புதன், 21 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 59 : 19. நாழிகை வட்டில்


தொல்தமிழர் அறிவியல் – 59 : 19. நாழிகை வட்டில்   

19. நாழிகை வட்டில் /  நீர்க் கடிகாரம்

 கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
 சுடர்நிமிர் மின்னொடு வலனேர் பிரங்கி
என்றூழ் உழந்த புன்றலை மடப்பிடி
கைமாய் நீத்தங் களிற்றொடு படீஇய
நிலனும் விசும்பும் நீரியைந் தொன்றிக்
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர்மருங் கறியா தஞ்சுவரப் பாஅய்த்
தளிமயங் கின்றே தண்குரல் எழிலி….”
                 மதுரையாசிரியர் நல்லந்துவனார், அகம். 43 :  1 – 8
                          தண்ணிய முழக்கத்தைக் கொண்ட மேகங்கள் பெய்யும் கார்காலமானது, கடலின் நீரை முகந்து நிறைந்த சூலினையுடைய கரிய மேகம், ஒலிமிக்க மின்னலுடன் வலமாக எழுந்துசென்று ஒலித்து, ஞாயிற்றின் வெம்மையால் வருந்திய புற்கென்ற தலையினையுடைய இளைய பெண் யானை, மேலே உயர்த்திய தன் கையும் மறையத்தக்க ஆழ்ந்த வெள்ளத்தில் களிற்றுடன் படிந்து விளயாட, நிலத்தினும் வானினும் மழைக்கால் நீர் பொருந்திச் சேர்ந்திட, குறிய நீரையுடைய நாழிகை வட்டிலால் நாழிகை அளந்து கூறுவார் கூறலன்றி  ஞாயிறு உள்ள இடம் இதுவென அறியப்படாமையின் உலகம் அஞ்சுதலடைய, பரந்து பெய்யும் மழை
நாழிகைக் கணக்கர்

பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெரீஇய செல்வோய் நின்
குறுநீர்க் கன்னன் இனைத்து என்று இசைப்ப
     நப்பூதனார், முல்லைப். 5 : 55 – 58
                       நாழிகையை அளந்து இத்துணை என்று அறியும் பொய்த்தலில்லாத நாழிகைக் கணக்கர், மன்னனைக் கையால் தொழுதேத்திகடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லச் செல்கின்றவனே, உன்னுடைய நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்துணை காண்என்று மன்னனுக்கு அறிவிக்கின்றனர்.
மேலும் காண்க:
குறுநீர்க் கன்னலின் யாமம் கொள்பவர்” ( மணிமே.7)
   நாழிகைக் கணக்கர்,” ( சிலம்பு.5)

அறிவியல் நோக்கு
                      ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக  நேரத்தை  அளக்கவும் கண்காணிக்கவும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அறுபதற்குரிய முறை நேர அளவீடானது சுமேரியாவில் ஏறத்தாழ கி.மு 2000 ஆண்டு காலத்தைச் சேர்ந்ததாகும்.புராதன எகிப்தியர்கள் ஒரு நாளை இரண்டு 12-மணிநேர காலங்களாகப் பிரித்து, சூரியனின் நகர்வைத் தடமறிவதற்குப் பெரிய சதுரத்தூபிகளைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நீர்க் கடிகாரங்களையும் உருவாக்கினார்கள். இது முதன்முதலில் அநேகமாக அமுன்-ரி எல்லைப்பகுதியில் (Precinct of Amun-Re) பயன்படுத்தப்பட்டு, பின்னர் எகிப்துக்கு வெளியேயும் பயன்படுத்தப்பட்டது.
                              புராதன கிரேக்கர்கள் இவற்றை பெரும்பாலும் பயன்படுத்தினார்கள். அவர்கள் அவற்றை நீர்க் கடிகாரம் (கிளெப்சிட்ராக்கள்) என அழைத்தார்கள். கிட்டத்தட்ட அதே காலத்தில் ஷாங் மன்னர் பரம்பரையானது நீர் வழிந்தோடும் கடிகாரத்தைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இக்கடிகாரங்கள் கி.மு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசபோடோமியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும். சீனா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்திக் கடிகாரம், இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டைம்ஸ்டிக் (timestick) மற்றும் நீர்க் கடிகாரம் போல இயங்கிய மணல் சொரிந்து காலங்காட்டும் கருவியாகும்.------தொடரும்…..

1 கருத்து: