வெள்ளி, 4 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –403 இளம்பூரணர்- “உரையாசிரியர்….!”

 

தன்னேரிலாத தமிழ் –403          இளம்பூரணர்- “உரையாசிரியர்….!”

635.

நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்துங்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்

திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும். –தொல்காப்பியம்.

என் – எனின் இதுவுமொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று.

 

உலகு நிலமுதலாகிய ஐம்பெரும்பூதங் கலந்த மயக்கமாதலான் மேற்சொல்லப்பட்ட பொருள்களைத் திணையும் பாலும் வழாமல் திரிபுபடாத சொல்லோடே தழுவுதல் வேண்டும் என்றவாறு.


கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற்போறல்.


மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கியொன்றாதல் போறல்.


உலகமென்றது உலகினையும் உலகினுட் பொருளையும் , உலகமாவது முத்தும் மணியுங் கலந்தாற்போல நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுட் பொருள், பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி யொன்றானாற்போல வேற்றுமைப்படாது நிற்கும். அவ்விரண்டனையும் உலகம் உடைத்தாகலிற் கலந்த மயக்கமென்றார்.


இப்பொருள் எல்லாவுலகத்தையும் விட்டு நீங்காமையின் இவற்றை ஒருமுகத்தான் நோக்க வேறுபாடிலவா மாதலான் மேற்கூறிப் போந்த முறையினான் வேறுபடுத்து இரு திணையாகவும் ஐம்பாலாகவும் இயன்ற நெறி வழுவாமைத் திரிபுபடாத சொல்லோடே புணர்க்க என்றவாறாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக