வியாழன், 7 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1130


திருக்குறள் -சிறப்புரை :1130

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர். --- ௧௧ ௩0

எம் காதலர்  எப்போதும் நெஞ்சைவிட்டு நீங்காது உள்ளத்துள் நிறைந்துள்ளார் ; அதனைப் புரிந்துகொள்ளாத   இவ்வூரார், அவர் எம்மைப் பிரிந்துவிட்டார் என்றும் எம்மீது அன்பில்லாதவர் என்றும் கூறுகிறார்களே…!

  உருகெழு பெருங்கடல் உலவுக் கிளர்ந்தாங்கு
 அலரும் மன்று பட்டன்றே அன்னையும்
பொருந்தாக் கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று
எவன்கை அற்றனை இகுளை சோழர்
வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும்
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர்…” ----அகநானூறு.

அச்சம் பொருந்திய பெரிய கடலானது நிறைமதி நாளில் ஆரவாரித்து எழுந்தாற்போல, ஊரார் கூறும் அலரும் மன்றின்கண் பரவியது ; தாயும் கண் துயிலாளாய் வெம்மையுடைய மூச்செறியும்….. தோழி..!  ஏன் செயலற்றனை, பாலை நிலத்தைக் கடந்துசென்ற நம் தலைவர், சோழமன்னரது வெண்ணெல் விளையும் ஊர்களையுடைய நல்ல நாட்டினையே பெறுவதாயினும் அங்கே மனம் உவந்து தங்கி விடுவாரல்லர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக