வெள்ளி, 23 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1055


திருக்குறள் -சிறப்புரை :1055

கரப்பிலார் வையகத்து உண்மையான் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது. --- ௧0௫௫

கைப்பொருளை மறைத்து வைத்து இல்லையென்று கூறாது இல்லாதார்க்கு வழங்குபவர் உலகில் இருப்பதால்தான் இரந்து  வாழ்வோரும் அவர்களை நாடிச் செல்கின்றனர்.

“மழை அணி குன்றத்துக் கிழவன் நாளும்
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும்
சுடர்விடு பசும்பூண் சூர்ப்பு அமை முன்கை
அடுபோர் ஆனா ஆதன் ஓரி
மாரி வண்கொடை காணிய நன்றும்
சென்றதுமன் எம் கண்ணுளங் கடும்பே.” ---புறநானூறு.

முகில் சூழ்ந்த மலைகளுக்குத் தலைவன் ; நாள்தோறும் பட்டம் முதலாகிய பூண்களை அணிந்த யானைய இரப்போர்க்கு வழங்குபவன் ; சுடர் விடுகின்ற பசும்பொன்னால் செய்த பூணினையும் கடகம் அணிந்த முன்கையினையும் உடையவன் ; கொல்லும் போரைச் செய்யும் தலைவன் ; அத்தகைய ஆதன் ஓரியின் மழைபோலும் வண்கொடையைக் காண்பதற்காக எம்முடைய கூத்தச் சுற்றம் சென்றது.

1 கருத்து:

  1. தொடர்ந்து வாசிக்கிறேன் ஐயா. யானைய என்றுள்ளதே ஐயா? யானையை என்றிருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு