செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1133


திருக்குறள் -சிறப்புரை :1133

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். --- ௧௧ ௩ ௩

காதலில் விழுமுன் ஆண்மகனுக்குரிய நாணத்தையும் ஆண்மையையும் பெற்றிருந்தேன் ; இன்றோ..! காம வேட்கையால் துன்புறுவோர் ஏறும் மடலைப் பெற்றிருக்கின்றேன்.

“……………….. சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
அறிகதில் அம்ம இவ்வூரே மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாம் நாணுகம் சிறிதே.” ---குறுந்தொகை.

சிலவாகிய சொற்களைப் பேசும் இயல்புடைய பெண்ணை.       பலரும் திரிதரும் வீதியில் ,மடலேறிப் பெறுவேனாக ; பெற்றபின்பு, இந்த ஊரில் உள்ளார் அறிவாராக ; இந்நல்லாளுடைய தலைவன் இவன் என்று சொல்லும் போது நாம் சிறிது நாணுவேம்.

  ( தலைவன் தன்னுடைய உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் வரைந்த படத்தைக் கையிலேந்தி மடல் ஏறி வீதியில் செல்வானாதலின், அந்நிலையில் இன்னாள் கணவன் இவனென்று ஊரார் அறிவர். )  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக