திங்கள், 31 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1093


இணையத்தில் என்னை இயக்கும்
இனிய தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்…நன்றியுடன்.

திருக்குறள் -சிறப்புரை :1093

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர். ------ ௧0௯௩

அவள் என்னை அன்புடன் நோக்கினாள் ; நோக்கிய நிலையில் குறிப்பொன்றினை மனத்திற்கொண்டு நாணித் தலைகுனிந்து நின்றாள். அஃது அவள்  மனமொத்தஅன்பாகிய காதல் பயிர் வளர நீர் பாய்ச்சியதைப் போலாயிற்று.

“ செல்வம் கடைகொளச் சாஅய் சான்றவர்
அல்லல் களைதக்க கேளிருழைச் சென்று
சொல்லுதல் உற்று உரைக்கல்லாதவர் போலப்
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின்
மெல்ல இறைஞ்சும் தலை. “ ----கலித்தொகை.

அறிவுடையோர், தம் செல்வம் தீர்ந்துவிட, வறுமையடைந்து, துன்புற்றுத் தம்முடைய வருத்தத்தைக் களைதற்குரிய தக்க உறவினரிடத்தே சென்று தம் குறையை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கிப் பின்னர் அதனை முடியச் சொல்ல மாட்டாது,தயங்கி நிற்பாரைப் போல, இவனும் நின்றனன் ; தான் கூறக் கருதியதனைக் கைவிட்டுப் பலமுறையாகப் பார்க்கும்; பின்னை யான் தன்னைப் பார்க்கின் தான் மெல்லத் தலை இறைஞ்சி நின்றனன்.

திருக்குறள் -சிறப்புரை :1092


திருக்குறள் -சிறப்புரை :1092

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது. --- ௧0௯

இவள் கண்கள் என்னை நேரே நோக்காது கடைக்கண்ணால் பார்க்கும் பார்வை, காமவிருப்பின் சரிபாதியன்று ; அதைவிடமேலானதாக, இசைவுக்கு அறிகுறியாகும்.

“பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவை யாயின் தருகுவென் பாலென
விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித்
திதலை அல்குல் எம்காதலி
புதவற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.”அகநானூறு.

பொன்னாலாகிய தாலியினை உடைய என் மகனை நினைந்து, இவண் வருதியாயின் தருகுவன் பால் என, ஒருக்கணித்து நோக்கும் அமரிய கண்ணினளாய், விரலால் அழைத்தலைப் பயிலச் செய்து, தன் புதல்வனைத் தன் கருத்துணராமை மறைக்கும் தேமல் படர்ந்த அல்குலினை உடைய எம் காதலியாய பூங்கொடி போல்வாள் நிலையினைக் காண்குவம்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1091


திருக்குறள் -சிறப்புரை :1091

110. குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. ----- ௧0௯௧

இவளுடைய மையுண்ட கண்களில் இரண்டு நோக்குகள் உள்ளன ;  அவற்றுள் ஒன்று நோய் செய்யவல்லது ; மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாக அமைவது. (நோக்கு – காதல் பார்வை)

“பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்
மற்று இந்நோய் தீரும் மருந்து அருளாய்…” –கலித்தொகை.

பெரிய அமர்த்த மையுண்ட கண்ணினை உடைய நின் தோழி, உறுத்தின பொறுத்தற்கரிய கவர்ச்சியைச் செய்யும் வருத்தம் கதுமென உயிரை வாங்கும் ; ஒண்டொடீ..! அஃது உயிரை வாங்காதபடி இந்நோய் தீர்தற்கான மருந்தை அருளாய்…!

சனி, 29 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1090


திருக்குறள் -சிறப்புரை :1090

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.---- ௧0௯0

காய்ச்சி எடுக்கப்பட்ட மது, உண்டார்க்கு  மட்டுமே அல்லாமல்;  காமம் போல் கண்டார்மாட்டு மகிழ்ச்சியினைச் செய்தல் இல்லை.

“ காமம் கணைந்து எழ கண்ணின் களி எழ
 ஊர்மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை
கள்ளின் களி எழக் காத்தாங்கு…” ---பரிபாடல்.

 தம் கண்ணில் தோன்றும் காமக் களிப்பை ஊரார்க்கு அஞ்சி மறைப்பவருடைய நிலைமை, கள்ளுண்டு அதனால் உண்டாகிய களிப்பைப் புறத்தார்க்குப் புலப்படாது மறைப்பவருடைய நிலைமையை ஒக்கும். தாமே தம்மை அறியாது வெளிப்படுத்திக் கொள்வர்.

வெள்ளி, 28 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1089


திருக்குறள் -சிறப்புரை :1089

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து. --- ௧0௮௯

பெண்மானை ஒத்த மடப்பத்தையுடைய பார்வையும் உடன்பிறந்த நாணத்தையும் அணிகலன்களாகக்கொண்ட  இவளுக்குச் செயற்கை அழகினைக் கூட்டுதற்குப் பிற அணிகலன்களைப் பூட்டுவது என்னபயன் உடைத்து..?

“கொலை உண்கண் கூர் எயிற்று கொய் தளிர் மேனி
இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி….” ----கலித்தொகை.

கொலைத் தொழிலை உடைய மையுண்ட கண்ணையும் கூரிய எயிற்றினையும் (பல்). தளிர்போன்ற மேனியையும் கண்டார் வருத்தும் அழகினையும் உடைய மாயோளே..! நின்னைக்காட்டிலும் சிறந்தார் மண்ணுலகத்து இல்லை என்பதை நீயே தெளிவாய்..! என்றான்.

வியாழன், 27 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1088


திருக்குறள் -சிறப்புரை :1088

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.---- ௧0௮ ௮
(ஒள் நுதல் ; ஓஒ  ; உட்கும் என்)

போர்க்களத்தில்  நேரில் எதிர்க்கத் துணியாது அச்சப்பட்டவர்களும் அஞ்சி ஒடுங்க, என்னுடைய பெருமை மிகுந்த வலிமையெல்லாம் இப்பெண்ணின் ஒளி பொருந்திய நெற்றியின் அழகு ஒன்றினாலே அழிந்துவிட்டதே.

“கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
தொழுதகு மெய்யை அழிவு முந்துறுத்துப்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றலின்
குவளை உண்கண் கலுழ நின் மாட்டு
இவளும் பெரும் பேதுற்றனள்…..” ----அகநானூறு.

விரைந்து செல்லும் தேரினை ஏவலாளருடன் தொலைவில் நிறுத்தி, இங்கு வந்து நிற்கும் பெருந் தன்மையாகிய இனிய குணம் உடையை ஆகின்றாய், அதுவேயன்றி, பிறர் வணங்கத்தக்க தோற்றத்தினையும் உடைய நீயும் மனம் நொந்து பல நாளும் வந்து, பணிந்த மொழிகளைப் பலகாலும் கூறலின் , இவளும் கருங்குவளை மலர் போன்ற மையுண்ட கண்கள் கலங்க, நின்னிடத்துப் பெரிய மயக்கத்தினை எய்தியுளாள்.

புதன், 26 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1087


திருக்குறள் -சிறப்புரை :1087

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். ---- ௧0௮௭

இவ்வழகியின் சாயாத இளமுலையின் மேல் அணியப்பட்டுள்ள துகிலானது, கொல்லும் மதம்பிடித்த யானையின்  முகத்திலிட்ட ‘முகப்படாம்’ என்னும் முகவணியை ஒத்திருக்கின்றது.

“ முலை முகம் செய்தன முள் எயிறு இலங்கின
தலைமுடி சான்ற தந்தழை உடையை
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்.” –அகநானூறு.

 அறிவினையுடைய இளைய மகளே…! நினக்கு முலைகள் அரும்பின ; விழுந்தெழுந்த கூரிய பற்கள் ஒளி கொண்டன ;  கூந்தல் முடித்தல் அமைந்தாய் ; குளிர்ச்சி பொருந்திய தழை உடை கொண்டாய் ஆதலின், நின் தோழியரோடு சுற்றித்திரிய எங்கணும் போகாதே..!

செவ்வாய், 25 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1086


திருக்குறள் -சிறப்புரை :1086

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். ---- ௧0௮௬

கண்ணழகைக் கூட்டிக் காதல் குறிப்புணர்த்தும் வளைந்த புருவங்கள் வளையாமல் நேரே மறைத்துநின்றால், இவளின் கண்கள் எனக்கு நடுக்கத்தைத் தரும் துன்பத்தைச் செய்ய மாட்டா.

“கண் கயல் என்னும் கருத்தினால் காதலி
பின் சென்றது அம்ம சிறுசிரல் –பின் சென்று
மூக்கி எழுந்தும் எறிகல்லா ஒண் புருவம்
கோட்டிய வில் வாக்கு அறிந்து. “ ---நாலடியார்.

தன் தலைவியினுடைய கண்களை மீன் என்று நினைத்துச் சிச்சிலிக்    (மீன் கொத்தி) குருவிகள் பின் சென்று பிடிக்க முயன்றும் மேலிருக்கும் வளைந்த புருவத்தை வில் என்று  நினைத்துப் பிடியாமல் நின்றன என்று தன் காதலியினுடைய அழகை வியந்து தலைவன் கூறினான்.

திங்கள், 24 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1085


திருக்குறள் -சிறப்புரை :1085

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம் மூன்றும் உடைத்து. ---- ௧0௮௫

  உயிரைப் பறிக்கும் கூற்றுவன் தானோ….ஈர்க்கும் தன்மையால், பெண்ணின் கண்கள் தானோ…. மருளும் பார்வையால் பெண் மானின் கண்களோ…. யாதென்று அறியேனே..! இப்பெண்ணின் கண்கள் இம்மூன்று தன்மைகளையும் உடையதாய் இருக்கின்றனவே..!

“ செய்வினைக்கு அகன்ற காலை எஃகுற்று
 திருவே றாகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக் காண் தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யான்… ….. ---- அகநானூறு.

பொருளீட்டும் வினைக்குப் பிரிந்து சென்ற காலத்தே…! கத்தியால் அறுக்கப்பெற்று, இரு பிளவாகிய விளங்கும் வனப்பினையுடைய மாவின் நறிய வடுப்போல,  காணும்தொறும் களிப்பு மேவுதல் குறையாத பார்வையினையுடைய மையுண்ட கண்களை, நினையாது கழிந்த நாளில், யான் சிறிதும் உயிர் தரித்திரேன் எனத் தெளிவித்து, நின்றதை நினைவுகூர்ந்தான் தலைவன்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1084


திருக்குறள் -சிறப்புரை :1084

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தான் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். ---- ௧0௮௪

பெண்ணிற்குரிய தன்மையுடைய இவளின் கண்கள், கண்டார் உயிரைப் பறிக்கும் தன்மை உடையனவாகிப் பெண் தகைமைக்கு மாறுபட்டிருந்தனவே.

“கண் ஆர்ந்த நலத்தாரைக் கதுமெனக் கண்டவர்க்கு
உள் நின்ற நோய்மிக உயிர் எஞ்சு துயர் செய்தல்
பெண் அன்று புனை இழாய் எனக் கூறித் தொழூஉம் தொழுதே
கண்ணும் நீராக நடுங்கினன்……” ---கலித்தொகை.

 உலகத்தில் கண் நிறைந்த அழகுடைய  மகளிரைக் கண்டவர்க்குக் கதுமென உள் நின்ற காம நோய் மிகுமானால், உயிர் போய்விடும் ; அத்துயரைச் செய்தல் அம்மகளிர்க்குப் பெண் தன்மை என்று கூறிக் கண்ணும் உருக நின்று நடுங்கினன்.

சனி, 22 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1083


திருக்குறள் -சிறப்புரை :1083

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.------ ௧0௮

கூற்று என்பதனை முன்பெல்லாம் நான் அறிந்திலன், இப்பொழுது நேரில் பார்க்கிறேன், அது பெண் தன்மையோடு பெரியதாகிய கண்களை உடையது என்று….!


”ஈங்கே வருவாள் இவள் யார் கொல் ஆங்கே ஓர்
வல்லவன் தைஇய பாவை கொல் நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள் கொல் வெறுப்பினால்
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம் கொல்……” -கலித்தொகை.

யான் நிற்கின்ற இவ்விடத்தே வருபவளாகிய இவள் யார்… வல்லான் ஒருவனால் இயற்றப்பட்ட ஒப்பில்லாத பாவையோ…. அன்றி, படைத்தல் தொழில் வல்ல அயனால் நல்ல அழகிய மகளிருடைய உறுப்புகள் எல்லாவற்றையும் ஒருசேரக் கொண்டு வடிவாகப் படைக்கப்பட்டாள் ஒருத்தியோ…. அன்றி, ஆடவர் மேலுள்ள வெறுப்பினால்  தன்னைக் கூற்றம் என்று பிறர் அறியாதபடி, மறைத்துப் பெண் வடிவுகொண்டு வந்த கூற்றமோ..?

வெள்ளி, 21 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1082


திருக்குறள் -சிறப்புரை :1082

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து. ----- ௧0௮

அவ்வழகியை யான் நோக்கிய அளவில் அவளும் எதிர் நோக்கினாள் ; அவள் நோக்கு, தன்னைத் தாக்கித் துன்புறுத்தவல்ல அணங்கு  (மோகினி) ஒரு படைகொண்டு வந்து தாக்கியதைப் போன்றதன்றோ..!

’கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழிபோல
சேயரி பரந்த மாஇதழ் மழைக்கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே.” -----நற்றிணை.

கொடிய வில்லை உடைய வேட்டுவன், கோட்டினை உடைய பன்றியை எய்து கொன்ற அம்பைப் போன்று, செவ்வரிகள் பரந்த கரிய புறவிதழ்களைக் கொண்ட குளிர்ச்சி பொருந்திய கண்களினால் இதுகாறும் நான் பெறாத பார்வையைப் பெற்ற, என் வருந்திய நெஞ்சம் உய்யும் வண்ணம் நன்முறையில் நகைசெய்து உரைப்பாயாக..!  

வியாழன், 20 டிசம்பர், 2018


இன்பத்துப்பால்
 109. தகையணங்குறுத்தல்

திருக்குறள் -சிறப்புரை :1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. --- ௧0௮௧

இச்சோலையில்  என்கண்முன்னே தோன்றிய இவள், தெய்வமகளோ…எழில் சாயலை உடைய மயிலோ…. குழை அணிந்த மானுடப் பெண்ணோ..? இவளை யார் என்று அறிய இயலாமல் மயங்குகின்றதே  என் நெஞ்சம்…!

“அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண்
 பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்
திருமணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல் ……….. ………..” ----நற்றிணை.

மிகத் துன்பம் அடைந்த, செவ்விய கோடுகள் படர்ந்த, வளப்பமும் குளிர்ச்சியும் உடைய கண்கள், பல பூக்களால் மாறுபடத் தொகுக்கப்பட்ட தழையாடை அசைய உருத்த அல்குல், அழகிய நீலமணி போலும் மேனி….! இவ்விளம் பெண் யாருடைய மகளோ..?


புதன், 19 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1080


திருக்குறள் -சிறப்புரை :1080

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. -----00

ஏதேனும் துன்பம் வந்து சேருமானால் கயவர், அத்துன்பத்தை எதிர்கொள்ளத் துணிவு கொள்ளாது, விரைந்து தம்மையே விலையாகக் கொடுத்துத் தப்பித்துக்கொள்ள முயல்வர். அஃதன்றி வேறு எத்தொழிலுக்கு உரியர் கயவர் ?
.கயவர் தன்மானம் காக்கும் தொழில் ஒன்றும் அறியார் என்பதாம்.

”கடுக்கெனச் சொல்வற்றாம் கண்ணோட்டம்  இன்றாம்
இடுக்கண் பிறர் மாட்டு உவக்கும் அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம் விறன் மலை நாட
வேகுமாம் எள்ளுமாம் கீழ். ----நாலடியார்.

கடுஞ்சொற்கள் பேசுவதும் ; யாரிடத்தும் இரக்கம் கொள்ளாமையும் ; பிறருக்கு நேரிடும் துன்பங்களைக்கண்டு மகிழ்ச்சி அடைவதும் ; அடிக்கடி சினம் கொள்வதும்;  கண்டவிடத்தும் வீணே சுற்றித் திரிவதும் ; பிறரை எள்ளி நகையாடுவதும் கீழ் மக்களாகிய கயவர்தம் இயல்பாம் என்க.
----பொருட்பால்----
முற்றிற்று

செவ்வாய், 18 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1079


திருக்குறள் -சிறப்புரை :1079

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். -----0௭

உழைத்த பொருளைக் கொண்டு நன்றாக உடுத்தும் உண்டும் வாழ்வாரைக் கண்டால், கயவர்கள் பொறாமை கொண்டு, அவரிடத்துக் குற்றம் இல்லையானும் குற்றம் காண்பதில் வல்லவர்கள்.

“ கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் தம் பெண் நீர்மை
சேடியர் போலச் செயல் தேற்றார் –கூடிப்
புதுப் பெருக்கம் போலத் தம் பெண் நீர்மை காட்டி
மதித்து இறப்பர் மற்றை யவர்.” ----நாலடியார்.

குடும்பப் பெண்கள் ஆடை அணிமணிகளாலே தம்மை வியக்கச் செய்து, பிறரிடத்துப் பொருள் பறிப்பதில்லை ; வேசியரோ அப்படிச் செய்வார்கள். அதுபோல், தம் குணங்களைக் காட்டி வியக்கச் செய்யாமல் அடங்கி இருப்பார்கள் ; கயவர்களோ வெகு மேன்மை உள்ளவர் போல் நடித்துக் காட்டிப் பிறரை வஞ்சித்துப் பொருள் பறித்துக்கொண்டு போவார்கள்.

திங்கள், 17 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1078


திருக்குறள் -சிறப்புரை :1078

 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். ----0௭

 சான்றோர், மெலியோர் குறையைக் கேட்டவுனே அவர்தம் குறையைப் போக்குவர்;  கீழ் மக்களோ, கரும்பை அடித்து நொருக்கிப் பிழியப் பயன்படுவதைப் போல, வலியோர் வலிமைக்கு அடங்கியே பயன் தருவர்.

“கடித்துக் கரும்பினைக் கண் தகர நூறி
 இடித்து நீர் கொள்ளினும் இன்  சுவைத்தே ஆகும்
 வடுப்பட வைது இறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயில் சிதைந்து. “ -----நாலடியார்.

கரும்பை, கடித்துக் கணுக்கள் உடையும்படி நெரித்து, ஆலையில் இட்டுத் துவைத்துச் சாறு எடுத்தாலும் அது சுவை உடையதாகவே இருக்கும். அதுபோல் நற்குடியில் பிறந்தாரைப் பிறர் திட்டிப் பேசினாலும் தமது வாயினால் தம்மை வைதவர் மனம் நோகும்படியான சொற்களைச் சொல்ல மாட்டார்கள். 

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

Indus symbols and their Dravidian connections


“Indus symbols and their Dravidian connections”

                                  Chennai: Considering the vast area that covers the  Indus Valley Civilization (IVC), many languages must have been spoken there. However, the Indus script, due to its consistency in symbols, was likely to have been created by a single linguistic community, according to Houston-based Tamil scholar Naga Ganesan.

“ Since fish and crocodile played a major role in Indus astronomy, culture and religion, they were represented in the Indus script. Harappans likely called these signs  as ‘min’ and ‘mokara/makara’ in their language. The word  ‘simsumara’, first referring to Gangetic dolphin by similarly with the gharial crocodile, has a proto-Dravidian root.”, he said, while speaking on “Some k-initial Dravidian loan words in Sanskrit;preliminary observations on the Indus language”, at the Roja Muthiah Research Library in the city recently.

                    Ganesan said many vedic non-Aryan words have been shown to be loans from Dravidian language of the Indus farming culture.
“There is linguistic and archaeological evidence to support the view that the Indus civilization is non-Aryan and pre-Aryan.”

……………………………………………………..
                         
       “The long-snouted gharial seems to be the ultimate source for phallic symbol, the ‘lingam’. In Tamil texts, vitankar means linga. Siva as a nude kamuka (erotic ascetic), as well as crocodile. At places like Gudimallam, the phallic symbol represents Varuna, the god of the littoral landscape of Sangam poetry”, he added.
                -For more information…. Pl.TOI:17/12/18.


திருக்குறள் -சிறப்புரை :1077


திருக்குறள் -சிறப்புரை :1077

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லாத வர்க்கு.------0௭௭

கயவர், தம் கன்னத்தை அடித்து உடைக்கும் வலியாரின் வளைந்த கையினை உடையவர்க்கேயன்றிப் பிறர் இரந்து நின்றாலும் அவர்க்குத் தாம் உணவு உண்ட கையைக்கூட உதற மாட்டார்கள். உண்ட கையை உதறினால் ஒரு பருக்கை சோறாவது விழுந்துவிடுமே அதனால் அவ்வாறு கூறினார்.

“தளிர்மேல் நிற்பினும் தட்டாமல் செல்லா
உளிநீரர் மாதோ கயவர் – அளிநீரார்க்கு
என்னானும் செய்யார் எனைத்தானும் செய்யவே
இன்னாங்கு செய்வார்ப்  பெறின்.” ----நாலடியார்.

தளிரின் மேல் நின்றாலும் ஒருவர் தட்டித்தள்ளாமல் போகமாட்டாத உளியின் தன்மை உடையவர்கள் கயவர்; மென்மையானவர்களுக்கு  எந்த உதவியும் செய்ய மாட்டார்கள் ; அடித்து உதைத்துத் துன்பப்படுத்துவோர்க்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பார்கள்.

சனி, 15 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1076


திருக்குறள் -சிறப்புரை :1076

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.-----0௭

கயவர்கள் தாம் கேட்டறிந்த கமுக்கச் செய்திகளைப் பல்லோருக்கும் எடுத்துரைப்பதால் அவர்கள் அடித்துமுழக்கும் செய்தி அறிவிக்கும் பறைக்கு ஒப்பானவர்கள்.

‘கணமலை நன்னாட கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் – குணன் அழுங்கக்
குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.”  -----நாலடியார்.

கூட்டமாக மலைகள் சூழ்ந்த நல்ல நாட்டின் அரசனே..! எதிரிலிருந்து  ஒருவர் குணத்தையும் சொல்வதற்கு அருமையாயிருக்கும் அப்படியிருக்க, அவரிடத்திலிருந்து அவர்தம்  குணம் அழியும்படிக் குற்றங்களை எடுத்துச் சொல்கின்ற கயவரின் நாக்கு எப்படிப்பட்ட பொருளினால் செய்யப்பட்டதோ…?

வெள்ளி, 14 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1075


திருக்குறள் -சிறப்புரை :1075

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது.-----0௭௫

அச்சப்பட்டுக்கிடப்பதே கீழ்மக்களின் இயல்பாகும். அஞ்சி ஒடுங்குவது ஒழித்து உழைத்துப் பொருளை ஈட்டவேண்டும் என்று ஆசைப்பட்டாலே  ஒரு சிறிதாவது அச்சம் ஒழியும்.                         

”செழும் பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பு  அறுக்கில்லா தேரை – வழும்பில்சீர்
நூள்கற்றக் கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது. ----நாலடியார்.

தவளைகள்   செழிப்பான குளத்தில் எந்நாளும் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தம்மேலுள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ள மாட்டா. குற்றமில்லாத சிறப்புடைய பல நூல்களைக் கற்ற போதும் நுணுகி நோக்கும் அறிவு இல்லாதார், நூற்கருத்தை அறிந்து கொள்ளும்  தன்மையுடையர் அல்லர்.

வியாழன், 13 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1074


திருக்குறள் -சிறப்புரை :1074

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். -----0

கீழ்மகன் ஒருவன் தன்னினும் கீழ்த்தரமாய்,  மனம்போனபோக்கில் ஒழுகுவாரைக் கண்டால், தான் அவரைவிட மேலானவன் என்று கருதி இறுமாப்புக்கொள்வான்.

“ மைதீர் பசும்பொன் மேல் மாண்ட மணி அழுத்திச்
செய்தது எனினும் செருப்புத்தன் காற்கே ஆம்
எய்திய செல்வத்தர் ஆயினும் கீழ்களைச்
செய்தொழிலால் காணப்படும்.” -----நாலடியார்.

குற்றமற்ற நல்ல பொன்னின் மேலே மாட்சிமையுடைய இரத்தினங்களை இழைத்து செய்யப்பட்டதானாலும் செருப்பு, தன் காலில் அணிவதற்கே பயன்படும் அதுபோல, கீழ்மக்கள் எவ்வளவு செல்வம் பெற்றவராயினும் அவர்கள் கீழ்மக்களே என்பதை அவர்கள் செய்யும் செயல்களால் அறியலாம்.