வியாழன், 30 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 722

திருக்குறள் – சிறப்புரை : 722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். --- ௭௨௨
கற்றார் அவையில் தேர்ந்த சொல்லெடுத்து செவ்விய நடையில் உரையாற்ற வல்லாரையே,  உலகத்தார் கற்றவர்களுள் சிறந்தவர் இவரெனப் போற்றுவர்.
“ கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
 தாம் வரம்பு ஆகிய தலைமையர்… “ –திருமுருகற்றுப்படை.

முனிவர்கள், கற்றோரால் சிறிதும் அறியப்படாத பேரறிவினை உடையவர்கள்; கற்றறிந்தவர்களுக்குத் தாமே எல்லையாகிய தலைமைத் தன்மை உடையவர்கள்.

புதன், 29 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 721

திருக்குறள் – சிறப்புரை : 721
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். --- ௭௨௧
சொற்களின் தொகைவகை அறிந்த சான்றோர்,  அவையில் குழுமியிருக்கும் அறிவிற்சிறந்தோர் தன்மை அறிந்து, வாய் சோர்ந்தும் குற்றம் நேராமல் பேசுதல் வேண்டும்.
“ அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருள் ஆகக் கொள்வர் புலவர். – நாலடியார்.

அருள் காரணமாக அறம் வலியுறுத்தும் அன்புடைய பெரியோரது வாய்மொழியை அறிவுடையோர் பெரும் பயனுடையதாக மதித்து ஏற்றுக்கொள்வர்.

செவ்வாய், 28 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 720

திருக்குறள் – சிறப்புரை : 720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
 அல்லார்முன் கோட்டி கொளல். ---- ௭௨0
கற்றறிந்தார், கல்லாதார் கூட்டத்தில் உரையாற்றுவது
தூய்மை இல்லாத முற்றத்தில் அமிழ்தத்தைக் கொட்டுதல் போன்றது.
“ பொருள் உணர்வார் இல்வழி பாட்டு உரைத்தல் இன்னா.”இன்னாநாற்பது.

 பாட்டின் பொருளை அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் செய்யுள் இயற்றிக் கூறுதல் துன்பம் தரும்.

திங்கள், 27 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 719

திருக்குறள் – சிறப்புரை : 719
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார். --- ௭௧௯
சான்றோர் நிறைந்த அவையில் அறிவார்ந்த உரையாற்றும் சொல்வன்மை உடையவர்கள் மூடர்கள் நிறைந்த அவையில் மறந்தும் அவ்வாறு பேசாதிருத்தல் வேண்டும்..
“ புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்.” –பழமொழி.

அறிவு மிக்கவரின் அறிவினை ஆராய்ந்து அறிதல், அறிவு மிக்கவர்க்கே உளதாம்.

ஞாயிறு, 26 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 718

திருக்குறள் – சிறப்புரை : 718
உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொறிந் தற்று. --- ௭௧௮
உரையின் உட்பொருளைத் தாமே உணரவல்ல அறிவுடையார்முன் ஒருவன் பேசுதல் தானே வளர்ந்து செழிக்கவல்ல பயிர் உள்ள பாத்தியின்கண் நீர் பாய்ச்சுதல் போன்றதாம்.
“ ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்.” --முதுமொழிக்காஞ்சி.


இவ்வுலகத்தில் உள்ள மக்கள் எல்லாருள்ளும் உயர்வடைய விரும்புவோன் பிறரிடம் காணப்படும் சிறந்த இயல்புகளையே பேசப் பழகுதல் வேண்டும்.

சனி, 25 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 717

திருக்குறள் – சிறப்புரை : 717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லா ரகத்து. ௭௧௭
குற்றமற்ற பொருள்பொதிந்த சொற்களை ஆராய்ந்து அறியும் சான்றோர் அவைக்கண் ஒருவன் உரைப்பானாயின் பல நூல்களையும் கற்றுத்தேர்ந்த கல்வியின் சிறப்பு யாவர்க்கும் விளங்கித் தோன்றும்.
“ கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின வேந்தன் அவை காட்டும் ….” –பழமொழி.

பகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல்வாய்ந்த அரசனது கல்வியின் பெருமையையும் சொல்வன்மையையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்.

வெள்ளி, 24 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 716

திருக்குறள் – சிறப்புரை : 716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.--- ௭௧௬
நூலறி புலவர் நிறைந்த அவையில் கற்றறிந்தவன் சொற்குற்றம் உடையனாதல் . நன்னெறிக்கண் நின்றொழுகும் ஒருவன் அந்நெறியினின்று நிலைதளர்ந்து வீழ்ந்ததைப் போன்றதாம்..
“ புல்லா எழுத்தில் பொருள் இல் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே….”---- நாலடியார்.
சொற்பொருள் அறிவு இல்லாத, பயனற்ற சபையைச்சேர்ந்த, நல்ல நூல்களைக் கற்காத ஒருவன், பொருந்தாத சொற்களால் உரைப்பதையும் பெரியோர்  (அவன்பால் இரக்கம் கொண்டு) தம் மனம் வருத்தமடைந்தும் அவ்வுரையைக் கேட்பர்.



வியாழன், 23 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 715

திருக்குறள் – சிறப்புரை : 715
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.--- ௭௧௫
ஒருவனுக்கு நல்ல குணங்கள் என்று சொல்லப்படுவனவற்றுள் முதலிடம் வகிப்பது, அறிவுடையார் முன்பு அவரினும் முற்பட்டுப் பேசாமல் காக்கும் அடக்கமேயாகும்.
“ காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.---குறள்.122.

உயிருக்குப் பெருமைதரும் செல்வமாவது அடக்கமாகும் அதனால் அடக்கத்தைப் பெறுதற்கரிய பொருளாகப் போற்றிக் காக்க வேண்டும். 

புதன், 22 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 714

திருக்குறள் – சிறப்புரை : 714
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். ---- ௭௧௪
 கற்றோர் கூடிய அவையில் உரையாற்றும்பொழுது அவர்கள் பாராட்டுமாறு பேச வேண்டும் ; கல்லார் நிறைந்த அவையில் உரையாற்றும்பொழுது தம் புலமைத் திறத்தைக் காட்ட முனையாது அவர்கள் புரிந்துகொள்ளுமாறு இயல்பாகப் பேச வேண்டும்.
“கைஞ் ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்
 சொல் ஞானம் சோர விடல்.” --- நாலடியார்.
அற்ப அறிவோடு இருள் நிறைந்த மனத்தினராய் வாழ்பவர் முன்னே, நல்லது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக.


செவ்வாய், 21 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 713

திருக்குறள் – சிறப்புரை : 713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.---- ௭௧௩
அவையின் சூழல்(இடம், பொருள்,காலம்,கேட்போர்) அறியாது உரைமுறை கடந்து உரையாற்றுபவர், சொல்லின் வகைதொகையும் அறியார்; கற்றுத் தேர்ந்த வல்லமையும் இல்லாதவர் ஆவர்.
“ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும்
 ஓதி அனையார் உணர்வுடையார்…” –நாலடியார்.
பகுத்தறிவு இல்லாதவர் படித்திருந்தாலும் படிக்காதவர்களே ; பகுத்தறிவு உள்ளவர்கள் படிக்காதிருந்தாலும் படித்தவர்களுக்கு ஒப்பாவர்.


திங்கள், 20 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 712

திருக்குறள் – சிறப்புரை : 712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். ---- ௭௧௨

   சொல்நடை (சொற்பொருள்- சொல்லின் நேர்பொருள், சூழல் பொருள்,அகராதிப் பொருள்) அறிந்த சான்றோர் அவையின் சூழலுக்கேற்ப, நற்பயன் நல்கும் சொற்களைத் தெளிந்து சொல்லுதல் வேண்டும்.
“ திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
 பொருளும் அதனினூஉங்கு இல்.—குறள். 644.

சொல்லின் திறன் அறிந்து சொல்லைச் சொல்ல வேண்டும் ; அச்சொல்லைவிடச் சிறந்த அறனும் பொருளும் வேறில்லை.

ஞாயிறு, 19 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 711

திருக்குறள் – சிறப்புரை : 711
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.௭௧௧
சொற்களின் தொகையறிந்த தூய அறிவுடையாராதல் வேண்டின் அவையின்கண் உரையாற்றுங்கால் கேட்போர் திறனறிந்து ஆராய்ந்து தேர்ந்தெடுத்த சொற்களையே சொல்லுதல் வேண்டும்.
“ உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்
 வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே. –தொல்காப்பியம்.

உயர்ந்தோர் கூற்று உலக வழக்கொடு பொருந்தி அமைதலால், அதனை வழக்கு வழிப்படுத்தல் செய்யுளுக்கு உரியதோர் முறைமையாகும்.

சனி, 18 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 710

திருக்குறள் – சிறப்புரை : 710
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. --- ௭௧0
நுண்ணிய அறிவுடையோம் என்பார் உண்மையில் கூர்ந்து நோக்கிப் பிறர் உள்ளக்குறிப்பை அளங்கும் கோல் என்பது அவர்தம் கண்ணேயன்றிப் பிறிதொன்றும் இல்லை.
“ கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம்
செய்தான் அக்கள்வன் மகன்.” –கலித்தொகை.
தோழி..! என்னைக் கடைக்கண்ணால் கொல்பவனைப்போல் நோக்கித் தன் மன மகிழ்ச்சியைக் காதலில் கூட்டிப் புன்னகை புரிந்து சென்றான் அக்கள்வன் மகன்.—தலைவி.


வெள்ளி, 17 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 709

திருக்குறள் – சிறப்புரை : 709
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். --- ௭0௯
கண், உள்ளத்தெழும் உணர்ச்சிகளைக் காட்டவல்லது. கண் உரைக்கும் செய்திகளை அறிய வல்லார்க்கு ஒருவனுடைய பார்வையைக்கொண்டே அவன் மனத்தில் உள்ள பகைமையையும் நட்பையும் அறிந்து கொள்ள முடியும்.
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. –குறள். 1100.
காதலர்தம் கண்ணொடு கண் நோக்கிக் காதல் குறிப்பினால் மனம் ஒன்றினாராயின் வாய்ச் சொற்கள் பயனின்றி ஒழியும்,


வியாழன், 16 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 708

திருக்குறள் – சிறப்புரை : 708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்.--- ௭0௮
ஒருவர் மனத்தில் உள்ளதைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர் அவர் முகம் நோக்கிச் சிறிது நேரம் நின்றாலே போதும்.
“ கொலை உண்கண் கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி
இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி…” --கலித்தொகை.
கண்டாரை ஈர்க்கும் மையுண்ட கண்ணையும் கூரிய பற்களையும் தளிர்போன்ற மேனியழகையும் உடைய மாயோளே! நின்னைக் காட்டிலும் சிறந்த அழகியர் மண்ணுலகத்து இல்லை என்பது தெளிவாகிறது. –தலைவன்.


புதன், 15 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 707

திருக்குறள் – சிறப்புரை : 707
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். --- ௭0௭
ஒருவன் பிறரைக்கண்டு தன் உள்ளத்தால் மகிழ்ந்தாலும் வெறுத்தாலும் அதனை உடனடியாகப் புலப்படுத்துவது அவனது முகமே அதனால் முகத்தைவிட அறிவு மிக்கது என ஒன்று உண்டோ..? (இல்லை என்பதாம்)
“ மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
 நோக்கக் குழையும் விருந்து. – குறள்..90.

 மென்மையான மலராகிய அனிச்சம் பூ நுகர்ந்தால்தான் வாடும் ஆனால் வீட்டிற்குவந்த விருந்தினரை முகம்கோணிப் பார்த்தாலே வாடிவிடுவர்.

செவ்வாய், 14 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 706

திருக்குறள் – சிறப்புரை : 706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். ----- ௭0௬
தன்னுள் நுழைந்திருக்கும் நூலினை(பொருளை) வெளிக்காட்டும் பளிங்குபோல் ஒருவர் நெஞ்சில் மறைந்திருக்கும்  எண்ணங்களை முகமே காட்டி விடும்.
“ காமம் கனைந்து எழக் கண்ணின் களி எழ.”---பரிபாடல்.
நெஞ்சத்தில் காமக் களிப்பு எழ, அது கண்களிலே வெளிப்பட்டுப் புறத்தார்க்குப் புலப்படத் தோன்றும்.



திங்கள், 13 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 705

திருக்குறள் – சிறப்புரை : 705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். --- ௭0௫
ஒருவன் முகக் குறிப்பினைக்கொண்டு அவன் மனத்தின் எண்ணங்களை அறியமுடியாது போனால் மனிதன் தன் உடல் உறுப்புகளுள் மிகச் சிறந்த உறுப்பாகிய கண்ணைப் பெற்றுள்ளதால் என்ன பயன்..?
தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண்நீர்மை மாறாக் கருணையால் பெண்நீர்மை
கற்பு அழியா ஆற்றால் கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதம் ஆம் என்றே அறி.” ---நல்வழி.
தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும் நல்லோருடைய குணமானது ஈகையினாலும் கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும் பெண்களுடைய குணமானது கற்பு நிலை கெடாத வழியினாலும் கடல் சூழ்ந்த பூமியினிடத்து வியக்கத்தக்க மேன்மை உடையனவாகும் என்று நீ அறிவாயாக.


ஞாயிறு, 12 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 704

திருக்குறள் – சிறப்புரை : 704
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.--- ௭0௪
ஒருவனின் முகக் குறிப்பினைக்கொண்டு அவன் மனதில் உள்ளவற்றை அறியும் ஆற்றல் உடையாரோடு மற்றவர்கள் உறுப்புகளால் ஒற்றுமை உடையாரேனும் அறிவால் வேறுபட்டவராவார்.
” உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
 பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.--- குறள்.993.
பல உறுப்புகளாலாகிய உடம்பால் மட்டும் மக்கள் ஒத்திருப்பது ஒப்புமையன்று நெருங்கிப் பழகும் பண்பால் ஒத்து இருப்பதே எல்லாராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்புமையாகும்.


சனி, 11 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 703

திருக்குறள் – சிறப்புரை : 703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
 யாது கொடுத்தும் கொளல். --- ௭0௩
ஒருவரின் முகக்குறிப்பினால் அவர்தம் மனக்கருத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையாரை என்ன விலைகொடுத்தாவது, அரசர் அவரைத் தமக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.
“நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே.” – புறநானூறு.
வேந்தே..! இரவலர்தம் மனக்கருத்தை முகக் குறிப்பினாலே அறிந்து அவர்தம் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உடையவன் என்பதால் நின்னைக் காண விருப்பத்துடன் பரிசிலர் வருவர்.


வெள்ளி, 10 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 702

திருக்குறள் – சிறப்புரை : 702
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல். --- ௭0௨
ஒருவன் முகம் நோக்கி அவன் அகத்தின்கண் நிகழ்வனவற்றை ஐயத்திற்கு இடனின்றி உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உடையவனைத் தெய்வத்திற்கு ஒப்பானவனாகக் கொள்ள வேண்டும்.
“ இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
  துன்பம் உறாஅ வரின்.---குறள்.1052.

இரந்த பொருள் ஈவாரது பண்பால் வாய் திறந்து கேட்கும் முன்பே மகிழ்ச்சியோடு கிடைக்குமாயின் ஒருவனுக்கு இரத்தலும் இன்பம் தருவதாம்.

வியாழன், 9 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 701

71. குறிப்பறிதல்
திருக்குறள் – சிறப்புரை : 701
 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி. – ௭0௧
ஒருவர் வாய் திறந்து எதுவும் கூறாதபோது அவர் முகம் நோக்கிக் குறிப்பால் அவர் மனதில் உள்ளதை  அறியும் ஆற்றலுடையவன் எக்காலத்தும் வற்றாத நீரை உடைய கடல் சூழ்ந்த இவ்வுலகிற்கு அணியாவான்.
“ இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
 நல்லது வெஃகி வினை செய்வார்.”---பரிபாடல்.

இரப்போருடைய வறுமையை அவர்தம் மெய்ப்பாட்டாலேயே உணர்ந்து அவர் வாய் திறந்து கேட்பதற்குமுன் ஈதலைச் செய்வார் சான்றோர்.

புதன், 8 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 700

திருக்குறள் – சிறப்புரை : 700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். ௭00
யான் அரசனுக்கு நெடுநாள் நட்புடையன் எனக்கருதித் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்திப் பண்பற்ற செயல்களைச் செய்பவரின்  நட்புரிமை கேடு பலவும் தரும்.
“ நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
 புல்லா விடுதல் இனிது.” ----இனியவை நாற்பது.

தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.

செவ்வாய், 7 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 699

திருக்குறள் – சிறப்புரை : 699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். ---- ௬௯௯
அரசனால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்று நினைத்துகொண்டு அரசான் விரும்பாதவற்றைச் செய்யத் துணியமாட்டார்கள் தெளிந்த அறிவுடைய சான்றோர்கள்.
“மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
நன்று அறி உள்ளத்துச் சான்றோர்…” –பதிற்றுப்பத்து.

மக்களினத்தைக் காப்பதற்குரிய அறிவுரைகளைக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.

திங்கள், 6 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 698

திருக்குறள் – சிறப்புரை : 698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.---- ௬௯௮
அரசர் எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறையில் உறவு உடைவர் என்று அரசரை இகழ்ந்து கூறாது தமது அரசபதவிக்கு உரிய தகுதியுடன் நடந்துகொள்ள வேண்டும்.
உயர்ந்தோர் உறவுடையராயின் அவருக்குக்கீழ் பணியாற்றும் பொழுது உறவு முறையை வெளிக்காட்டாது இருத்தல் நன்று.
“ஒன்றாய்விடினும் உயர்ந்தார்ப் படும் குற்றம்
குன்றின் மேல் இட்ட விளக்கு.” –பழமொழி.

உயர்ந்தோர் ஒரே ஒரு குற்றம் புரியினும் அது குன்றின் மேல் இட்ட விளக்கு போல் பல்லோர் பார்வையில் படும்.

சனி, 4 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 697

திருக்குறள் – சிறப்புரை : 697
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். --- ௬௯௭
ஆக்கம் கருதி அரசன் விரும்பிக் கேட்பவற்றை மட்டுமே சொல்லி எக்காலத்தும்  பயன்தராதனவற்றை அரசன் விரும்பிக் கேட்டாலும் சொல்லற்க.
”கருத்திலா இறைவன் தீமை கருதினால் அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் நன்றே திருத்துக…..” கம்பன்.

மன்னன்  மக்களைக் காக்கும் கருத்தின்றித் தீமை செய்யக் கருதுவானாயின் அவ்வாறு அவன் செய்யாது காத்து அவனைத் திருத்துதல் சான்றோர் கடனாம்.