வியாழன், 21 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1142


திருக்குறள் -சிறப்புரை :1142

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர். ---- ௧௧௪.

மலர்போலும் கண்ணைஉடையாளின் அருமை அறியாத இவ்வூரினர் அலர் தூற்றி, அவளை, யான் அடைதற்கு எளிமையாக்கி எனக்கு ஈந்தனரே.

கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலோடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானுங் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்பலூரும் அவனொடு மொழிமே.” -----குறுந்தொகை.

வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது குளிர்ச்சியுடைய கரிய மலர், நூலற்று உதிர்ந்த முத்துக்களைப்போல, காற்றால் சிதறி, நீர்த்துறைகள்தோறும் பரவும் தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை, யானும் விரும்புதலையுடையேன், நம் தாயும் அவன்பால் மிக்க அன்புடையவள் ; நம் தந்தையும் அவனுக்கே மணமுடிக்க விரும்புவார் ; அலர் தூற்றும் ஊரில் உள்ளாரும் அவனொடு நின்னைச் சேர்த்தே சொல்லுவர்;  நின் மணத்திற்குரிய முயற்சிகள் நடைபெறுகின்றன -கவலற்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக