செவ்வாய், 31 மே, 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 1

மலைபடுகடாம் – அரிய செய்தி : 1
பண்டைய இசைக் கருவிகள்
திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
திண்வார் விசித்த மிழவொடு ஆகுளி
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்
மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம்குழல் துதைஇ
நடுவுநின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை
கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி
நொடி தரு பாணிய பதலையும் பிறவும்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் கருக்கில் காய கலப்பையிர்
                   பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 1 – 13 

                              செல்வத்தை உண்டாக்கும் மழையைப் பெய்த , இருண்ட நிறத்தையுடைய மேகம், வானில் நின்று முழங்கும் ஓசையைப் போல, பண்களின் ஓசை. தன்னுடைய கண்களிலிருந்து தோன்றுமாறு, திண்ணிய வாரினால் இறுக விசித்துக் கட்டப்பட்ட மத்தளத்துடன், சிறுபறையும், நன்றாக உருக்கித் தகடாக வார்க்கப்பட்ட  கஞ்ச தாளமும், விளங்குகின்ற கரிய பீலியை அழகிய தழை எனக் கட்டியுள்ள ஊது கொம்பும், கணுக்களின் நடுவே வெற்றிடம் உண்டாகுமாறு திறக்கப்பட்டுள்ளதும், யானையின் துதிக்கை போன்றதுமாகிய நெடுவங்கியமும், இளி என்னும் நரம்பின் ஓசையைத் தன்னகத்தே கொண்டு ஒலிக்கும் குறிய சிறந்த தூம்பும், பாட்டினை அதற்குரிய சுருதி குறையாமல் தன்கண் கொண்டு விளங்கும்  இனிய குழலும் இணைந்து விளங்க, கண்களுக்கு நடுவில் நின்று ஒலிக்கும் நரம்பின் ஓசையையுடைய கரடிகை என்னும் கருவியும். விளக்கத்தையுடைய தாளத்துடன் ஒத்து ஒலிக்கும் வலிய வாயினையுடைய சல்லிகை என்னும் பறையும்,
                              மாத்திரையின் அளவினைக் காட்டும் தாளத்தினையுடைய ஒருகண் மாக்கிணையும், கூறப்படாத பிற இசைக் கருவிகளும், கார்காலத்தில் பழுத்து விளங்கும் பலா மரத்தின் காய்களை மிகுதியாக உடைய கொத்துப் போல, தம்மில் ஒத்த கனத்தையுடையனவாக முடிச்சுக்களாகக் கட்டிக் காவடியில் தொங்குமாறு அமைந்த இசைக் கருவிகளின் மூட்டைகளை ஏந்தியவர்காளாய்க் கூத்தர்கள் சென்றனர்.
 எல்லா இசைக்கருவிகளுக்கும் மத்தளம் அடிப்படையாக விளங்குதலால் முதலில் கூறப்பட்டது,
                            தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி,  கஞ்சக் கருவி எனும் நால்வகைக் கருவிகளும் ஈண்டுச் சுட்டப்பட்டுள்ளன
( ஆகுளி – சிறுபறை ; பாண்டில் – கஞ்சதாளம் ; அடர் – தகடு ; கோடு – கொம்பு ; உயிர் – துதிக்கை ; தூம்பு – நெடுவங்கியம் ; பீலி – இசைக்கருவி ; இளி – ஏழு நரம்புகளில் இளி என்னும் நரம்பில் எழும் ஓசை ; பயிர் – அழைத்தல் ; தட்டை – கரடிகை  / தட்டைப்பறை ; எல்லரி – சல்லிகை / பறை ; நொடி – கூறுதல் ;‘ பதலை -  ஒருகண் மாக்கிணை ; துணர் – கொத்து ; கலம் – இசைக்கருவி ; பரம் – மேலாகிய ; பையிர் – பை உடையிர்.) 

திங்கள், 30 மே, 2016

மலைபடுகடாம் – ( கூத்தராற்றுப்படை)

மலைபடுகடாம் – ( கூத்தராற்றுப்படை)
பத்துப்பாட்டு வைப்புமுறையில் இறுதியாக இடம்பெற்றுள்ளது மலைபடுகடாம். நன்னன்சேய் நன்னனை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பாடிய இப்பாடல் 583 அடிகளைக் கொண்டது. யானை போன்ற மலையிடத்து யானை முழக்கம்போல் பல்வகை ஒலிகள் எழுவதைக் குறிக்கும், ‘ மலைபடுகடாம் மாதிரத்து இயம்ப’ என்ற அடியில் வரும் ‘ மலைபடுகடாம்’ என்பது நூலுக்குப் பெயராயிற்று.
     மலைக்கு யானையை உவமித்து, அதன்கண் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்தமையால் இப்பாட்டிற்கு ‘ மலைபடுகடாம்’ எனப் பெயர் அமைந்தது.
     “ இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
பல் குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியது.” 

ஞாயிறு, 29 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 18

பட்டினப்பாலை – அரிய செய்தி – 18
பிரிவறியாக் காதல்
திருமா வளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம் அவன்
கோலினும் தண்ணிய தடமென் தோளே
               கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 299 – 301
திருமாவளவன், பகைவரைக் கொல்வதை நோக்கமாகக் கொண்டு உயர்த்திய வேலைக் காட்டிலும், தலைவன் கடந்து செல்ல வேண்டிய காடுகள் மிகவும்  வெம்மையானவை, அச்சத்தைத் தருபவை.
அவன் செங்கோலினும், தன் காதலியின் மெல்லிய தோள்கள் குளிர்ந்து இன்பம்  பயப்பவை.
  நெஞ்சே ! பிரியாது வாழ்வதையே தலைவியின் தோள்கள் விரும்புகின்றன. பிரிந்து செல்வதை அவற்றால் தாங்கிக் கொள்ள இயலாது. ஆதலால், பட்டினம் பெறுவதாயினும் என் காதலி ஈண்டு என்னைப் பிரிந்து தனித்திருப்ப, யான் நின்னுடன் வருதல் இயலாது, இனி, அங்குச்சென்று வாழ்வாயாக எனத் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறிச் செலவழுங்குவதாகப் பட்டினப்பாலை என்னும் இவ்வக நூல் அமைந்துள்ளது.
முற்றும்  

சனி, 28 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 17

பட்டினப்பாலை – அரிய செய்தி – 17
காடு கொன்று …..
 காடு கொன்று நாடு ஆக்கி
குளம் தொட்டு வளம் பெருக்கி
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி
கோயிலொடு குடி நிறீஇ
                              கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 283 -286
                         சோழ மண்டலத்தில், காடாகக் கிடந்த  இடங்களை அழித்துப் பண்டு போலக் குடிமக்கள் வாழும் நிலமாக்கினான். தூர்ந்த குளங்களைத் தோண்டி, நாட்டின் செல்வ வளத்தைப் பெருக்கினான்.
 பெரிய நிலைகளை உடைய மாடங்களைக் கொண்ட உறந்தை என்னும் தன் ஊரைத் தலைநகராக்கினான், கோயில்களையும் பழைய குடியிருப்புகளையும்  முன்பு இருந்ததுபோல் நிலை நிறுத்தினான்.
                        அரிய ஆற்றல்கள் நிறைந்த திருமாவளவன் , சோழ நாட்டிற்குப் புதிய தலைநகராக உறந்தையை (உறையூர்) உருவாக்கினான். 

வெள்ளி, 27 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 16

பட்டினப்பாலை – அரிய செய்தி – 16
திருமாவளவன் – ஆற்றல்
மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே
வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் எனத்
தான் முன்னிய துறை போகலின்
                           கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.   271 - 273
 திருமாவளவன் தெய்வத்தன்மை உடையவன் ஆதலின் மலைகளை யெல்லாம் அகழ்தலைச் செய்வான் என்றும் கடல்களை எல்லாம் தூர்த்தலைச் செய்வான் என்றும், தேவர் உலகத்தை மண்ணில் விழச் செய்வான் என்றும் காற்றை இயங்காமல் விலக்குவான் என்றும் உலகத்தார் பாராட்டும்படி தான் கருதிய துறைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான்.
மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே – என்றது கல்லணை குறித்த செய்தியாக இருக்கலாம். 

வியாழன், 26 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 15

பட்டினப்பாலை – அரிய செய்தி – 15
கொண்டி மகளிர்
கொண்டி மகளிர் உண் துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ
                             கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.  246 – 248
திருமாவளவனால் சிரைப்படுத்திக் கொண்டுவரப்பட்ட பகை மன்னர்களின் உரிமை மனைவியர் பலரும், நீர் உண்ணும் துறைகளில் நீராடுவர், அம்பலங்களை மெழுக்கிட்டு த் தூய்மை செய்வர், அந்திப் பொழுதில் விளக்குகளை ஏற்றி, தெய்வம் உறையும் தறிகளுக்கு மலர் சூட்டி வழிபாடு செய்வர். 

புதன், 25 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 14

பட்டினப்பாலை – அரிய செய்தி – 14
திருமாவளவன் – அரசுரிமை
……………………………. கூர் உகிர்க்
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு
பிறர் பிணியகத்து இருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்தி குழி கொன்று
பெருங்கை யானை பிடி புக்காங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப்பு ஏறி வாள் கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்தி
                          கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.  220 – 227
                            கூர்மையான நகங்களையும் வளைந்த வரிகளையும் உடைய புலிக்குட்டி, கூட்டுக்குள் அடைப்பட்டு வளர்ந்தது போலத் திருமாவளவன் பகைவர் காவலில் சிறைப்பட்டுக்கிடந்தனன், அவனுடைய பெருமை, காழ்ப்பு ஏறியதுபோல் முதிர்ச்சியுற்றது, தன்னுடைய நுண்ணுணர்வினால் செய்யத்தக்க செயல்களை அவன் ஆராய்ந்து கண்டனன்.
                            பெரிய கைகளை உடைய யானை, தன்னை அகப்படுத்திய குழியின் ஏறுதற்கரிய கரைகளைத் தன் கோட்டால் குத்திக் குழியைத் தூர்த்து வெளிப்பட்டுத் தன்னுடைய பிடியை அடைவதுபோலத் திருமாவளவன், தன்னுடைய பகைவர்களின் நெருங்கிய வலிய காவலாகிய வாட்படையை வென்று அவர்தம் காவலிலிருந்து புறம் போந்தனன், அவன் தன்னுடைய அச்சம் பொருந்திய அரச உரிமையை முறைப்படி பெற்றனன்.
“ தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி “ – பொருநராற்றுப்படை.
( கொடுவரி – புலி (ஆகுபெயர்) ; உகிர் –நகம் ; பீடு – பெருமிதம் ; காழ்முற்றி – வயிரமாக முதிர்ந்து ; தாயம் – அரசுரிமை ;  உரு – உட்கு , அச்சம்.) 

செவ்வாய், 24 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 13

பட்டினப்பாலை – அரிய செய்தி – 13
பட்டினம் பெறினும்….!
பல் ஆயமொடு பதி பழகி
வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்
 சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே
                            கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 213 - 220
குற்றமற்ற பிறநாடுகளில், அறிவு சான்ற சுற்றத்தையுடைய, விழாக்களை நிகழ்த்திய பழைய ஊரில் உள்ள பலரும், புகார் நகரில் சென்று குடியேறினார் போல –
பற்பல குடிமக்களுள் உயர்ந்தவர்களாய்த் தத்தம் நிலங்களைக் கைவிட்டு, நீங்கிப் புகார் நகரை அடைந்த பல மொழிகளில் திறமை சான்ற மக்கள், இவ்வூரில் உள்ள நன்மக்களுடன் கூடிப்பழகி இனிதே வாழ்கின்றனர். இத்தகைய குறைவுபடாத தலைமையை உடையது காவிரிப்பூம்பட்டினம்.
 நீண்ட கரிய கூந்தலையும், விளங்கும் அணிகலன்களையும் உடைய என் காதலி என்னைப் பிரிந்து தனித்திருப்ப, அவளைத் துறந்து யான் நின்னுடன் வருதல் இயலாது . நெஞ்சே..! நீ சென்று வாழ்வாயாக -  அதாவது ….. குறையாத செல்வ வளமுடைய காவிரிப்பூம்பட்டினமே எனக்கு உரிமையாகக் கிட்டுவதாயினும், என் காதலியைத் துறந்து உன்னுடன் வருதல் இயலாது எனத் தன் நெஞ்சை முன்னிலைப்படுத்தித் தலைவன் கூறினான். 

திங்கள், 23 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 12

பட்டினப்பாலை – அரிய செய்தி – 12
கடல் வாணிகம் - புகார் துறைமுகம்
செல்லா நல்லிசை அமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
                 கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.184 – 193
                    கெடாத நல்ல புகழையுடைய தெய்வங்கள் துணைபுரிந்து பாதுகாப்பதால், வணிக வீதிகளின் செல்வம் அளவிடற்கரியதாயிற்று.
                     மரக்கலங்களில் ஏற்றபட்டுக் கடல் வழியாகக் காற்றின் துணையினால், நிமிர்ந்து செல்லும் கதியையுடைய, குதிரைகள் கொண்டுவரப்பட்டன.
                    கரிய மிளகுப் பொதிகளும், வடமலையாகிய மேரு மலையில் தோன்றிய மாணிக்க மணிகளும், சாம்புநதம் என்னும் பொன்னும், பொதிய மலையில் தோன்றிய சந்தனமும், அகில்கட்டைகளும் கீழ்த் திசைக் கடலில் விளையும் பவளங்களும், கங்கையாற்றைச் சார்ந்த பகுதிகளில் உற்பத்தியாகும் பொருள்களும், காவிரிக்கரைப் பகுதியில் விளையும் பொருள்களும், ஈழ நாட்டின் உணவுப் பொருள்களும், கடார நாட்டில் உண்டாகும் நுகர் பொருள்களும், சீனம் முதலிய பிற நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கருப்பூரம், பன்னீர், குங்குமம் போன்ற பொருள்களும், இவை தவிர பெரிய பல பொருள்களும் நிலத்தின் முதுகு நெளியும்படி, நீர் வழியாகவும், நிலத்தின் வழியாகவும் புகார் நகரத்தில் விற்பனை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டன.
              அப்பொருள்கள், புகாரின் கடற்பரப்பிலும் கரையிடத்தும் அழிவில்லாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
( வடமலை – மேருமலை ; குடமலை – பொதியில் ; தென்கடல் ; தாமிரபரணி கடலொடு கலக்கும் பகுதி , கொற்கைத் துறை; குணகடல் – கீழ்த் திசைக் கடல் ; துகிர் – பவளம் ; வாரி – வருவாய் ; காழகம் – கடாரம் ; ஆக்கம் – நுகர்பொருள் ; பொன் னீ -  சாம்பூநதம் என்னும் வகை , மேருமலையின் தென்பாலுள்ள நாவல் மரத்தின் கனிச் சற்றிலிருந்து உண்டாகும் பொன்.  வடதிசை மாமலைச் சுடர்விடு பொன்னும் ‘ பெருங்கதை 1: 58: 33.  சாம்பு (பூ) நதம் – நால்வகைப் பொன்னுள் ஒன்று ; மேருமலைக்கு வடக்கிலுள்ள நாவற்சாறுள்ள ஆறு. த. த. அகரமுதலி , ப. 447. ஆய்க.) 

ஞாயிறு, 22 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 11

பட்டினப்பாலை – அரிய செய்தி – 11
சொற்போர் மண்டபம்
பல்கேள்வித் துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர்
உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்
         கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.169 – 171
பலவாறு கேட்டறிந்தும், பலநூல்களை முழுமையாகக் கற்றறிந்தும் பெரிய ஆணையை உடைய நல்லாசிரியர்கள், பிறரிடம் சொற்போர் நிகழ்த்துவதற்கு நாட்டி வைத்த கொடிகள் பலருக்கும் அச்சத்தைத் தருவன.
ஒப்பு நோக்கு:
நல் வேள்வித் துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின் – (மதுரைக் காஞ்சி) 

சனி, 21 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 10

பட்டினப்பாலை – அரிய செய்தி – 10
வணிகர் நேர்மை
நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நன்னெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டி துவன்று இருக்கை
                    கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 206 – 212
                             வணிகர்கள், வளைந்த கலப்பையைக் கொண்டு, உழவுத் தொழிலை விரும்பிச் செய்யும் உழவர்களின் நீண்ட நுகத்தடியின் நடுவில் தைக்கப்பட்டுள்ள பகலாணி போல, நடுவு நிலை என்ற குணம் நிலைபெற்று விளங்கும் நல்ல உள்ளம் உடையவர்கள் ; பொய் உரைப்பின் தம் குடிக்குப் பழிச் சொல் வந்து சேரும் என அஞ்சி உண்மையே கூறுவர்.
வணிகர்கள், தம்முடைய பல பண்டங்களையும் பிறருடைய பல பண்டங்களையும் வேறுபடுத்தி நோக்காமல் ஒப்ப ஆராய்ந்து காண்பர்.
                      தாம் கொள்ளும் பொருள்களை மிகுதியாகக் கொள்வதில்லை ; தாம் கொடுக்கும்  பொருள்களையும்  குறைவாகக் கொடுப்பதில்லை.
                          தங்களுக்கு வரக்கூடிய இலாபத்தை வெளிப்படையாகக் கூறி வணிகம் செய்வர். இந்நெறியில் அவர்கள் நின்றமையால் அவர்கள் வணிகத்தில் சிறந்த செல்வத்தால் மிகுந்து விளங்கினர்.
( பகல் – பகலாணி ; கொண்டி – கொள்ளப்படும் பொருள் / கொள்ளை ; இருக்கை – குடியிருப்பு.) 

வெள்ளி, 20 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 9

பட்டினப்பாலை – அரிய செய்தி – 9
வணிகர் வீடுகள்
குறுந் தொடை நெடும் படிக்கால்
கொடுந் திண்ணை பல் தகைப்பின்
புழை வாயில் போகு இடைகழி
மழை தோயும் உயர் மாடத்து
                          கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 142 – 145
வணிக வீதியில் அமைந்துள்ள மாடங்கள், அருகருகே அமைந்த படிகளைக்கொண்டு, நீண்ட ஏணிகள் சார்த்தப்பட்டவை, வளைந்த திண்ணைகளை உடையவை, வீடுகள் பல கட்டுக்களைக் கொண்டு அமைந்தவை, சிறிய வாயிலும், பெரிய வாயிலும் பெரிய இடைகழிகளும் பெற்றவை, மேகங்கள் தீண்டும் உயர்ச்சியை உடையவை.
( படிக்கால் – ஏணி ; கொடுந்திண்ணை – சுற்றுத்திண்ணை ; தகைப்பு – கட்டுக்கள் ; புழை – சிறிய வாயில் .) 

வியாழன், 19 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 8

பட்டினப்பாலை – அரிய செய்தி – 8
கடல் வாணிகம் – சுங்க வரி
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியா பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெருங் காப்பின்
வலியுடைய வல் அணங்கின் நோன்
புலி பொறித்து புறம் போக்கி   
                     கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 128 -  135
                  மேகங்கள் மழைக் காலத்தில் இடையறாது செய்யும் தொழிலைப் போல, அளந்து  கூற இயலாத அளவற்ற பொருள்கள், அத்தெருவில் அமைந்துள்ள அரிய காவலையுடைய பண்ட சாலையில் வந்து குவிந்திருந்தன, அப்பொருள்கள், கடலில் செல்லும் மரக்கலங்களில் ஏற்றப்படுவதற்காகக் குவிக்கப்பட்டிருந்தன.
வலிதாய் வருத்தும் தன்மை கொண்ட புலியின் இலச்சினையைப் பொறித்துப் பண்ட சாலையின் வெளியே அனுப்பப்படும் பொருள்களுக்கும் சுங்கம் விதிக்கப்பட்டது.
( அருங்கடி – அரிய காவல் ; உல்கு – சுங்கம் ) 

புதன், 18 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 7

பட்டினப்பாலை – அரிய செய்தி – 7
மாளிகை மகளிர்
பெறற்கரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூமலி பெருந்துறை
துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும்
                           கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.104 - 110
                            பெறுதற்கு அரிய பழைய தலைமையுடைய துறக்க உலகத்தைப் போன்று, நெடிய தூண்கள் கொண்ட மாடங்கள் விளங்கும். அவற்றில் உறைபவர், பாடல்களைக் கேட்பர், நாடகங்களை விரும்பி நோக்குவர், வெண்ணிலவின் பயனைத் துய்ப்பர். தாம் உடுத்திய பட்டாடைகளை நீக்கிப் புணர்ச்சிக் காலத்திற்கென மெல்லிய வெண்ணிறத் துகிலை உடுத்துவர், கள் குடித்தலைக் கைவிட்டு இனிய மதுவை (காம பானத்தை) விரும்பி உண்பர், மதுவின் மயக்க மிகுதியால் மகளிர், தம் கணவர் சூடிய கண்ணியைத் தம் கோதையாக நினைத்துத் தங்கள் கூந்தலில் சூட்டிக் கொள்வர். மகளிர் கூந்தலில் அணிந்திருந்த கோதையை, ஆடவர் தங்கள் கண்ணியாக நினைத்துத் தங்கள் தங்கள் தலையில் சூட்டிக் கொள்வர், கணவனைக் கூடிய மடப்பத்தையுடைய மகளிர், இரவின் கடையாமப் பொழுதில் துயில் கொள்வர்.
( துகில் – மென்மையான ஆடை ; கண்ணி – ஆடவர், தலையில் சூடும் மாலை ; கோதை – மகளிர் மார்பில் அணியும் மாலை ,) 

செவ்வாய், 17 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 6

பட்டினப்பாலை – அரிய செய்தி – 6
நீராடல்
 தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும்
                               கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.   99 – 100
               பரதவர், தங்கள் தீவினைகள் நீங்குவதற்காகக் காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் நீராடுவர்.கடல் நீரில் குளித்தமையால் உடலில் படிந்த உப்பு  நீங்குவதற்காக நன்னீரில் நீராடுவர்.
தீவினை நீங்கக் கடலாடுதல் இன்றும் வழக்கில் உள்ளமை நோக்குக. 

திங்கள், 16 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 5

பட்டினப்பாலை – அரிய செய்தி – 5
பரதவர் வழிபாடு – உவா நாள்
சினைச் சுறவின் கோடு நட்டு
மனைச் சேர்த்திய வல் அணங்கினான்
மடல் தாழை மலர் மலைந்தும்
புன்தலை இரும் பரதவர்
பைந்தழை மா மகளிரொடு
பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது
 உவவு மடிந்து உண்டு ஆடியும்
                            கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 87 – 93
                    சிவந்த தலைமயிரினையுடைய பெரிய பரதவர்கள், உவா நாளில் பரந்த, கரிய, குளிர்ந்த கடலில் மீன் பிடிக்கச் செல்வதில்லை, அவர்கள், அந்நாளில் தங்கள் தொழிலில் தோன்றும் ஊக்கம் தவிர்ந்து காணப்படுவர். அவர்கள், பசுமையான தழையாடை உடுத்திய கரிய, தம் மனைவியருடன் கூடியிருப்பர்.
                  பரதவர், சினைகளை உடைய சுறாமீனின் கொம்பை நட்டு, அதில் வலிய தெய்வத்தை நிறுத்தி வழிபடுவர்.
                     அவ்வழிபாட்டின் பொரிட்டு, விழுதுகளைக் கொண்ட தாழையின் அடிப்பகுதியில் வளர்ந்துள்ள, வெண்கூதாளியின் குளிர்ந்த பூக்களால் ஆகிய மாலையை அணிவர், மடலையுடைய தாழையின் மலரைச் சூடுவர், சருக்கரை உடைய பனைமரத்தினின்றும் எடுக்கப்பட்ட கள்ளைனை உண்பர், நெல்லால் ஆக்கப்படும் கள்ளினையும் உண்டு விளையாடுவர்.
( பரதவர். சுறா மீன்களால் தங்களுக்கு  எவ்வகை இடையூறும் நேராமல் அத் தெய்வம் காக்கும் என நம்பினர்.)
( உவவு – உவா நாள். மதி நிறை நாள் ; காழ் – காம்பு .) 

ஞாயிறு, 15 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 4 அ

பட்டினப்பாலை – அரிய செய்தி – 4 அ                        
  கரிய பனைமரத்தில் உறையும் பறவைகள், செருக்குடைய பரதவச் சிறுவர்கள், கவணில் வைத்து, வீசி எறியும் கற்களுக்கு அஞ்சி, பறந்தோடும்.
                    புகார் நகரத்தின் புறத்தேயுள்ள சேரிகள், இத்தகைய பனை மரங்களையும், குட்டிகளையுடைய பன்றிகளையும் பலசாதிக் கோழிகளையும், உறை வைத்து அமைக்கப்பட்ட கிணறுகளையும் உடையன.
( ஆட்டுக் கிடா, சேவல், கெளதாரி போன்றவற்றைத் தம்முள் மோதவிட்டு விளையாடுவது கடற்கரை மணற்பரப்பில் நடைபெறும், அப்பந்தயத்தில் இரு குழுக்களிடையே முரண்பாடு தோன்ற  இரு தரப்பினரும்  கட்டிப் புரண்டு சண்டை இடுவர் ---  முரண் களரி – சண்டை யிடும் களம் ; போந்தை – பனை ; ஒக்கல்  - சுற்றம் ; அடும்பு – அடப்பம் பூ ;  மேழகத் தகர் – ஆட்டுக் கிடா.) 

சனி, 14 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 4

பட்டினப்பாலை – அரிய செய்தி – 4
பண்டைய விளையாட்டுகள்
நீல் நிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாள்மீன் விராஅய கோள்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி
பெருஞ் சினத்தான் புறக் கொடாது
இருஞ் செருவின் இகல் மெய்ம்பினோர்
கல் எறியும் கவண் வெரீஇப்
புள் இரியும் புகர்ப் போந்தை
பறழ்ப் பன்றி பல் கோழி
உறைக் கிண்ற்றுப் புறச்சேரி
மேழகத் தரொடு சிவல் விளையாட
                                கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 67 – 77
                        அகன்ற இடத்தையுடைய மன்றத்தில் ஆட்டுக் கிடாக்களையும்  கெளதாரிப் ( குறும்பூழ் / காடை)பறவைகளையும் மோதவிட்டுப் போர் புரியச் செய்ய்யும் விளையாட்டைக் காண்பதற்காகப் பலரும் ஒருங்கு கூடுவர். அக் காட்சி, நீல நிறத்தையுடைய வானத்தில் வலமாக எழுந்து செல்லும் நாள் மீன்களுடன் கூடி நிற்கும் கோள்மீன்களைப் போல் விளங்கும்.
                            பொழுதுபோக்க, விளையாட்டை மேற்கொள்ளும்போது, அவர்களிடையே தோன்றும் மாறுபாடு காரணமாக வலிமை மிக்குப் பெருஞ்சினம் கொள்வர், பகைத்த வீரர்கள் புறமுதுகிட்டு ஓடாமல், கையால் குத்தியும் படைக் கருவிகளால் வெட்டியும், ஒருவர் உடலுடன் ஒருவர் உடல் பொருந்தியும் போர் புரிவர். இவ்வாறு தங்களுக்குள் முரண்பட்டுப் புரியும் பகையைத் தவிர, செருக்குடைய குடிமக்கள் பலரும் கலங்கி வருந்துவதற்கு ஏதுவாகிய பகை, சோழ நாட்டில் இல்லை. 

வெள்ளி, 13 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 3

பட்டினப்பாலை – அரிய செய்தி – 3
கல் – புறா உணவு
பூதம் காக்கும் புகல் அருங் கடிநகர்
தூது உண் அம் புறவொடு துச்சில் சேக்கும்
முது மரத்த முரண் களரி
   கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 57 – 59

பூதங்கள் காக்கின்ற, ஒருவரும் புக முடியாத காவலையுடைய காளி கோட்டத்தின்கண் கல்லை உணவாக உண்டு வாழும் அழகிய புறாக்களுடன் குடியிருப்பாகத் தங்கும். இத்தகைய இளமரக்காவினையுடையது புகார் நகரம்.
( கடிநகர் – அச்சம் தரும் காளி கோயில் ; தூது உண் அம் புறவு – கல்லைத் தின்னும் அழகிய புறா ; துச்சில் – குடியிருப்பு.) 

வியாழன், 12 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 2

பட்டினப்பாலை – அரிய செய்தி – 2
இரண்டு ஏரிகள்
மழை நீங்கிய மா விசும்பில்
மதி சேர்ந்த மக வெண்மீன்
உருகெழு திரள் உயர் கோட்டத்து
முருகு அமர் பூ முரண் கிடக்கை
வரியணி சுடர் வான் பொய்கை
 இருகாமத்து இணை ஏரி
                    கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 34 – 39

மழை நீங்கிய பெரிய ஆகாயத்தில், திங்களைச் சேர்ந்து விளங்கும் மகம் என்னும் வெண்ணிற நாள் மீனின் வடிவத்தைப் போன்ற வடிவத்தைக்கொண்டதாக வலிமையுடன் அமைக்கப்பட்ட உயர்ந்த கரைகளைப் பெற்ற நல்ல பொய்கை உள்ளது, பொய்கை, மணம் வீசும் பன்னிறப் பூக்களின் சேர்க்கையால், பல நிறத்துடன் காட்சியளிக்கும். மிக்க காம இன்பங்களைக் கொடுப்பதற்கு உரிய இணைந்த இரண்டு ஏரிகள் புகார் நகரின் புறத்தே உள்ளன.
மக வெண்மீன் வளைந்த நுகத்தடிபோல் விளங்கும் விண்மீன் கூட்டமாகும். புகார் நகரில் திங்களுக்குக் கோயில் இருந்தமை இதனால் அறியப்படும்.
ஒப்பு நோக்கு ;
இரு ஏரிகள் சோம குண்டம் சூரிய குண்டம் எனக் குறிப்பர் உரையாசிரியர்.
 ‘ சோமகுண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவனொடும்
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலர்’ (சிலம்பு. 9: 59)
இவ்வுலகில் இன்புறுதல், போக பூமியில் பிறத்தல் என இவ்விரு ஏரிகளும் தரும் பயன்களைக் குறிப்பார் அடியார்க்குநல்லார். 

பட்டினப்பாலை – அரிய செய்தி – 1

பட்டினப்பாலை – அரிய செய்தி – 1
                                        காவிரி யாறு
வசியில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 1 – 7
காவிரியாறு, குற்றம் இல்லாத புகழினை உடையது. கீழ் வானில் விளங்கித்தோன்றும் வெள்ளி என்னும் கோள் மீன், தான் நிற்றற்குரிய திசையாகிய வடக்கின்கண் நில்லாமல், தெற்குத் திசை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டால், நாட்டில் மழை பெய்யாது என்பர்.
நீர்த் துளிகளை உணவாக உண்டு வாழும் வானம்பாடிப் பறவைகள், உணவு வேண்டி, மேகங்களைச் சிறப்பித்துப் பாடும், அவை உணவின்றி ஏங்கித் தவிக்குமாறு மழை பெய்யாமல் பொய்த்த வறண்ட காலத்திலும், காவிரியாறு பொய்த்தலின்றி, நீர் நிறைந்து , குடகு மலையில் தோன்றிக் கடலை நோக்கிச் சென்றடையும். காவிரியாற்றின் தண்ணீர் எங்கும் பரவிப் பொன்னைத் தன் அலைகளாகிய கைகளால் கொழித்துக் கரையில் இடும்.
( வசை – குற்றம் ; வெண்மீன் – வெள்ளியாகிய மீன் ; திசை – தான் நிற்றற்குரிய வட திசை ; தளி உணவு – மழைத் துளியாகிய உணவு ;  புள் – வானம் பாடிப் பறவை ;வான்   மேகம் ; மலை – குடகு மலை.)
பி.கு. ‘ கரியவன் புகையினும் புகைக் கொடி தோன்றினும்
           விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
           காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை’ – சிலம்பு. 10: 102
ஈண்டு இளங்கோவடிகள் ” வாய்த்தலை”  ( நீரைத் தேக்கும் மதகு ) என்றது காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணையைக் குறித்து நின்றதைக் காண்க.
“ வனைகலந் திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓ இறந்து ஒலிக்கும் – மலைபடு. 474 – 475
 சேயாறு  - ஆற்று நீர் வாய்த்தலை வழியாகக் குமிழ்த்து வரும் .
 தலைவாய் – வாய்த்தலை – மதகு.
“காவிரிப் புதுநீர் கடுவரல் வாய்த்தலை

ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே… ( சிலம்பு. 10 : 108) ஈண்டு வாய்த்தலை என்றது கல்லணை.

செவ்வாய், 10 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி

பட்டினப்பாலை – அரிய செய்தி
பட்டினப்பாலை – இந்நூலைஇயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இந்நூல் 301 அடிகளைக் கொண்டது. பெரும்பாலும் வஞ்சியடிகளால் அமைந்துள்ளது. இந்நூலைப் பாடியமைக்காகக் கரிகால் பெருவளத்தான் இப்புலவருக்குப் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் என்று –
 ‘தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
 பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும் ‘ – என்று கலிங்கத்துப் பரணியும்
“பாடியதோர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு
கோடி பொன் கொண்டது நின் கொற்றமே ’ – என்று தமிழ்விடு தூதும் கூறும்.
பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத் திணையாதலின், இந்நூல் பட்டினப்பாலை எனப்பட்டது. பட்டினம் – காவிரிப் பூம்பட்டினம், பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.
இந்நூல் தலைவன், பொருள் தேடச் செல்லும் செலவு தவிர்த்து நெஞ்சிற்குக் கூறுவதாய் அமைந்துள்ளது. தலைவியை ஆற்றுவித்துப் பிரிவதற்காகத் தலைவன் செலவழுங்கியமை  பாடற்பொருளாம். 

ஞாயிறு, 8 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 11

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 11
களவு – கற்பு
 நேர்இறை முன்கை பற்றி நுமர்தர
நாடறி நன்மணம் அயர்கம் சில்நாள்
கலங்கல் ஓம்புமின் இலங்கு இழையீர் என
ஈர நன்மொழி தீரக் கூறி
துணைபுணர் ஏற்றின் எம்மொடு வந்து
துஞ்சா முழவின் மூதூர் வாயில்
உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன்
                                 கபிலர், குறிஞ்சிப் .  231 – 237
விளங்குகின்ற பூணினையுடையீர், நும்முடைய சுற்றத்தார் நும்முடைய நேரிய இறையையுடைய முன்கையைப் பிடித்து, எமக்குத் தர, நாட்டில் உள்ளார் யாவரும் அறியும் நன்றாகிய திருமணத்தைப் பின்பு நிகழ்த்துவோம். இக்களவொழுக்கத்தால் பெறும் பேரின்பத்தைப் பெறுவதற்காக யாம் சிறிது காலம் ஒழுகா (பழகி) நின்றோம், என்று நும் நெஞ்சு கலங்குதலைக் தவிர்ப்பீராக என்று அருளோடு கூடிய நல்ல சொற்களை இவள் நெஞ்சின் வருத்தம் தீரும்படி கூறினான், ஆவைப் புணர்ந்த ஏறு போல விடாமல் எம்முடன் தொடர்ந்து வந்து,  ஓசை ஒருகாலும் நீங்காத முழவினையுடைய பழைய நம் ஊர் வாயிலில் பலரும் நீர் உண்ணவரும் துறையின்கண் எம்மை நிறுத்தி நீங்கினான்.
 தலைவன், தலைவியின் முன்கையைப் பற்றி, நாடறி நன்மணம் சுற்றத்தார் சூழ நிகழ்த்துவம் என்றானாக. அவன் களவுப்புணர்ச்சியின் நிலை பேறின்மை தெரிந்து, மணமுடித்து எய்தும் கற்பு வாழ்வே நிலையானது என்பதை அறிவான்.
( இறை – கையில் வளையல் தங்குமிடம் ; ஈரம் – அன்பு ; உண் துறை – பலரும் நீர் உண்ணும் துறை,)
முற்றும் 

சனி, 7 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 10

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 10
மாலைக் காலம்  ( அன்றில் – பாம்பு மணி உமிழ்தல்)
மான்கணம் மரமுதல் தெவிட்ட ஆன்கணம்
கன்று உயிர் குரல் மன்றுநிறை புகுதர
ஏங்குவயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்குஇரும் பெண்ணை அகமடல் அகவ
பாம்புமணி உமிழ பல்வயின் கோவலர்
ஆம்பலம் தீம்குழல் தெள்விளி பயிற்ற
ஆம்பல் ஆயிதழ் கூம்பு விட வளமனைப்
பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர்
விண்தோய் பணவைமிசை ஞெகிழி பொத்த
வானம் மாமலை வாய்சூழ்பு கறுப்ப கானம்
கல்லென்று இரட்ட புள்ளினம் ஒலிப்ப
சினைஇய வேந்தன் செல்சமம் கடுப்பத்
துணைஇய மாலை துன்னுதல் காணூஉ
                                         கபிலர், குறிஞ்சிப் . 217 – 230
மான் கூட்டங்கள் மரங்களின் கீழ் திரண்டு கூடும் ; பசுக் கூட்டம் தம் கன்றுகளை அழைக்கும் ; ஊது கொம்பு போல் வளைந்த வாயினையுடைய அன்றில் பறவைகள், உயர்ந்த பெரிய பனையின் உள் மடலில் இருந்து தம் பேடுகளை அழைக்கும் ;  பாம்புகள் இரை தேடிச்செல்வதற்காகத் தம்மிடம் உள்ள மாணிக்க மணிகளை உமிழும் ; இடையர்கள் பல இடங்களிலும் நின்று ஆம்பல் என்னும் பண்ணினைத் தம் அழகிய இனிய குழலில் இசையை எழுப்புவர் ;  ஆம்பலின் அழகிய இதழ்கள் தளையவிழ்ந்து மலரும்; அந்தணர்கள் அந்திக்காலத்துச் செய்யும் கடன்களை இயற்றுவர் ; செல்வ மனைகளில் தொடி அணிந்த மகளிர் விளக்கு ஏற்றுவர் ;  காட்டில் வாழ்பவர் விண்ணைத்தீண்டும் பரண்களின் மேல் தீக்கடை கோலால் நெருப்பை உண்டாக்கி எரிப்பர். காட்டில் உள்ள விலங்களெல்லாம் கல்லென்ற ஓசையுடன் ஒன்றை ஒன்று அழைக்கும்;  பறவைகள் தம் கூடுகளிலிருந்து ஆரவாரம் செய்யும் ;  சினம் கொண்ட வேந்தன் படை நடத்திச் செல்லும் போர்க்களத்தைப் போல விரைந்த மாலைப் பொழுது வந்தது.
( தெவிட்ட – திரள ; பயிர் – அழைத்தல் ; மன்று – கொட்டில் ; வயிர் – ஊது கொம்பு ; பெண்ணை – பனை மரம் ; அகவ – அழைக்க ;  கொளுவி – கொளுத்தி ; ஞெகிழி – தீக்கடை கோல் ; இரட்ட – மாறி கூப்பிட.) 

வெள்ளி, 6 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 9

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 9
தேறல் உண்ட  மயில்
……………………………… அந்நிலை
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர          
ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ
ஆகம் அடைய முயங்களில் அவ்வழி
பழுமிளகு உக்க பாறை நெடுஞ் சுனை
முழுமுதற் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென
புள் ஏறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகுநறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்ச்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்
வரையர மகளிரின் சாஅய் விழைதக
                                  கபிலர், குறிஞ்சிப் . 184 – 195
தலைவன். தலைவியை அணுகிய அளவில்  தனக்கு இயல்பாகிய நாணமும் அச்சமும் இவளிடம் வெளிப்பட்டுத் தோன்றியமையால், விரைந்து அவனிடமிருந்து இவள் நீங்க முற்பட்டபோதிலும் அவன் விடாமல்,  அவளைக் கையால் அணைத்து, அவள் மார்பு, தன் மார்பில் ஒடுங்கும்படி தழுவினான்.
 பழுத்த மிளகு சிந்திக் கிடக்கின்ற கற்பாறையில் உள்ள நீண்ட சுனையில்,   மாவின் இனிய பழங்கள் உதிர்ந்தன, பலா விரிந்து தேன் சிந்தும் நறிய பழத்தானும் உண்டாகிய கள்ளின் தெளிவு நிரம்புவதால் தன்னை நுகரும் தேனீக்களை விலக்கி, தேனடைகள் உகுத்த தேனுடன், கலந்தது. அத்தேறலைத் தனக்கு உண்பதற்கு ஒத்த, எளிய நீராகக் கருதி, மயில் உண்டது, விழாக் கொள்வதற்கு உரிய இடங்களைக் கொண்ட அகன்ற ஊர்களில், விழா நடைபெறும் களத்தில் மேம்படச் சென்று, அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் ஒலிப்ப ஆடுகின்ற மகள், கழாய்க் கயிற்றில் ஏறி ஆடும் போது தாளத்திற்கு ஆற்றாது தளர்வதுபோல் மயில் தளர்ச்சியடையும்.
 மயிலின் தளர்ச்சியும் ஆடுமகளின் தளர்ச்சியும் புணர்ச்சியின்பின் தலைவி அடைந்த நிலையைக் குறிப்பால் உணர்த்தும்.
( ஒய்யென – விரைந்து (ஒலிக் குறிப்புச் சொல்) ; ஆகம் – மார்பு ; முயங்குதல் – தழுவுதல் ; உக்க – வீழ்ந்த / உதிர்ந்த ; கொக்கு – மாமரம் ; புள் – பறவை (ஈண்டு வண்டுகளைக் குறித்தது,) ; பிரசம் – தேன் ; செத்து – கருதி ; அயின்ற – உண்ட ; தோகை – மயில் ; சாறு – விழா ; நந்தி – மிகுந்து ;  ஆங்கண் – அவ்விடத்து ; வியல் ஊர் -  பெரிய ஊர்.) 

வியாழன், 5 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 8

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 8
       
தலைவன் விடுத்த அம்பு
…………………………………. வார் கோல்
உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணிமுகத்து அழுத்தலின்
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர
புள்ளி வரிநுதல் சிதைய நில்லாது
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள்
அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்ப
                                           கபிலர், குறிஞ்சிப் .169 – 175
நெடிய கோலையுடைய, உடுச் சேர்ந்த கடுவிசையையுடைய அம்பை, நன்றாக வலித்துத் தலைமையுடைய யானையின் அழகிய முகத்தே எய்தனன். அவ்யானையின் புள்ளியையும், புகரினையும் உடைய மத்தகம் அழகழியுமாறு, அம்புபட்டு உருவிய புண்களால் உமிழப்படும் குருதி, அதன் முகத்தே பரவிற்று, முருகனால் வருத்துதல் உற்ற மகளிர்க்கு, மறியறுத்து ஆடும் வெறியர் களத்தில், குருதி குதிக்குமாறு போலப் பெருகி வெளிப்படலால், அவ்யானை தன்னை மறந்து ஆண்டு நிற்றலாற்றாது புதுகிட்டுச் சென்றது.
( வார் கோல் – நீண்ட கோல் ; உடு – நாணைக் கொள்ளும் இடம் ; பகழி – அம்பு ; வாங்கி – வலித்து ; நுதல் – மத்தகம் ; அணங்குறு மகளிர் – வருந்துதல் உற்ற மகளிர் ;  நெடுவேள் – முருகன் ; ஆடுகளம் ;  வெறியாடல் களம்.)  

புதன், 4 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 7

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 7
தழை  உடுத்தி…
 கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியா
பைவிரி அல்குல் கொய்தழை தைஇ
பல்வேறு உருவின் வனப்பு அமை கோதை எம்
மெல்லிரு முச்சி கவின் பெறக் கட்டி
                                           கபிலர், குறிஞ்சிப் .   101 -104
புற இதழ்களை பறித்து நீக்கிப் பான்பின் படம் போன்று அகன்று விளங்கும் அல்குலுக்குத் தழையாடையைக் கட்டி உடுத்தினோம். பலவாய் வேறுபட்ட நிறத்தைக்கொண்ட அழகமைந்த மாலைகளை எம்முடைய கரிய தலைமுடியில் அழகு பெறச் சூட்டிக்கொண்டோம்.
தலைவியும் தோழியும் நீராடி, மலர்கள் பறித்து, இடையிடையே கிளிகளை ஓட்டி, தழையாடை புனைந்து அணிந்து, தலையில் மாலை சூடி, அசோக மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தனர்.
( கிளை இதழ் – புற இதழ் ; கொய் தழை – நறுக்கி மட்டம் செய்யப்பட்ட தழையாடை ; உரு – நிறம் ; கவின் – அழகு ; செயலை – அசோகு.)