பதிற்றுப்பத்து
– அரிய செய்தி – 3 - 4
விருந்து – உணவு
தொல் பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக்
கொழுங்குறை
மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
குமட்டூர்க் கண்ணனார்.
பதிற்.12 : 15 – 18
சுற்றத்தார் நீண்ட நாட்களாகப் பசியால் வருந்திய துன்பம்
உடையர் - அவ்வருத்தம் தொலையுமாறு நின் ( இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன்) அரண்மனையில் அரிவாளால் பிளந்து அறுத்த வெள்ளிய நிணத்தோடு கூடிய கொழுவிய
துண்டாகிய ஆட்டின் இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட வெண்ணெல் அரிசியால் ஆன வெண் சோற்றினைப்
பூக்களின் அரும்புகளினால் அமைந்த தெளிந்த கள்ளோடு சேர்த்து உண்டனர். ( நனையமை கள் என்றது தென்னை – பனை – ஈந்து முதலியவற்றின் அரும்பு விரியாத
செவ்விப் பாளையில் அமைக்கப்படும் கள்.)
பதிற்றுப்பத்து
– அரிய செய்தி - 4
மழைக் கோள்
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇ
பூத்தன்று பெரும நீ காத்த நாடே
குமட்டூர்க் கண்ணனார்.
பதிற்.13 : 25 – 28
செவ்வாய்க் கோள் சென்ற வழியில் சுக்கிரன் கோள் செல்லாமல்
– மழை தேவையான இடங்களிலெல்லாம் நின் நாட்டில் மழை பெய்கிறது. நோயும் பசியும் நின் குடிகளுக்கு
இல்லாமல் நீ காத்து வரும் நாடுகள் பொலிவு பெற்று விளங்குகின்றன.( மழைக் கோளாகிய வெள்ளி
– செவ்வாயுடன் சேர்ந்தால் மழை இலதாகும் என்பது வானியல் அறிவியலா – ஆய்க.)