சனி, 23 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1144


திருக்குறள் -சிறப்புரை :1144

கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. ----- ௧௧௪௪

எம்முடைய காதல் உணர்வு, இவ்வூரினர் தூற்றும் அலரால் இனிதாக வளர்ந்து வருகிறது ; அவ்வலர் இல்லையென்றால் காமவிருப்புக்  குறைந்து இல்லாது அழிந்துபோகுமே.

மணங்கமழ் கானல் இயைந்த நம் கேண்மை
ஒருநாள் பிரியினும் உய்வரிது என்னாது
கதழ்பரி நெடுந்தேர் வரவாண்டு அழுங்கச்
செய்ததன் தப்பல் அன்றியும்
உயவுப்புணர்ந்தன்று இவ்வழுங்கல் ஊரே.” ---நற்றிணை.

கடலருகே மணம் கமழ்கின்ற சோலையின்கண்ணே காதலருடனே தொடர்ந்து ஒன்றிய நம்முடைய நட்பானது, ஒருநாள் இடையீடுபட்டுப் பிரிந்தாலும்  உயிர் பிழைத்தல் அரிதாகுமென்று கருதாமல், குதிரை பூட்டிய அவரது நெடிய தேரின்  வருகையை இனி கானலிடத்து வாராது அவரால் மறிக்கப்பட்டு வருந்தச்செய்த தன்னுடைய தவறுகளை வெளிக்காட்டாது இருப்பதன்றியும், ஊராரின் பழிமொழிகளாகிய பேரிரைச்சலை, இங்ஙனம் ஒரு தேர் வருவதன் காரணம்தான் யாதோவென்று ஆராய்ந்து அதனால் வருத்தமும் அடைகின்றது ; இஃதென்ன கொடுமை, இங்ஙனமாயின் இனி எவ்வாறு அவருடன் களவொழுக்கம் நிகழும் ..? (இதனால், தலைவன் விரைந்து மணம் புரிந்துகொள்ள வற்புறுத்தினாள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக