வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1124


திருக்குறள் -சிறப்புரை :1124

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து. ------- ௧௧ ௨ ௪

சிறந்த அணிகலன்களை அணிந்த என் இனிய காதலி, கூடிக் களிக்கும்போது உயிர் உடம்புடன் ஒட்டி வாழ்தலைப் போன்ற இன்பத்தை அளிக்கிறது ; அவள் பிரிந்தாலோ அந்த உயிர் உடம்பினின்று நீங்கிவிட்டதைப் போல் துன்பம் தருவதாம்.

மாரிப் பித்தகத்து நீவார் கொழுமுகை
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்து விட்டன்ன
நறுந் தண்ணியளே நன்மா மேனி
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. “ ---குறுந்தொகை.

நெஞ்சே…! மாரிக்காலத்தில் மலரும் பிச்சியினது, நீர் ஒழுகும் கொழுவிய அரும்புகளை, பெரிய பனங்குடையில் ஒருங்கே வைத்து மூடி, பெருமழை பெய்யும் விடியற்காலத்தே விரித்துவிட்டாற் போன்று, நல்ல மாமையை உடைய மேனி, நறுமையையும் தண்மையையும் உடையவள், நீரில் விடும் தெப்பத்தைப் போன்ற வளைந்த சந்தினை உடைய, அவள் பருத்த தோள்களைக் கூடிக்களித்தலும் பிரிதலும் இல்லை;   அதனைக்காட்டிலும் பிரிவோமாயின்  உயிர் வாழ்தல் இல்லேம்.
எப்பொழுதும் தோளோடு ஒன்றுபட்டு இருத்தலின் புதிதாக மணத்தலும் பின்பு தணத்தலும் இலமென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக