திங்கள், 18 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 3

நெடுநல்வாடை அரிய செய்தி  : 3
முழுவலி மாக்கள் – ஊர்க்காவலர்

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்
படலக் கண்ணி பருஏர் எறுழ் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலைத் தண்துளி பேணார் பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர
                                            நக்கீரர், நெடுநல் .  7:  29 – 35
                            உயர்ந்த மாடங்களைக் கொண்ட வளம் நிறைந்த மூதூர்,  அதன் தெருக்கள், ஆறு கிடந்ததைப் போன்ற அழகுடன் அகன்றும் நீண்டும் இருந்தது.
                                மிலேச்சர்கள், தழை விரவிக் கட்டிய மாலையைத் தலையில் அணிந்திருந்தனர், அவர்கள் பருத்த அழகான வலிமைவாய்ந்த இறுகிய தோள்களை உடையவர், முறுக்கு ஏறிய உடம்பினை உடையவர், உடல் வலிமை அனைத்தும் நிரம்பப் பெற்றவர், அவர்கள் வண்டுகள் மொய்த்துக்கிடக்கும் கள்ளினை மிகுதியாக உண்டமையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர், சிறு  துவலைகளாக வீசும் குளிர்ந்த மழைத்துளிகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை, தங்கள் தோளில், ஆடையை முன்னும் பின்னும் தொங்கவிட்டவாறு அணிந்திருந்தனர், அவ்வூரின் தெருக்களில், அம்மிலேச்சர்கள், தாம் விரும்பிய வண்ணம் விரும்பிய இடங்களில், பகற் பொழுது மட்டுமின்றிப் பிற காலங்களிலும் சுற்றித் திரிந்தனர்.
                   முழுவலி மாக்கள் என்றதற்கு – பயனின்றி வாளா சுற்றித்திரியும் ஆடவர் எனப் பொருள் கூறுதல் , பாண்டிய நட்டின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பதாகாது எனவே, இவர்களை ஊர்க்கவலர் எனக் கருதுதல் தக்கது.
( மல்லல் – வளமை ; படலை – தழை ; எறுழ் – வலிமை ; முடலை – முறுக்குண்ட ; யாக்கை – உடம்பு ; மூசு – மொய்த்தல் ; தேறல் – கள் / தெளிவு ; அறுவை – ஆடை . ) 

1 கருத்து: