வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1131


திருக்குறள் -சிறப்புரை :1131

 114. நாணுத் துறவுரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.---- ௧௧ ௩௧


களவில் காதல்கொண்டு காம இன்பம் நுகர்ந்து, பின்னர் அவ்வின்பம் கூடப் பெறாமையால் வருந்தும் காதலர், காதலியை அடைவதற்குத் துணையாக அமைவது மடலேறுதல் ஒன்றே வலிமை பொருந்திய வழியாம்.

மாஎன மடலும் ஊர்ப பூவெனக்
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமங் காழ்க் கொளினே.” –குறுந்தொகை.

காம வேட்கை கைம்மிகுமாயின் பனை மடலைக் குதிரை எனக் கொண்டு ஆடவர் ஊர்வர் ; குவிந்த அரும்புகளை உடைய  எருக்கம் பூ மாலையையும் அடையாள மாலையாகத் தலையில் அணிந்து கொள்வர் ; தெருவில் பலரும் தம்மைக்கண்டு ஆரவாரிக்கவும் படுவர் ; தம் வேண்டுகோள் நிறைவேறவில்லையானால் சாதலுக்குரிய வரைபாய்தல் முதலிய வேறு செயல்களையும் செய்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக