திருக்குறள் -சிறப்புரை
:1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.------- ௧0௬௨
இவ்வுலகைப் படைத்தவன், இரந்து வாழவேண்டிய அவல நிலைக்குச் சிலரையும் படைத்திருப்பானாயின்
அவனும் அப்பிச்சைக்காரர்களைப் போல நாளும் அலைந்து, திரிந்து அல்லல் பட்டுக் கெடுவானாக.
”ஐதே கம்ம இவ்வுலகு படைத்தோனே
…… ……
…… ………
வெயில் வெய்துற்ற பரல் அவல்
ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல்
நண்ணி
ஆன் வழிப் படுநர் தோண்டிய
பத்தல்
யானை இனநிரை வெளவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே.” ---நற்றிணை.
வெயிலால் வெப்பமுற்ற பரற்கற்கள் நிறைந்த பள்ளத்தின் ஒரு புறத்தில் குந்தாலியால்
கிணறு தோண்டப்பட்டிருக்கும். அங்கு, பசுக்கூட்டங்களைப் பாதுகாக்கும் ஆயர்கள் சென்று,
அருகில் பறித்த சிறுகுழியில் ஊறிய நீரை யானைக் கூட்டம் சென்று உண்ணும். இத்தகைய வறட்சி
உடைய கொடிய காட்டுப் பகுதி, திண்ணிய மலை போல நிலைத்த அச்சத்தைச் செய்கின்றது. இத்தகைய
காட்டுப் பகுதியில் இவ்வுலகைப் படைத்தவனும் சென்று மெலிவானாக.