வியாழன், 8 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1044


திருக்குறள் -சிறப்புரை :1044

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.--- ௧0௪௪

வறுமையானது இன்னார் இனியார் என்று பாராது. உயர்ந்த குடியில் பிறந்தாரிடத்தும்கூட வறுமை சூழ்ந்து, ஊரார் வாயில் இழி சொற்கள் பிறப்பதற்கும் காரணமாகி மிகுந்த துன்பத்தைத் தரும்.

“ செல்வம் கடைகொளச் சாஅய்ச் சான்றவர்
அல்லல் களைதக்க கேளிருழைச் சென்று
சொல்லுதல் உற்று உரைக்க அல்லாதவர்…..” –கலித்தொகை.

அறிவுடையோர், தம் செல்வம் தீர்ந்து வறுமையுற்ற போது, தம்முடைய துன்பத்தைத் தீர்ப்பதற்குத் தக்க உறவினரிடத்தே  சென்று, தம் குறையை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கிப் பின்னர் அதனை முழுதும் சொல்ல இயலாது தவிப்பர்.

1 கருத்து:

  1. உண்மைதான் ஐயா. அப்போது அவர்களுடைய மன நிலையை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.

    பதிலளிநீக்கு