செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1147


திருக்குறள் -சிறப்புரை :1147

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய். ----- ௧௧௪௭

என் காமநோயாகிய பயிர், பலகாலும் செழித்து வளர,  இவ்வூரார் கூறும் பழிச்சொற்கள் எருவாக, அலர் அறிந்த அன்னையின் கடுஞ்சொற்கள் நீராகவும் கொண்டு, பலகாலும் செழித்து வளரும்.
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய

சிறு தீ விளக்கில் துஞ்சும் நறுமலர்ப்
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை
தானறிந்து அன்றோ இலளே பானாள்
சேரியம் பெண்டிர் சிறு சொல் நம்பிச்
சுடுவாள் போல நோக்கும்
அடுபால் அன்ன என் பசலை மெய்யே.” ---நற்றிணை.

மீன் கொழுப்பாலாகிய நெய் வார்த்துக் கிளிஞ்சிலில் ஏற்றிய விளக்கின் ஒளியிலே துயிலுகின்ற, புன்னை சூழ்ந்த துறைவனோடு நாம் களவிலே  புணர்ந்ததை, நம் அன்னை முன்னரே அறியவும் இல்லை. நடு யாமத்தில்  நம் சேரியில் உள்ள அயலுறை மாதர்  கூறும் அலராகிய  இழிந்த சில சொற்களை விரும்பிக்கேட்டு, கொதிக்கின்ற பால் போன்ற பசலை பரந்த என் மேனியைச் சுடுவதுபோல் நோக்கினாள்…! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக