வெள்ளி, 31 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –391: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –391: குறள் கூறும்பொருள்பெறு.

283

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.


திருடிக்குவித்த செல்வம்  எல்லையின்றிப்  பெருகுவதுபோல் தோன்றிப் பின்னர்  அச் செல்வம் முற்றிலும்  இல்லாது அழிந்தொழியும்.

கொள்ளையடித்துக் குவித்த பணம்  நீ, அழியும் காலத்தை அறிவிக்கும் நாடித் துடிப்பு.


ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்

கூட்டும் படியன்றிக் கூடாவாம்தேட்டம்

மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்

தரியாது காணும் தனம்.” ---நல்வழி, 8.


மண்ணுலகில் வாழும் மானிடரே…! விடா முயற்சியால் அளவுகடந்த பொருள்களை ஈட்டினாலும் அப்பொருள்கள் நம் ஊழ்வினையின்படி நல்லகாலமாக இருந்தால் நிலைத்திருக்கும் ; இல்லையேல் நிலைக்காமல் அழிந்து போகும்.

திங்கள், 27 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –390: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –390: குறள் கூறும்பொருள்பெறு.

 

278

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.


மனம் முழுதும் மாசாகிய குற்றம் நிறைந்திருக்க,  ஒழுக்கம் நிறைந்த உத்தமர்போல் நீராடி  மறைந்தொழுகும் மாந்தர்  உலகில் பலராவர்.

 உத்தமர்போல் உலாவரும் ஒழுக்கக் கேடர்கள் பலர் உளர்.        


வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள் யாவரையும்

வஞ்சித்தோம் என்று மகிழன்மின் வஞ்சித்த

எங்கும் உளன் ஒருவன் காணுங்கொல் என்று அஞ்சி

அங்கம் குலைவது அறிவு.” ====நீதிநெறிவிளக்கம், 94.


பொய் வேடம் பூண்டு பிறரை வஞ்சித்து வாழும் மூடர்களே..!  அனைவரையும் ஏமாற்றிவிட்டோம் என்று மகிழ்ச்சி கொள்ளாதீர்கள் ; நீங்கள் வஞ்சித்தவற்றை யெல்லாம் எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றான் என்பதை உணர்ந்து உங்கள் உடல் பதறுவதே உண்மையான இறை அறிவாகும்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

 

தன்னேரிலாத தமிழ் –389 : குறள் கூறும்பொருள்பெறு.

 

274

 தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.


வஞ்சகன் ஒருவன் தவக் கோலத்தில் தன்னை மறைத்துக்கொண்டு சொல்லாலும் செயலாலும் இழிவானவற்றைச் செய்வது , வேட்டுவன் புதரில் தன்னை மறைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடுவது போன்றதாகும்.


அறியா மக்களை அருள், ஆசி என்று மாய வலைவீசிப் பிடித்துண்ணும் வேடதாரிகள்.


பொருள் நசை வேட்கையோன் முறை செயல் வேறில்லை.”

முதுமொழிக்காஞ்சி, 7:9

.

பொருள் ஆசை கொண்டவன் அறநெறியில் வாழ்தல் இல்லை.


 

சனி, 25 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –388 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –388 : குறள் கூறும்பொருள்பெறு.


268

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும்.


தன்னுயிர்மேல் கொண்ட பற்றினை முழுதும் நீங்கப் பெற்றானை உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் கைகூப்பி வணங்கும்.


தம் உயிரையும் போற்றாது ஆற்றுவர் தவம்.


நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப

 இன்னே பெறுதி முன்னிய வினையே.”திருமுருகாற்றுப்படை, 65,66.


புலவனே..!  நீ வீடு பேறு வாய்க்க வேண்டும் என்று விரும்பினாயானால் உன் மனத்தில் எழுந்த அவா கைகூடுவதோடு, நல்வினைப் பயனால் நீ நினைத்தவை எல்லாம் இப்பொழுதே அடையப் பெறுவாயாக.

வெள்ளி, 24 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –387 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –387 : குறள் கூறும்பொருள்பெறு.

 

253

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.


கொலைக் கருவிகளைக் கையில் வைத்துள்ளோர் மனம், கொலைத் தொழிலை நாடிச் செல்லுமாறுபோல ,  புலால் உணவைச் சுவைத்து  மகிழ்ந்த மனம் , புலால் உணவையே நாடிச் செல்லும்.


உயிர் பறித்து உண்ணும் மனம் ; அருள் சுரந்து நிற்பதில்லை.

பற்றினான் பற்று அற்றான் நூல் தவசி எப்பொருளும்

முற்றினான் ஆகும் முதல்வன் நூல் பற்றினால்

பாத்துண்பான் பார்ப்பான் பழிஉணர்வான் சான்றவன்

காத்துண்பான் காணான் பிணி.”------சிறுபஞ்சமூலம், 6.

பற்று அற்றவனால் சொல்லப்பட்ட நூலைப் பற்றினான் தவசியாவான்; எப்பொருளையும் முழுதறிந்தவன் முதல்வன் ஆவான் ; நூலின்கண் சொல்லியபடியே பகுத்துண்பவன் பார்ப்பானாவான் ; பழியை உணர்வான் சான்றோன் ஆவான் ;  உண்ணக்கூடாது என்று சொல்லியவர்றை உண்ணாது தன்னைக் காத்துக்கொள்வான் நோய்வாய்ப்படான்.

புதன், 22 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –386 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –386 : குறள் கூறும்பொருள்பெறு.

 

247

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.  


பொருள் இல்லாதவர்களுக்குத் தாம்  வாழும் இவ்வுலகில் இடம் இல்லை.  அதுபோல் பிற உயிர்களிடத்து இரக்கம் இல்லாதவர்களுக்கு உயர்ந்தோர் வாழும் மேல் உலகில் இடம் இல்லை ;


 புகழ் பெற அருளும் ; வளமுடன் வாழப் பொருளும் இன்றியமையாதன.  

            

இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்

அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல்

பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்

யானும் அறிவென் மன்னே…” --- அகநானூறு, 335.


 நெஞ்சே..! வறுமையால் துன்புறுவோரின் வருத்தத்தைப் போக்குகின்ற அருள் உடையவராயினும் கைப்பொருள் இல்லார்க்கு ஈதலாகிய சிறப்பு இல்லையாதலை நானும் நன்கறிவேன். (தலைவன்கூற்று.)

திங்கள், 20 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –385 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –385 : குறள் கூறும்பொருள்பெறு.

 

235

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.


புகழ் நிலைத்தற் பொருட்டுப் பொருள் வளமழிந்து வறுமையுறலும் வறுமையுற்ற போதும் இயன்றவரை, உயிர் ஒழியும் வரை அருஞ்செயலாற்றிப் புகழ் நிறுத்தி இறத்தலும் சான்றோர்க்கன்றி மற்றையோர்க்குக் கிட்டாது.


 நில்லாப் பொருள் போற்றாது ; நிலைக்கும் புகழ் போற்றுக.


நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்

தட்டோர் அம்ம இவண் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.”புறநானூறு, 18.


நிலம் குழியாக உள்ள இடங்களில், நீர் நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும் ; அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர் உலகம் உள்ளவரை தம் பெயரை நிறுத்திய புகழை அடைவர்; அவ்வாறு செய்யாதவர், இவ்வுலகத்தோடு தம் பெயரைச் சேர்த்த புகழை அடையார்.

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –384 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –384 : குறள் கூறும்பொருள்பெறு.

 

221

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.


 இயலாதவர்க்கும் இல்லாதவர்க்கும் ஒன்று ஈவதே ஈகை ; ஏனைய ஈகை

எனப்படுவதெல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்யப்படும் ஈகையாகும்.

புகழ் கருதியோ, பெருமை கருதியோ, பதவி கருதியோ, இன்னபிற பயன்

கருதியோ கொடுப்பதெல்லாம்  ஈகையன்று ; கையூட்டு.

உழைத்த பொருளைக் கொண்டு  உதவி செய்தலே ஈகை.


இலம்படு புலவர் ஏற்ற கைந்நிறையக்

கலம்பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக் கையின்

வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி.” --- மலைபடுகடாம், 576 – 578.


 நன்னனே..! இல்லாமையால் வருந்தும் புலவர்தம் ஏந்தும் கைகள் நிறையும்படியாக, கழல் அணிந்த நின் கைகள் கவிழ்ந்து கொடுக்கும் பெருஞ் செல்வம், கெடுதல் இல்லாது, வற்றாமல் வளம் கொழிக்கட்டும்.

சனி, 18 டிசம்பர், 2021

  

தன்னேரிலாத தமிழ் –383 : குறள் கூறும்பொருள்பெறு.


 215

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகுஅவாம்

பேரறி வாளன் திரு.


இன்னார், இனியார் என வேறுபாடு காணாது மக்களுக்கு அரும்பெரும் உதவிகளைச் செய்யும் பேரறிவு உடைய ஒப்புரவாளன் பெற்ற செல்வம்; ஆற்று நீர் அற்றுப்போகும் காலத்தில் ஊர் மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் உயிர்காக்கும்  ஊற்றுநீர்  போன்றது.


 பிறருக்கு ஒன்று ஈயாச் செல்வர் சிற்றறிவினர்.


நடு ஊருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க

படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்.” ---நாலடியார், 96.


பலரும் விரும்பும்படி உதவி செய்து வாழ்கின்றவர்கள், ஊரின் நடுவே மேடை சூழ விளங்கும் பயன்தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர்கள்.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –382 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –382 : குறள் கூறும்பொருள்பெறு.


203

அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.


பகைவர்க்கும் தீமை செய்யாது விட்டொழித்தலை உறுதியாகக் கொண்ட  அறிவே, அறியும் அறிவுநிலைகளில் எல்லாம் தலைசிறந்த அறிவாகும்.

பகைவர்க்கும் அருளும் அறிவு,  பேரறிவு.


கற்றனவும் கண் அகன்ற சாயலும் இற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும்…” ------நாலடியார், 340.


 கற்ற கல்விபற்றியும் சிறந்த ஒழுக்கம்பற்றியும்  குடிப்பிறப்பின் பெருமை பற்றியும் மற்றவர்கள் பாராட்டிப் பேசுவதே பெருமை உடையதாம்.

 

 

புதன், 15 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –381 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –381 : குறள் கூறும்பொருள்பெறு.

 

196

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி எனல்.


 பயனில்லாத சொற்களை விரும்பிப் பேசி வீணே வம்பளக்கும் ஒருவனை  மனிதப் பிறவி என்று கருதாதே ;  மனித இனத்தில் விளைந்த பதர் என்றே கருதுக.

நெல் போல் பதர் ; மக்கள் போல் கயவர்.


 அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா.” ----- இன்னாநாற்பது, 29.


அறிய வேண்டுவனவற்றை அறிய மாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமே.

 

செவ்வாய், 14 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –380 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –380 : குறள் கூறும்பொருள்பெறு.


182

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை.


அறனழித்துத் தீயவை செய்தல் கொடுமையானது ; அதைவிடக் கொடுமையானது ஒருவன் இல்லாத இடத்து அவனைப்பற்றிப் பொய் புனைந்து  பழித்துக் கூறி நகையாடுவது. 


புறங்கூறல் இழிவு ; பொய்கலந்து புறங்கூறல் அதனினும் இழிவு ; பொய்கலந்து புறங்கூறிச் சிரித்து மகிழ்தல் இழிவினும் இழிவு.


கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்

எள்ளற்க யார்வாயின் நல்லுரை - தெள்ளிதின்

ஆர்க்கும் அருவி மலைநாட நாய்கொண்டால்

பார்ப்பாரும் தின்பர் உடும்பு.”--------பழமொழி, 87.


ஒலிக்கும் அருவியையுடைய மலை நாடனே...!

பார்ப்பனரும்  நாய்கொண்ட  உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர்.  அதுபோலக்  கள்ளியிடம் பிறக்கும் அகிலையும் கரிய காக்கையது சொல்லையும் பிறந்த இடம் நோக்கி இகழாது, உயர்வாகக் கொள்வதைப்போலக்  கீழானவர் வாயில் பிறந்ததேயாயினும் நல்லுரையாயின் அதனை இகழாது போற்றுக.

திங்கள், 13 டிசம்பர், 2021

 

தன்னேரிலாத தமிழ் –379 : குறள் கூறும்பொருள்பெறு.

 

178

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.


செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குக் காரணம் யாதெனின், பிறர் பொருளைக் கவர்ந்து வாழ எண்ணாமல் இருப்பதுதான்.

கவர்ந்துண்டு வாழ்தல் இரந்துண்டு வாழ்தலினும் இழிவு.


இசைபட வாழ்பவர் செல்வம் போலக்

காண்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம்.” --- நற்றிணை, 217.


புகழ் மிகும்படி வாழ்பவரின் செல்வம் பொலிவுறுதல் போலக் காணுந் தோறும் பொலிந்து தோன்றுகின்ற ஆண் யானை.

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –378: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –378: குறள் கூறும்பொருள்பெறு.

 

169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.


பொறாமை நிறைந்தவனின் செல்வ வளமும் ;  நற்பண்புடையவனின் வறுமையும்  சிந்திக்க வேண்டியவையே. நினைத்துப் பார்த்தால் பொறாமையாளன்  செல்வமும் பண்புடையான் வறுமையும் நிலையில்லாதன என்பது இனிது விளங்கும்.


கடைக்கால் தலைக் கண்ணது ஆகிக் குடைக்கால் போல்

 கீழ் மேலாய் நிற்கும் உலகு.” ---- நாலடியார், 368.


விரித்துப் பிடித்திருக்கும் குடையின் காம்பைப் போல மேலோர் கீழோர் ஆவதும் கீழோர் மேலோர் ஆவதும் இவ்வுலகத்து இயற்கை.

 

சனி, 11 டிசம்பர், 2021

 

தன்னேரிலாத தமிழ் –377: குறள் கூறும்பொருள்பெறு.


 

158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.


 ஆணவத்தால் தானே பெரியவன் எனத் தருக்கித் திரிந்து,  அடாது செய்தாரை அடக்க, தம்முடைய பொறுத்தருளும் தன்மை என்னும் பெருங்குணத்தால் வெற்றி கொள்ளல் வேண்டும்.


ஆணவம் :  செல்வம் , சிறுமை , பகைமை முதலியவை மிகுவதால் தோன்றும்.


கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்

பொறுத்து ஆற்றிச் சேறல் புகழ்…” பழமொழி, 19.



 தமக்குத் தீமை செய்தாரையும் பொறுத்து அவருக்கு நன்மை செய்தல் புகழுக்கு உரிய செயலாகும்.