வியாழன், 14 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1135


திருக்குறள் -சிறப்புரை :1135

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.---- ௧௧ ௩௫

மணிமாலையும் அழகிய சிறு வளையல்களும் அணிந்த என் காதலி மடல் ஊர்தலோடு  காதலர்களை வருத்தும் மாலைக்காலத்  துன்பத்தினையும் எனக்குத் தந்தாள்.

மின் அவிர் நுடக்கமும் கனவும் போல் மெய் காட்டி
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனிவெளவி
தன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன் கொலோ
மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து
மல்லல் ஊர் மறுகின்றகண் இவள் பாடும் இஃது ஒத்தன்
எல்லீரும் கேடீமின் என்று
படரும் பனை ஈன்ற மாவும்சுடர் இழை
நல்கியாள் நல்கியவை.” ----கலித்தொகை.

மின்னலை ஒத்த நுடக்கமும் துவட்சியும் கனவினது தோற்றம் போல, நகுதலுடன் தன் வடிவைக் காட்டி, என்னுடன் முற்படக் கூடினாள் ; பின்னர்ப் பிறர் என்னை இகழ்ந்து சிரிக்கவும், என் நெஞ்சம் என்னுடன் கூடி நில்லாது, என் நெஞ்சை மிகவும் கைக்கொண்டாள். தன்னுடைய நலத்தை யான் காணா வண்ணம் மறைத்தவளைக் கூடும் வழிதான் யாது..? மடல் ஏறுதலே அவளை அடைதற்கு வழியாம்..!

மடன்மாவிலே சூட்ட வேண்டி நூலாலே, நீலமணி போலும் நிறத்தை உடைய மயிற்பீலியை மற்றை அழகிய பூளைப்பூ, ஆவிரம் பூ, எருக்கம் பூவொடு பிணைத்துக் கட்டினேன் ; வளப்பம் நிறைந்த தெருவின்கண், இவன் ஒருத்தன், இவளைப் பாடும் பாடலைக் கேட்பீராக என்று சொல்லிப் பாடத் தொடங்கினேன்.
சுடர்கின்ற இழையினை உடைய, என்னால் விரும்பப்பட்டவள், என்னைக் காதலித்து, அவள் தந்தவை, வருத்தமும் பனை ஈன்ற மடலால் செய்யப்பட்ட குதிரையுமே…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக