வியாழன், 31 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 638

திருக்குறள் – சிறப்புரை : 638
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
 உழையிருந்தான் கூறல் கடன். ----- ௬௩௮
அரசன், அறிந்து சொல்பவர்தம் அறிவுரையை அழித்து, தானும் ஏதும் அறியான் என்ற நிலையில், அரசனின் அக்குற்றங்களை நீக்கி உறுதியானவற்றை எடுத்துக்கூறல் அமைச்சனின் கடமையாகும்..
” கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே
நின்போல் அசைவுஇல் கொள்கையர் ஆகலின் அசையாது
ஆண்டோர் மன்ற இம்மண்கெழு ஞாலம்.” --- பதிற்றுப்பத்து.

பகைவருடைய கெட்ட குடிகளை மீண்டும் அவர் நாட்டிலே வாழச் செய்த வேந்தே..!  , நின்  முன்னோர் நின்னைப்போல் மாறுதல் இல்லாத கொள்கை உடையவர் ஆதலால், நடுக்கமில்லாமல் இம்மண்ணுலகை ஆண்டனர்.

புதன், 30 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 637

திருக்குறள் – சிறப்புரை : 637
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். ---- ௬௩௭
செயலாற்றலை நுண்ணறிவால் அறிந்த இடத்தும்  இடனறிந்து அஃதாவது இயற்கைச் சூழலையும் ஆராய்ந்து செயலாற்றல் வேண்டும்.
 ” தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராட நாள்
   போர் வேந்தன் பூசல் இலன்.” – முத்தொள்ளாயிரம்.

 தேர்கொண்ட வேந்தனாகிய பாண்டியன், அவன் பிறந்த நாளாகிய திரு உத்திராட விண்மீன் பொருந்திய நாளில் போர் புரிய மாட்டான்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 636

திருக்குறள் – சிறப்புரை : 636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்னிற் பவை. ----- ௬௩௬
இயற்கையாகவே நுண்ணறிவிற் சிறந்தார்,  நூல்பல காற்றுத்தேர்ந்தார் முன்,  மிகநுட்பமான சூழ்ச்சிகளால் முன்னிற்பவை  யாவை உள்ளன..?
சூழ்ச்சிகளை வெல்லும் ஆற்றலைடைய ஆன்றோரே அமைச்சராவர்.
“ அறனும் பொருளும் வழாமை நாடி
தற்தகவு உடைமை நோக்கி மற்று அதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம்….” –அகநானூறு.
 அறமும் பொருளும் வழுவாத வகையை ஆராய்ந்து தனது தகுதியை உணர்ந்து, அதன் பின்னரே தான் கருதியதை முடித்தல் அறிவுடையோர் செயலாம்.


திங்கள், 28 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 635

திருக்குறள் – சிறப்புரை : 635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. ----- ௬௩௫
 அறநெறிகளை ஆராய்ந்து அறிந்தவனாய், ஆழ்ந்த புலமை சான்ற சொற்களைக் கூறுவானாய், எக்காலத்திலும் செயலாற்றும் திறன் உடையவனாய் விளங்கும் ஒருவனே அரசனுக்குத் துணையாகும் தகுதியுடையவனாவான்.
” கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமைக் கொண்ட வழி.” –கலித்தொகை.

தலைவ..! நீ, தமக்கு வருகின்ற இறப்பையும் மூப்பையும் மறந்திருக்கின்ற அறிவில்லாதார் வழியிலே செல்லாமல், அவ்வழியிலிருந்து மாறுபட்ட நல்லவர் வழியை உனக்கு வழியாகக் கொள்வாயாக.

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 634

திருக்குறள் – சிறப்புரை : 634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. ----- ௬௩௪
செய்யத்தக்க செயலை ஆராய்ந்து  தெரிந்து  கொள்ளும் திறனும் அவ்வாறு தேர்ந்தெடுத்த செயலை ஆற்றும் முறைகளை அறிவுறுத்தலும் பின் தன் கருத்தை ஐயத்திற்கு இடனின்றி துணிந்து கூறும் வல்லமை உடையவனே சிறந்த அமைச்சனாவான்.
”மன்பதை காக்கும் நின்புரைமை நோக்காது
அன்பு கண் மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ” – புறநானூறு.

வேந்தே..! மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பினை உணராது அன்பின்றி அறனற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி செய்வார்களானால் எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று,

சனி, 26 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 633

திருக்குறள் – சிறப்புரை : 633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு. ---- ௬௩௩
பகைவருக்குத் துணையாக நிற்பவரைப் பிரித்தலும் தமக்குத் துணையாகவரும் மாற்றாரைப் பாதுகாத்தலும் பிரிந்து சென்றாரைச் சேர்த்துக் கொள்ளலும் ஆகிய இவைகளை ஆற்றலுடன் செயல்படுத்த வல்லமை உடையவனே அமைச்சனாவான்.
”மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்பு உடையன் மன்னற்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
 சென்ற இடம் எல்லாம் சிறப்பு.”----- வாக்குண்டாம்.


வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 632

திருக்குறள் – சிறப்புரை : 632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அரசு. ---- ௬௩௨
அறிவுரை கூற அஞ்சாமை, நற்குடிப்பெருமையக் காத்தல், நீதிநெறி நூல்களைக்கற்றல் ஆற்றும் வினையறிதல் ,  திறம்படச் செயலாற்றல் ஆகிய இவ்வைந்தும் சிறப்பாக வாய்க்கப்பெற்றவனே அமைச்சனாவான்.
மாண்டது அரசு என்றதனால் இக்குறட்பாவை அரசுக்குரிய இலக்கணமாகக் கொள்ளல் நன்றாம்.
“ மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
  நன்று அறி உள்ளத்துச் சான்றோர். – பதிற்றுப்பத்து.
மக்களினத்தைக் காப்பதற்குரிய் அறிவுரைகளைக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.


வியாழன், 24 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 631

64. அமைச்சு
திருக்குறள் – சிறப்புரை : 631
 கருவியும் காலமும் செய்கையும்
அருவினையும் மாண்டது அமைச்சு. --- ௬௩0
ஓர் அரிய வினையைச் செய்து முடிப்பதற்கு உரிய கருவியும் (உத்தி) ஏற்ற காலமும்  செயல் திறனும் (திறமிக்கவர்கள்) ஆகிய எல்லாவற்றையும் ஆராய்ந்து உரைக்க வல்லவர்களே அமைச்சர்கள்.
“ உணர உணரும் உணர்வு உடையாரைப்
புணரப் புணருமாம் இன்பம்… ” --- நாலடியார்.
நூலின்  பொருளை உணரத்தக்க வகையிலே உணர்ந்து கொள்ளும் அறிவுள்ளவரை நண்பராகச் சேர்த்துக் கொள்வதனால்தான் இன்பம் உண்டாகும்.


புதன், 23 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 630

திருக்குறள் – சிறப்புரை : 630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு. ---- ௬௩0
ஒருவன், துன்பத்தையே இன்பமாக கொள்ளும் மனநிலையைப் பெற்றானாயின் அவன் பகைவர்களாலும் பாராட்டப்பெறும் சிறப்பை அடைவான்.
” இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” என்றறிவாய் மனமே.
“ நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க
படு பனை அன்ன பலர் நச்ச வாழ்வார்.” -----நாலடியார்.

 பலரும் விரும்பும்படி உதவி செய்து வாழ்கின்றவர்கள் ஊரின் நடுவே மேடைசூழ விளங்கும் பயன் தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர்கள்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 629

திருக்குறள் – சிறப்புரை : 629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பதுள்
துன்பம் உறுதல் இலன். ---- ௬௨௯
 இன்பமானவற்றை எண்ணி இன்பம் கொள்ளாதவன் துன்பம் வந்துற்றபோது  துயரம் கொள்ளான். வாழ்வில் இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு  பக்கங்கள் போன்றவையே.
” இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
 நன்பகல் அமையமும் இரவும் போல
 வேறு வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து
 உள என உணர்ந்தனை ஆயின்…” – அகநானூறு.
 நெஞ்சே….!  இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் நல்ல பகல் பொழுதும் இராப் பொழுதும் போல, வேறு வேறு இயல்பு உடையனவாகி மாறுபட்டு எதிர் நிற்பன என்பதை அறிந்து கொண்டாய் – தலைவன்.


திங்கள், 21 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 628

திருக்குறள் – சிறப்புரை : 628
இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன். ---- ௬௨௮
 என்றும் இன்பத்தை விரும்பாதவன்;  வாழ்வில் துன்பம் நேர்வது இயல்புதான் என்பதை அறிந்தவன்;  துன்பம் வந்துற்றபோது துன்பம் அடைதல் இல்லை.
 துன்பமின்றி வாழ்வேது ; துன்பத்திற்கு அஞ்சினால் துறவு மேற்கொள்ள வேண்டியதுதான்.
“ பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே.” ---- மணிமேகலை.
இவ்வுலகில் பிறந்தார் அனைவரும் மூப்புற்றார், நோயுற்றார், இறந்தார் என்று சொல்லப்படுவது இயல்பான நிகழ்வே.


ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 627

திருக்குறள் – சிறப்புரை : 627
இலக்கம்  உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.---- ௬௨௭
உடம்பானது துன்பத்திற்கு இலக்காவது இயற்கை என்பதறிந்த சான்றோர்கள், .தமக்குத் துன்பம் நேர்ந்தவிடத்து மனம் கலங்க மாட்டார்கள்
“ எய்தாத வேண்டார் இரங்கார் இகழ்ந்ததற்குக்
 கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய காட்சி யவர்.”--- ஆசாரக்கோவை.

உண்மைகளை உணர்ந்த அறிவுடையார், கிடைத்தற்கு அரியவற்றை விரும்பார்; இழந்ததற்கு வருந்தார் ; தீராத துன்பம் நேர்ந்தவிடத்து மனம் கலங்கார்.

சனி, 19 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 626

திருக்குறள் – சிறப்புரை : 626
அற்றேமென்று அல்லல் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். --- ௬௨௬
பொருளைப் பெற்றபோது அதனைப் பாதுகாத்து வைக்கத் தெரியாது இழந்தவர்கள் பொருளை இழந்துவிட்டோம் என்று துன்பப்படுவார்களோ ?
( படமாட்டார்கள்)
” அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகித்

தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்.” – மலைபடுகடாம்.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

வணக்கம் நலமே .. நலமறிய ஆவல்

திருக்குறள் – சிறப்புரை : 625

திருக்குறள் – சிறப்புரை : 625
 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
 இடுக்கண் இடுக்கண் படும். ---- ௬௨௫
ஒன்றன் பின் ஒன்றாகத் துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் அவற்றை மனம் தளராது எதிர்த்து நிற்பவனிடத்துத் துன்பங்கள் துன்பப்பட்டுப் போகும்.
“ நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார் …” --- பழமொழி.

செய்யத்தக்கதைச் செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் எதுவந்தாலும் அஞ்ச மாட்டார்கள்.

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 624

திருக்குறள் – சிறப்புரை : 624
மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.  ---- ௬௨௪
பொதி ஏற்றிய வண்டியை இழுத்துச் செல்லும் காளைகள் வழியில் ஏற்படும் தடைகளைக் கடக்க, முண்டியிழுத்து மேலேறுவதைப் போல, உள்ளத்தில் உறுதிப்பாடு உடையவனிடத்து வந்த துன்பமானது மேலும் துன்பப்படும்.
“ துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது.” – முதுமொழிக்காஞ்சி.
 வரும் துன்பங்களை முயற்சியால் தாங்குவார்க்கு இன்பம் எளிதாகக் கிடைக்கும்.


புதன், 16 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 623

திருக்குறள் – சிறப்புரை : 623
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர், ---- ௬௨௩
துன்பத்திற்குக் கட்டுண்டு துன்பப்படாதவர்கள் ; துன்பமே துன்புறுமாறு துணிந்து செயலாற்றி வெற்றி காண்பார்கள்.
” சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
 இன்னாது என்றலும் இலமே … “ புறநானூறு.

சாதலும் புதுதில்லை; அஃது உலகத்து இயற்கை. வாழ்தலை இனிமை என்று மகிழ்ந்ததும் இல்லை ; வெறுப்பு வந்தவிடத்துத் துன்பமானது என்று ஒதுக்கியதும் இல்லை.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 622

திருக்குறள் – சிறப்புரை : 622
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். --- ௬௨௨
வெள்ளம் போல் கடுகிவரும் துன்பத்தை அறிவுடையவன் அதன் இயல்பறிந்து எதிர்கொண்டு தன் உள்ளத்தின் உறுதியால் துன்பத்தைத் துடைத்தெறிவான். துன்பத்தைத் துடைத்தெறிய துணிவு இல்லையேல் துன்பத்தால் உடனிருப்போரும் துயருறுவர்.
“ அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் ….” –பழமொழி.

அறிவினால் பெருமை பெறாத ஒருவன், பிற செல்வம், குலம் முதலானவற்றால் பெருமை பெறுதல் இல்லை.

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 621

திருக்குறள் – சிறப்புரை : 621
இடுக்கண் அழியாமை – 63
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அதுத்தூர்வது அஃதொப்பது இல். ---  ௬௨௧
வாழ்க்கை ஒரு போராட்டக் களமே. துன்பம் நேரும்போது துவண்டு விடாமல் அத் துன்பத்தை எதிர்த்து வெற்றிகொள்ள மகிழ்ச்சியுடன் மனத்துணிவு கொள்ளவேண்டும்.
அம்மகிழ்ச்சியைத்தவிரத் துன்பத்தை எதிர்கொள்ள தக்க துணை வேறொன்றும் இல்லை.
“ நல்லறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே.” – புறநானூறு.

நல்லறிவு உடையவர் மிக்க வறுமையுற்றாராயினும் அவ்வறுமை பெருமைக்குரியது ; அதனை யாம் மகிழ்ந்து மிகவும் போற்றுவோம்.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 620

திருக்குறள் – சிறப்புரை : 620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். --- ௬௨0
மனம் தளராது எடுத்துக்கொண்ட செயலை முடிக்கக் கடுமையாக முயற்சி செய்பவர் விதிப்பயனையும் புறமுதுகிட்டு ஓடச் செய்து வெற்றி காண்பர்.’ விதியை மதியால் வெல்லலாம்.’
“ ஒய்யா வினைப் பயன் உண்ணும் காலை
 கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்.” – சிலப்பதிகாரம்.
அறிவுடையோர், நீக்க இயலாத ஊழ்வினையின் பயனைத் துய்க்கும் காலத்தில் ஒரு போதும் செயலிழந்து வருந்த மாட்டார்கள்.


சனி, 12 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 619

திருக்குறள் – சிறப்புரை : 619
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். ---- ௬௧௯
ஒரு செயல்,தெய்வத்தின் துணையோடு முயற்சி செய்து முடியாமல் போனாலும் அச்செயலைச் செய்து முடிப்பதற்குச் செய்த கடின உடல் உழைப்புக்கு, உரிய பலனைத் தரும்.
“ ஒய்யா வினைப் பயன் உண்ணும் காலை
 கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்.” – சிலப்பதிகாரம்.

அறிவுடையோர், நீக்க இயலாத ஊழ்வினையின் பயனைத் துய்க்கும் காலத்தில் ஒரு போதும் செயலிழந்து வருந்த மாட்டார்கள். 

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 618

திருக்குறள் – சிறப்புரை : 618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. --- ௬௧௮
கடமைகளை ஆற்ற முயன்றும் காலம் கைகூடாமல் போவது யார்க்கும் பழியன்று ; ஆற்றவேண்டியதை அறிந்திருந்தும் முயற்சி மேற்கொள்ளாது காலம் கடத்தலே பழியாகும்.
“ சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப.” –முதுமொழிக்காஞ்சி.
முயற்சியின் வலிமை , முடிக்கும் செயலால் அறியப்படும்.


வியாழன், 10 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 617

திருக்குறள் – சிறப்புரை : 617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள். --- ௬௧௭
  தூங்கிவழியும் சோம்பேறியிடம் கரிய மூதேவி குடியிருப்பாள் ;  சோம்பலின்றி முயற்சி உடையவனிடத்தில் திருமகள் (சீதேவி) தங்கியிருப்பாள் என்று அறிவிற்சிறந்தோர் கூறுவர். சோம்பேறியை ’விடியாமூஞ்சி.’ என்பர்.
“ தீதும் நன்றும் பிறர்தர வாரா
 நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.”--- புறநானூறு.

நமக்கு நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை ;  துன்பம் நேர்தலும் அது தீர்தலும்கூட நம்மால் விளைவதே.

புதன், 9 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 616

திருக்குறள் – சிறப்புரை : 616
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். ---- ௬௧௬
இடைவிடா முயற்சியால் மேற்கொள்ளும் செயல் திருவினையாகிய வாழ்வில் வளம் சேர்க்கும்  முயற்சியற்றவர் வாழ்வில் உள்ள வளம் ஒழிய வறுமை வந்து சேரும்.
“ வினைநயந்து அமைந்தனை ஆயின் மனைநகப்
பல்வேறு வெறுக்கை தருகம் வல்லே.” – அகநானூறு.
 “நெஞ்சே !பொருள் ஈட்ட விரும்பி வந்தனையாகலின் தலைவி மகிழும் வண்ணம் பலவகையான செல்வங்களை ஈட்டிச் செல்வோம்.” – தலைவன்.


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 615

திருக்குறள் – சிறப்புரை : 615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். --- ௬௧௫
 ஒருவன் தான் மேற்கொண்ட செயலைச் செய்துமுடிக்க முயற்சிஉடையவன் இன்பம் துய்ப்பதில் நாட்டம் கொள்ளாமல் தன் சுற்றத்தாரின் துன்பங்களைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் போல் விளங்குவான்.
“கட்டு இலா மூதூர் உறைவு இன்னா.” –இன்னாநாற்பது.

சுற்றமாகிய கட்டு இல்லாத பழைய ஊரிலே வாழ்தல் துன்பமே.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 614

திருக்குறள் – சிறப்புரை : 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். --- ௬௧௪
உழைத்துப் பொருளீட்டும் முயற்சி இல்லாதவன் பிறர்க்கு உதவி செய்வான் என்பது  இயல்பாகவே அஞ்சி ஒடுங்கும் தன்மை உடைய பேடி தன் கையில் வாள் கொண்டு ஆளும் தன்மை போலப் பயன் அளிக்காமல் போகும்.
”ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் …” – குறுந்தொகை.

இரவலர்க்குக் கொடுத்தலும் ஈதலால் பெறுகின்ற இன்பமும் வறியவர்க்கு இல்லை.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 613

திருக்குறள் – சிறப்புரை : 613
 தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு. ---- ௬௧௩
பிறர்க்கு உதவிசெய்தலால் விளையும் பெருமிதம்  
முயற்சி என்னும் உயர்ந்த ஊக்கத்தின் தன்மையில் நிலைத்து நிற்கின்றது.
” எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறம் செய்தார் தலைப்படுவர் ….” – நாலடியார்
கொடுப்பது எவ்வளவு சிறிதாயினும் தம்மால் முடிந்த அளவு அறம் செய்பவர்கள் உயர்வடைவார்கள்.


சனி, 5 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 612

திருக்குறள் – சிறப்புரை : 612
வினக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. --- ௬௧௨
ஒருவன்  எடுத்துக்கொண்ட வேலையைச் செய்து  முடிக்காமல் அரைகுறையாக விட்டுவிடுவானாயின் அவன் செயலற்றவன் என்று கருதி இந்த உலகம் அவனைக் கைவிட்டுவிடும்.
“ கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. – குறள். 578
தம் கடமையாகிய தொழில் கெடாமல் கருணை உடையவராக இருக்கும்  வல்லமை உடையவர்க்கு இவ்வுலகம்

உரிமை உடையது.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 611

திருக்குறள் – சிறப்புரை : 611
ஆள்வினை உடைமை - 62
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். ---- ௬௧௧
ஏற்றுக்கொண்ட ஒரு செயலைச் செய்து முடிப்பது கடினமானது என்று மனம் தளராது முயற்சி செய்க ;அச்செய்லைச் செய்து முடிக்கும் பெருமையை  மேற்கொள்ளும் முயற்சியே தரும்.
“ இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை
மண்புனை இஞ்சி மதில் கடந்தல்லது
உண்குவம் அல்லேம் …..” – பதிற்றுப்பத்து.

இன்றைக்கு இனிதாக உண்டோம் என்றால் நாளைக்கு அரைத்த மண்ணால் கட்டப்பட்ட கோட்டையை உடைய மதிலை வென்று எடுக்காமல் உணவு உண்ண மாட்டோம்.  

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 610

திருக்குறள் – சிறப்புரை : 610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.---- ௬௧0
இறைவன் தன் அடியால் அளந்த உலகம் முழுவதையும் சோம்பலே இல்லாத ஆற்றலுடைய மன்னன்  ஒருசேர அடைதலும் கூடும்.
“ வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை …..” ----தொல்காப்பியம்.
காட்டாற்று வெள்ளம் போல் படையெடுத்துவந்த பகைவரை கல்லணை போல் ஒருவனே எதிர்த்து நின்று வென்ற பெருமையுடையவன்.


   

புதன், 2 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை :609

திருக்குறள் – சிறப்புரை :609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும். ---- ௬0௯
குடும்பம் நடத்தத் தெரியாதவன் என்னும் குற்றம் சுமந்த ஒருவன் தன் சோம்பலை முயற்சி என்னும்  ஆளுமையால் மாற்ற (ஒழிக்க) அக் குற்றம் நீங்கிவிடும்.
” சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது
 மேவல் எளிது அரிது மெய் போற்றல்….. “ ---- ஏலாதி.

உயிர்விடுதல் எளிது ; மேலான கல்வி கேள்விகளால் நிறைந்து ஒழுகுதல் அரிது. மனை வாழ்க்கை ஏற்றல் எளிது ; அதன்கண் ஒழுக்கத்தைக் காத்தல் அரிது.