தெருக்கள் ; தொழில் செய்வோரால் காக்கப்படும் மிக உயர்ந்த பண்டகசாலைகள் – உடையது.
( புரவி – குதிரை ;  வடவளம் – வடநாட்டு விளைபொருள் ;  சிலதர் – தொழில் செய்வோர் ; பரதர் – வணிகர் ; நாவாய் – மரக்கலம் .) 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 16

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 16
கருடன் சம்பா நெல்
வளைக்கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
 உருப்புற பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்
நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைப்படப் பெருகுவீர்.
   கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 :  304  – 310
மறைகாப்பாளர் மனைவியாகிய பார்ப்பனி, பதமறிந்து ஆக்கிய பறவைப் பெயர் பெற்ற நெற்சோற்றையும், சேதாவின் நறிய மோரின்கண் எடுத்த வெண்ணெயில் வெந்த மிளகுப் பொடியும் , கறிவேப்பிலையும் கலந்து அட்ட மாதுளங்காய்ப் பொரியலையும் , பசிய கொத்துக்க்களையுடைய நெடிய மாமரத்தினது நறிய வடுவினைப் பலநாளாகப் போட்டுவைத்த ஊறுகாயோடும் வகைப்படப் பெறுவீர்.
 ‘பறவைப் பெயர்ப்படு வத்தம்’ என்றது கருடன் சம்பா என்னும் பெயருடைய நெல்லைக்குறிக்கும் என்பார் நச்சினார்க்கினியர். ‘பறவைப் பெயர்ப்படு வத்தம்’ என்றது இராசான்னம் என்னும் பெயர் பெறுகின்ற நெல்லென்றவாறு. ஆகுதி பண்ணுதற்கு இந்த நெல்லுச் சோறே சிறந்ததென்று இதனைக் கூறினார். இனி மின்மினி நெல் என்பாரும் உளர்.
( சுடர்க்கடை – சுடர் மறையும் பொழுது ;  சேதா – சிவப்பு நிறப்பசு ; கஞ்சகம் – கருவேம்பு ;  நறுமுறி – கறிவேப்பிலை ; வடி – வடு ; தகை – அழகு ; காடி – ஊறுகறி , ஊறுகாய்.) 

திங்கள், 22 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 15

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 15

கள் ஆக்குதல்
அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவின் புலர ஆற்றி
பாம்பு உரை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல் அடை அளைஇ தேம்பட
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின்  வழச்சு அற விளைந்த
வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவீர்
     கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 :  275 – 282



குற்றாத கொழியல் அரிசியை நல்ல களியாகத் துழாவி அட்ட கூழை , மலர்ந்த வாயையுடைய தட்டுப் பிழாவில் இட்டு உலரும்படி ஆற்றிப் பாம்பு கிடக்கும் புற்றின்கண் கிடக்கும்  பழஞ்சோற்றைப் போன்று பொலிவு பெற்ற புறத்தையுடைய நல்ல நெல் முளையை இடித்து அதனை , அதிலே கலந்து – அஃது இனிமை பெறும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து – வலிய வாயினையுடைய  சாடியில் இட்டு,  வெந்நீரில் வேக வைத்து  நெய்யரியாலே வடிகட்டி,  விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நறிய கள்ளைப்  பச்சைமீன் சூட்டோடு, நடந்து சென்ற வருத்தம் நீங்க  உண்ணப் பெறுவீர்.
 ( அவையா – குற்றாத  ; துழவை – கூழ் ; பிழா – தட்டு ; குரும்பி – புற்றாஞ்சோறு ; தண்மீன் – உயிர்மீன் .) 

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 14

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 14
குளம் – காவல்
 கோடை நீடினும் குறைபடல் அறியாத்
தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
     கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 :  271 – 272
 நெய்தல் நில மக்களால் உண்ணீர் பெறற்பொருட்டுத் தோண்டிப் பேணப்பட்டு வரும் குளம் .
 கோடைக் காலம் நீண்டதாயினும், வற்றாத நீர் நிலை – கூம்பிய  கைகள் அமிழாமல் நின்ற ( கைகளை மேலே கூப்பி மூழ்குங்கால்) நீரினையுடைய குளக்கரைகளைக் காவல் காத்திருப்பர். ( கோடு – குளக்கரை ) 

சனி, 20 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 13

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 13
யாளி – யானை
மழைவிளை யாடும் கழைவளர் அடுக்கத்து
அணங்குடை யாளி தாக்கலின் பலவுடன்
கணம்சால் வேழம் கதழ்வுற் றாங்கு
     கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 257 – 259
மழை மேகங்கள் விளையாடும் மூங்கில் மரங்கள் செறிந்துள்ள மலையில், யாளியால் தாக்குண்ட யானைக் கூட்டங்கள் கலங்கிக்  கதறுவதைப் போன்று, …. கருப்பஞ் சாற்றைப்பிழியும் ஆலைகளில் ஆரவாரம்.
( கழை – மூங்கில் ; அடுக்கம் – மலைப்பக்கம் ; யாளி – ஒரு கொடிய விலங்கு ; வேழம் – யானை ; கதழ்வுற்று – கலங்கி ; சிலைக்கும் – ஒலிக்கும். யாளி – இவ்விலங்கினம் குறித்து மேலும் ஆய்க.)

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 12

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 12
குமரி மூத்தல்
முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவின்
குமரி மூத்த கூடுஓங் நல் இல்
   கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 246- 247
ஏணிக்கு எட்டாத நெடிய வடிவினையும் தலையைத் திறந்து சொரியப்பட்ட உணவாகும் பழைய நெல்லையும் உடௌயவாய்க் கன்னிமையோடு உயர்ந்து நிற்கும் முதிர்ந்த நெற்கூடுகள் அவ்விலங்களிலே காணப்படும்.
 ( ஒரு கன்னி மணப் பருவம் பெற்றும் கணவனைப் பெறாது வீணே முதியவள் ஆகி விடுதலைக் ’ குமரி மூத்தல்’  என்பர்.
“ அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
 குமரி மூத்தவென் பாத்திரம்..” மணிமே. 76  -77 .
“ அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
 பெற்றான் தமியள்மூத் தற்று.” குறள். 1007.  எனக் குமரி மூத்தல் குறித்தமை காண்க. ஈண்டு மேன்மேலும் புதிய வருவாய் வந்து நிரம்புவதால் பழைய நெல், உணவுக்கு எடுக்கப்படாமல், ‘ குமரி மூத்து கூடு ‘ ஆயின அவ்வுழவர்களின் நெற்கூடுகள்.)  

வியாழன், 18 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 11

 பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 11
நெற்போர்
கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன
பைதற விளைந்த பெருஞ் செந்நெல்லின்
தூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்குசினை நீழல்
பலிபெறு வியன்களம் மலிய ஏற்றி
கணம்கொள் சுற்றமொடு கைபுணர்ந்து ஆடும்
துணங்கை அம்பூதம் துகில் உடுத்தவைபோல்
சிலம்பி வால்நூல் வலந்த மருங்கின்
குழுமுநிலைப் போரின் முழுமுதல் தொலைச்சி
பக்டு ஊர்பு இழிந்த பின்றை துகள்தப
வையும் துரும்பும் நீக்கி பைதற
குடகாற்று எறிந்த குப்பை வடபால்
செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும்
       கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 229 - 241

கடுப்புவலியைத் தருகின்ற குளவிக் கூட்டத்தை ஒத்த – பசுமை நீங்கி முழுதும் முற்றிய பெரிய செந்நெல் தாளை அறுத்த உழவர்கள் – பாம்புகள் கிடக்கின்ற  மருத மரத்தின் நிழலிடத்தே – பிச்சை பெறுவதற்கு இடனான அகன்ற களங்கள் நிறையும்படி போராகக் குவித்து வைக்கின்றனர். குவித்துவைக்கப்பட்ட நெற்குவியல் – கைகளைக் கோர்த்துத் துணங்கை ஆடும் பூதங்கள் வெண்மையான துகில் உடுத்து நின்றாற் போல -  சிலந்தியின் நூல் பின்னப்பட்டு நிற்கின்றது. பெரிய போர்களிடத்தே நெற்கதிர் கட்டுகளை வாங்கி  கடா அடித்து -  நெல்லின்கண் தூசு துரும்பு போக்கி -  காற்றிலே தூற்றிக் குவித்த நெற்பொலிகள் – வடதிசைக்கண் உள்ள பொன்போன்ற மேருமலை போன்று தோற்றமளிக்க….
( செங்குளவி போன்ற பெரிய நெல் ;  பாம்பு உறை  மருதின் – எலிஒழிப்பு ; பலிபெறுதல் – களத்தில் வந்து பாடும் இரவலர்க்கு நெல் வழங்குதல் ;  பலி பெறும் களம் -  ஆண்டூறையும் தெய்வங்கள் பலி பெறுகின்ற களம் என்பார் நச்சினார்க்கினியர்.)

புதன், 17 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 10

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 10
குறும்பூழ்
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்
கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 201 - 204

மருத நில உழவர்  பயிர் அறுக்கும் பருவம் வந்தக்கால். அவர்கள் எழுப்பும் ஆரவாரத்திற்கு அஞ்சி,  அவ்விடத்தே உள்ள மரங்களில் கூடு கட்டி வாழும் குறிய காலையும் கரிய கழுத்தையும் உடைய குறும்பூழ்ப் பறவைகள் ,  வெண்கடம்பின் நறிய மலரையொத்த பறக்கலாற்றாத தம் இளங்குஞ்சுகளையும் கூட்டிக் கொண்டு போய்க் காட்டிடத்தே தங்கும்.
( இச்செய்தி , பட்டினப்பாலையிலும்  ( 53- 58) இடம்பெற்றுள்ளது.   செஞ்சால் உழவர் – பலமுறை உழுதலைச் செய்யும் உழவர் . ) 

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 9

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 9
மாடு - செல்வம்
உறை அமை தீம்தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நல்மா மேனி
சிறுகுழை துயல்வரும் காதில் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளைவிலை உணவின் கிளைவுடன் அருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்
 கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 158 - 165

பறவைகள் எழும்போதே எழுந்துவிடும் ஆயர்மகள் – குடைக்காளானின் முகிழ் போலும் முகிழை உடைய உறையிட்டு இறுகிய  தயிரைப் புலிபோலும் முழக்கத்தை உடைய மத்தினை  ஆரவாரிக்கும்படி  கயிற்றை வலிந்துக் கடைந்து, வெண்ணெயை எடுத்த பிறகு, மோரைப் பானையில் ஊற்றுகிறாள் -  தலையின் மேலே மெல்லிய சுமட்டின்கண் அம்மோர்ப் பானையை ஏற்றிச் சென்று – புதிய மோரை விற்கும் நல்ல மாமை நிறமுடையவளும், சிறிய குழை அசையும் காதை உடையவளும் – மூங்கில் போன்ற தோளை உடையவளும் , அறல்பட்ட கூந்தலை உடையவளும் ஆகிய இடையர் மகள் மோர் விற்றதனால் கிடைத்த நெல் முதலிய உணவால்  தன் சுற்றத்தார் அனைவரையும் உண்ணச் செய்கிறாள் ;  தான் நெய் விற்ற  விலைக்குக் கட்டிப் பசும்பொன்னையும் விரும்பிக் கொள்ளாது எருமையையும், நல்ல பசுக்களையும் அவற்றின் கன்றுகளோடு வாங்குகின்றாள் ..
( பொன்னை விட ஆநிரை பெரிதெனப் போற்றினாள் ஆயர்மகள் ; அளை – மோர் ;  மூரல் – சோறு ;  தொடு தோல் – அடியை மூடாத செருப்பு ; அடிபுதை அரணம் – அடியை மூடும் செருப்பு .) 

திங்கள், 15 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 8

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 8
வீர மங்கை
 யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிர விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
  கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 134  - 136

யானை தன்னைத் தாக்க வந்தாலும், தன்மேல் பாம்பு ஊர்ந்து சென்றாலும், இடி இடித்தாலும் கருவுற்ற பெண்கூட  இவற்றிற்கெல்லாம் அஞ்சாத  - மறத்தன்மை மிக்க வாழ்க்கை குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை.
(  தோப்பி – வீட்டிலேயே நெல்லாற் சமைத்த கள் என்பதை ‘இல் அடு கள் இன் தோப்பி’ என்னும் தொடரால் பெற வைத்தார் ஆசிரியர். இக்கள் பிற கள்ளை விட இனிமையுடையதாய் இருக்கும் என்பதால் ‘இன் தோப்பி’ என்றார்.) 

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 7

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 7
எயிற்றியர் ஆக்கிய உணவு
பார்வை யாத்த  பறைதாள் விளவின்
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடுங்கிணற்று
 வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி
 வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல்
கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 95  - 100
குடிசை முற்றத்தில் விளா மரத்தின் நிழலில், அதன் தேய்ந்த தாள்களில் பார்வை மான்கள் கட்டப்பட்டிருக்கும் ; அம்முற்றத்தில் நிலத்தில் பதிக்கப்பட்ட குழிந்த உரலில், எயிற்றியர் தாம் கொணர்ந்த புல்லரிசியைப் பெய்து, குறிய வயிரமேறிய உலக்கையால் அதைக் குற்றி எடுத்து, ஆழ்ந்த கிணற்றில் அமைந்த சில்லூற்றைத் தோண்டி உவரி நீரைக் கொண்டுவந்து, பழைய விளிம்பு உடைந்துபோன  பானைகளில் வார்த்து, உலையை முரிந்த அடுப்பில் ஏற்றி,  சோறு சமைக்கின்றனர்.
( பார்வை மான் – பிற மான்களை ஈர்த்து வேட்டையாட வளர்க்கும் மான் ;  முரவு வாய்க் குழிசி -  மூளிப்பானை ;  உவரி நீர் – கொஞ்சமாகக் கிடைத்த நீர் ; ஓச்சி – குற்றி ;  வாடூன் புழுக்கல் – கருவாட்டோடு கூடிய சோறு ;  வாராது அட்ட – அரிசியைக் கழுவாது உலையில் பெய்து. ) 

சனி, 13 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 6 புல்லரிசி எடுத்தல்

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 6
புல்லரிசி எடுத்தல்
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிணவு ஒழியப் போகி நோன்காழ்
இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல்
உளிவாய்ச்  சுரையின் மிளிர மிண்டி
இருநில்க் கரம்பைப் படுநீறு ஆடி
நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர்
கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 89  - 94
மான் தோல் படுக்கையில் ஈன்ற குழந்தையுடன் முடங்கிக் கிடக்கிறாள் எயிற்றி ; அவளை விடுத்துப் பிற வெண்ணிறப் பற்கள் கொண்ட – எயிற்றியர் பூண் கட்டிய சீரிய கோலின் செருகப்பட்ட உளிபோலும் வாயையுடைய பாரைகளால் கரிய காம்பு நிலத்தைக் குத்திக் கிளறி, புழுதியை அளைத்து நுண்ணிய புல்லரிசியை வாரிக் கொண்டு வருகின்றனர்.
( மான் தோல் படுக்கை -  மகவு ஈன்றவள் ;  விழுக்கோல் – வயிரம் பாய்ந்த மரத்தால் – ஆச்சி, கருங்காலி முதலான மரத்தால் செய்யப்பட்ட கோல் ; ஒருபக்கம் உளிபோல் – ஒருபக்கம் இரும்புப் பூண் கொண்டது ; எறும்புப் புற்றைப் பாரையாற் குத்திக் கிளறி ஆண்டு எறும்பு ச்ந்ந்ர்த்து வைத்த புல்லரிசியை வாரிக்கொண்டு வந்து உண்ணல் எயிற்றியர் வழக்கம். )  

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 5

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 5
உப்பு வணிகர்
 எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்
அரும்பொருள் அருத்தும் திருந்துதொடை நோன் தாள்
அடிபுதை அரணம் எய்தி படம்புக்கு
பொருகணை தொலைச்சிய புந்தீர் மார்பின்
விரவுவரிக் கச்சின் வெண்கை ஒள்வாள்
வரைஊர் பாம்பின் பூண்டுபுடை தூங்க
கரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவு உடை
கருவில் ஓச்சிய கண் அகன் எறுழ்த்தோள்
கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்
  கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 66  - 76
உப்பு வணிகர்கள் ஊர்கள்தோறும் செல்லும் நெடிய வழியில் பகற்பொழுதில் வழிப்போவார்க்குப் பாதுகாவலாக -  மலையில் உள்ளனவும் கடலில் உள்ளனவுமாகிய பயனைக் கொடுத்துப் பெறுதற்கரிய பொருளைப்பெற்றுத் தம் சுற்றத்தாரை நுகரப்பண்ணும் வணிகர்கள் செல்கின்றனர் – அவர்கள் திருந்தத்தொடுத்த தம் வினையின்கண் அசைவில்லாத வலிய முயற்சியைஉடையவர்கள் – தம் கால் மறையும்படி செருப்பு அணிந்தவர்கள் – மெய்ப்பை அணிந்த உடம்பினை உடையவர்கள் -  ஆறலைப்போர் அம்புதொடுத்துப் போர் செய்ய வரின் அவரை எதிர்த்து – அவரது வலியைத் தொலைத்த மார்பினை உடையவர்கள் – மலையில் ஊறும் பாம்பைப் போன்று மார்பின்குறுக்கே கிடக்கும் கச்சின்கண் வெள்ளிய கைப்பிடியை  உடைய ஒள்ளிய வாளினைத் தொங்கவிட்டவர்கள் – உடைவாள் செருகப்பட்டு இறுகிய உடையினை உடையவர்கள் -  வலிய தோளினை உடையவர்கள் – கடம்பின்கண் அமர்ந்த முருகனை ஒத்த வீரத்தையும் வேலேந்திய கையினையும் புறமுதுகிட்டு ஓடாத தன்மையையும் கொண்டவர்கள்.
(மலையில் உள்ளன – மணி, பொன், சந்தனம் இன்னபிற..
கடலில் உள்ளன – முத்து, பவழம், சங்கு இன்னபிற…
அடிபுதை அரணம் – காலை மூடிய செருப்பு
உல்கு – சுங்கப் பொருள்- பண்டைக் காலத்தில் நிலம் கடந்து செல்லும் பொருள்களுக்குச்  சுங்கச் சாவடிகள் இருந்தமை.  )

வியாழன், 11 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 4

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 4
அதனதன் இடத்தில்…
அத்தம் செல்வோர் அலறத் தாக்கி
கைப்பொருள் வெளவும் களவுஏர் வாழ்க்கைக்
கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம்
உருமும் உரறாது தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா
வேட்டுஆங்கு அசைவழி அசைஇ நசைவுழித் தங்கி
சென்மோ இரவல சிரக்க நின் உள்ளம்
  கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா.4 :39 - 45
வழிச் செல்வோர் அலறும்படி தாக்கி அவர்களுடைய கைப்பொருளைக் கவர்ந்து கொள்ளும் களவினை – ஏர்த்தொழில் போன்று வாழ்க்கைக்குத் தொழிலாகக் கொண்டுள்ள கொடுமையோர்  திரையன் நாட்டில் இல்லை. ; அவன் நாட்டில் இடி கூட இடித்து இடுக்கண் தராது- பாம்புகளும் கொல்லும் தொழிலைச் செய்யா -  காட்டு விலங்குகள் கூட யாருக்கும் வருத்தம் செய்ய மாட்டா -  ஆதலால்,   அறம் திகழும் அவன் நாட்டில்  நீங்கள்  விரும்பிய இடத்து அச்சமின்றி இளைப்பாறி – நின்னை விரும்பியோரிடத்து நீ செல்வாயாக – உன் நெஞ்சம் இன்புற்றுச் சிறக்குமாக. அதனதன் இடத்தில்  இருப்பதால் யாண்டும் அமைதி நிலவுகிறது  -- சிலம்பில் இளங்கோவடிகள் இக்கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம் –
“ கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா
வாள்வரி வேங்கையும் மான்கண மறவா
அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு.

 ( அத்தம் – வழி ; உரும் – இடியேறு ; உரறுதல் – முழங்குதல் ; அசைவழி -  இளைத்தவிடத்தே ; அசைஇ – இளைப்பாறி ; நசைவழி – நும்மை விரும்பிய விடத்தே. இன்று,  இயற்கையை இடறும் மூடர்கள் உணர்வார்களாக.) 

புதன், 10 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 3

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 3
இளந்திரையன்
இருநிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த்
திரைதரு மரபின் இரவோன் உம்பல்
மலர்தலை உலகத்து மன்உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி அன்ன வசைநீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையற் படர்குவிர் ஆயின்
கேள் அவன் நிலையே கெடுகநின் அவலம்
  கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா.4 :29 - 38
பெரிய நிலத்தை அளந்து கொண்டவனும், திருமாலாகிய மறுவினை அணிந்த மார்பை உடையவனும், கடல் வண்ணனுமாகிய திருமால் மரபினன் அவ்வள்ளல் ; கடல் அலைகளால் கரை சேர்க்கப்பட்ட  சோழ மன்னன் மரபில் வந்தவன்.ல்; கடலிலே பிறந்த சங்குகளிலே வலம்புரிச் சங்கையே உலகம் புகழ்தல்போல, பெரிய உலகத்தே நிலைபெற்று வாழும் உயிர்களைப் புரக்கும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைவிட மிகுதியாகப் புகழப்பட்டவன் ; மறத்தைப் போக்கி அறத்தை நிலைநிறுத்திய செங்கோலையும் பல வேற்படைகளையும் கொண்டவனாக விளங்கும்  தொண்டைமான் திரையன்பாற் சேர நீவிர் எண்ணுவிராயின் அவ்வள்ளலின் தன்மையை யான் கூறக் கேட்பாயாக… கேட்ட மாத்திரத்தில் நின் அவலம் கெட்டொழியும்.  தொடரும் …….. 

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 2

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 2
பாணன் – வறுமை
தண்கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போல
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண.
                         கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா.4 :17 - 21

ஞாயிறும் திங்களும் வலம் வருகின்ற கடல் சூழ் உலகில், மழை வறந்தமையால் புகை எழுகின்ற மலையின்கண், நின்னைப் புரப்பாரைப் பெறாமையால், பழம் கனிந்த மரத்தை நாடித் திரியும் பறவைபோல, அழுது புலம்பும் சுற்றத்தினருடன் ஓரிடத்து இராமல் பயனின்றி ஓடித் திரிகின்ற பொலிவிழந்த வடிவினையும் கற்ற கல்வியை வெறுத்துப் பேசுகின்ற வாயையும் உடைய பாணனே..! 

திங்கள், 8 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 1

4 . பெரும்பாணாற்றுப்படை
தொண்டைமான் இளந்திரையனைச் சிறப்பித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பாட்டு.
பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 1
இயற்கையைப் போற்றுதும்
இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தவர்கள் நம் பண்டைத் தமிழ்ச் சான்றோர், தாம் படைக்கும்  படைப்புக்களிலும் ஞாயிறு, திங்கள், உலகம், கடல், வானம், முகில், மழை, ஆறு போன்ற இயற்கைச் செல்வங்களைச் சொல்லோவியமாகத் தீட்டி மகிழ்ந்தனர்.
 சிலப்பதிகாரம் யாத்த இளங்கோவடிகள்…
“ திங்களைப் போற்றுதும்…. எனத் திங்கள், ஞாயிறு, மழை ஆகிய இயற்கைப் பொருள்களைப் போற்றித் தம் காப்பியத்தைத் தொடங்குகின்றார்.மணிமேகலைக் காப்பியத்தின் பதிகமும் “இளங்கதிர் ஞாயிறு “ எனத் தொடங்குகிறது. அவ்வாறே ஆசிரியர் உருத்திரங் கண்ணனாரும் “ அகல் இரு விசும்பு” எனத் தொடங்குகின்றார்.
அகல் இரு விசும்பு  என்ற தொடருக்குத்  “தன்னையொழிந்த நான்கு பூதங்களும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமான வானம்” என நச்சினார்க்கினியர் நுட்பமான உரை வகுத்துள்ளார்.
இவ்வுத்தியை ஏனைய தமிழ் இலக்கியங்களிலும் கண்டு மகிழ்க. 

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 17

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 17
துணிமழை தவழும் துயல்கழை நெடுங்கோட்டு
எறிந்துரும் இறந்த ஏற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணி
செல்லிசை நிலைஇய பண்பின்
நல்லியக்கோடனை நயந்தனீர் செலினே.
  இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 266  – 270
 கருமேகங்கள் வெண்மேகமாகிய மஞ்சின் இடையே தவழ்கின்ற மலை; அம்மலையில் நீண்ட மூங்கில் மரங்கள் நிறைந்து விளங்குவதால் இடியேறுகூட தான் அப்பால் செல்லத் தடையாதல் கருதி இடித்துச் செல்லும். யாராலும் எளிதில் ஏறுதற்கு அரிதான முடியுடைய மலை.- இத்தகைய மலைநாட்டுக்குத் தலைவன் அவன் ; கொய்த இளந்தளிர் மாலை அணிந்தவன் ; புகழ் நிலைத்து நிற்றற்கு உரிய வண்மை முதலிய குணங்களால் நிறைந்தவன் ; இத்தகைய வள்ளல் ஆகிய நல்லியக்கோடனை விரும்பி நீவிர் செல்குவீராயின்  வேண்டிய வளம் பெறலாம்.
முற்றும்
4 . பெரும்பாணாற்றுப்படை – தொடரும் 

சனி, 6 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 16

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 16
பாடுதுறை முற்றிய பயந்தெரி கேள்விக்
கூடுகொள் இன்னியம் குரல் குரலாக
நூல்நெறி மரபின் பண்ணி ஆனாது
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை…..
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 228  – 231
நல்லியக்கோடனைப் போற்றிப் பாடும் பாணன் ….. அமிழ்தத்தைத் தன்னிடத்தே பொதிந்து வைத்திருக்கும் முறுக்கடங்கின நரம்புகளைக்கொண்ட சீறியாழ். இவ்வினிய இசைகளைக் கொண்ட யாழை, விளங்கின்ற இசை நூல் முறைமையால் செம்பாலையாக இயக்கி, ஐம்பெருங் குரவர் முதலியோர்க்குக் குவித்த கைகளை உடையோய்…!
( பாம்பு வெகுண்டன்ன தேறல் – பாம்பின் நஞ்சேறி மயங்கினாற்போன்று களிப்பு நல்கும்.) 

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 15

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 15
   – மாவீரன் நல்லியக் கோடன்
செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்து
அஞ்சினார்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும்
ஆண அணி புகுதலும் அழிபடை தாங்கலும்
வாள்மீக் கூற்றத்து வயவர் ஏத்து
கருதியது முடித்தலும் காமுறப் படுதலும்
ஒருவழிப் படாமையும் ஓடியது உணர்தலும்
அரிஏர் உண்கண் அரிவையர் ஏத்த
அறிவு மடம் படுதலும் அறிவுநன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்து
பல்மீன் நடுவண் பால்மதி போல
இன்நகை ஆயமொடு இருந்தோற் குறுகி
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 207   – 220
சான்றோர்,நல்லியக்கோடனின் செய்ந்நன்றி அறிதல்முதலான நற்குணங்களைப் புகழ்ந்துரைப்பர்.
வாள் வலியால் பெற்ற ஆண்மைச் சிறப்பினையும் ; மகளிரைத் தலையளித்துப் பாதுகாத்தலையும் ; தம்மை நாடி வருபவர்களுக்கு வரையாது வழங்குதலையும் போற்றியுரைப்பர்.
பல்மீன் நடுவே ஒளிரும் பால்மதி போலும் விளங்குபவன் நல்லியக்கோடன்

வியாழன், 4 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 14

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 14
நல்லியக் கோடனின் ஆமூரில் மருத நில உணவு.
இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுவீர்.
  இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 193  – 195
பூண் அனிந்த பெரிய உலக்கையால் குற்றி எடுக்கப்பட்ட கைக்குத்தல் அரிசியுடன் வளைந்த கால்களையுடைய நண்டுடன் மருதநில மக்கள் வெண்சோறு விருந்து படைப்பர்.
( பேய் – பேயின் கால் பெரிதும் பிளவுபட்டிருக்கும் என்பதைக் குறிக்க “ கவையடிப் பேய்மகள் “ என்றார். –” சுடுகாட்டுக் கோட்டத்து இடுபிணந் தின்னும் . இடாகினிப் பேய்…. சிலம்பு. “ இரும்பேர் உவகையின் எழுந்தோர் பேய்மகள் ……………… கந்தொட் டுண்டு கவையடி பெயர்ந்து “ – மணிமே. )  

புதன், 3 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 13

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 13
 நெய்தல்நில வருணனை
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்
அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண்மணல் கடல் உலாய் நிமிர்தர
பாடல் சான்ற நெய்தல் நெடுவழி
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 145  – 151
பாணன் தான் பெற்ற பெருவளத்தினைப் பெறாத பாணனனுக்கு –  நீயிர் ஐயுறவு கொள்ளாது அவ்வள்ளலிடம் செல்லுக என்று அறிவுறுத்தினான்.
   அங்ஙனம் சென்றால் நெய்தல் வளமிக்க அவனுடைய  எயிற்பட்டினத்தைஎ அடைவீர்; அவ்வூர்க் கடற்கரையின்கண்…..
 அன்னம் போன்று  (வெண்) தாழை மலர்ந்திருக்கும்
பொன்போன்று செருந்தி செறிந்து தோன்றும்
நீலமணி போலும் கழிமுள்ளி ஒளியுடன் விளங்கும்
நித்திலம் போலும் செழித்த புன்னை அரும்புகள்
கரையில் படர்ந்துள்ள வெள்ளிய மணற்பரப்பில் கடல் பரந்து ஏறுகின்ற நெய்தல் நில நெடு வழியே --- செல்வீராக.
( உவமைகளின் ஒப்புமை அழகு குறித்து ஆய்க. வேலூர் – முல்லை நில வருணனை ;  ஆமூர் – மருத நில வருணனை …. நூலில் கண்டுணர்க.)
நாட்போது – அன்றலர்ந்த மலர் ; கொங்கு – தேன் ; குட்டம் – குளம் ;  வியல் நகர் – அகன்ற இல்லங்கள் ; கிடங்கு – அகழி .) 

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 12 வறுமை

  சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 12
 வறுமை
……  ……………….. ………… இந்நாள்
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புளிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கை கிணைமகள் வளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்வீட ……………….
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 130  – 140

அண்மையில் குட்டிகளை ஈன்ற நாய் – தன் குட்டிகளிடத்தும் பெரிதும் அன்புடையதாய் இருந்தும் – கண்களைத் திறவாத சாய்செவிக் குருளை பால் மிகுதியாக உண்ணாது எனினும் அவற்றிற்குக் கூடப் பாலூட்ட முடியாத வற்றிய முலை உடைய நாய் குரைக்கின்ற புன்மையுடைய அடுக்களை ;  கூரையில் உள்ள கழிகள் கட்டற்று வீழ்ந்து கிடக்கும் பழைய சுவர் ; அச்சுவரில் தோன்றிய கறையான் அரித்துச் சேர்த்த புழுதியிடத்துக் காளான் பூத்து விளங்கும் அட்டில் ; இத்தகைய வறுமையால் இளைத்த உடலை உடைய நுண்மருங்குல் கிணைமகள் கடும்பசிக்கு ஆற்றாது குப்பையில் கிடந்த வேளைக் கீரையை நகத்தால் கிள்ளி வந்தாள் ; சுவை பயத்தற்கு இடும் உப்பும் இல்லாத வறுமை ;  உப்பின்றி அட்டிலிலே பக்குவம் செய்த கீரையை – புறங்கூறுவோர் காணுவதை நாணித் தலை வாயிற் கதவை அடைத்து எம் சுற்றத்தோடு பகிர்ந்து உண்டோம்.
( ஒல்குபசி – ஐம்பொறிகளும் தளர்தற்குக் காரணமான பசி ; கிணைமகள் – கிணைப்பறை கொட்டுவோன் மனைவி – மனைவியை மகள் என்று கூறும் வழக்கு .)

திங்கள், 1 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 11

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 11
 நல்லியக்கோடன்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடை நோந்தாள்
நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை ஆகிய
பொருபுனல் தரூஉம் போக்கறு மரபின்
தொல்மா இலங்கைக் கருவொடு பெயரிய
நல்மா இலங்கை மன்ன ருள்ளும்
முறுவின்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்
உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்பு இருந்து கழல்தயங்கு திருந்தடி
பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை
நல்லையக் கோடனை நயந்த கொள்கையொடு
 இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 113  – 126
ஏழு வள்ளல்களும் ஏற்று நடத்திய  கொடையை --- உலகம் விளங்கும்படி தான் ஒருவனே ஏற்ற வலிமைமிக்க முயற்சியை உடையவன் நல்லியக்கோடன் ; சுரபுன்னையையும் அகிலையும் சந்தனத்தையும் நீராடு மகளிர்க்குத் தெப்பமாக நீர் கொணர்ந்து தருகின்ற அழிதல் இல்லாத முறைமையினை உடைய பழம்பெருமை வாய்ந்த  பெரிய இலங்கையின் பெயரைத் தான் தோன்றியபோதே பெற்ற நல்ல இலங்கை என்னும் நகரை ஆண்ட மன்னர் பலருள்ளும் சிறந்தவன் அவன். வாள் வென்றி வாய்க்கப் பெற்றோரும் புலி போல்வோரும் ஆகிய ஓவியர் குடியில் தோன்றியவன் ; திருந்தடியையும் வரையாது அள்ளி வழங்கும் மழை போன்ர தடக்கையையும் உடையவன்; கூத்தரைப் போற்றுவதில் வல்லவன் ; பேரிசையாளன் – ஆகிய நல்லியக்கோடன் என்னும் வள்ளல் பெருமானை..
   நல்லியக்கோடன் – ஆட்சி செய்த ஓய்மாநாட்டின்கண் எயிற்பட்டினம் – வேலூர் – ஆமூர் – என்னும் ஊர்கள் அக்காலத்தே சிறப்புற்று விளங்கின. கிடங்கில் – தலைநகரமாக விளங்கியது.
 ( உரனுடை வலிமைமிக்க ;நாகம் – சுரபுன்னை ;  போக்கறு -  அழித்தற்கு இயலாத.)