வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1136


திருக்குறள் -சிறப்புரை :1136

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல் ஒல்லா பேதைக்கென் கண். --- ௧௧ ௩௬

 காண இயலாத காதலியை நினைத்து காமநோயின் துன்பம் வருத்துவதால் கண்கள் உறங்க மறுக்கின்றன ; அவளை அடைதற்கு,  நள்ளிரவிலும் மடல் ஊர்தலையே நினைக்கின்றேன்.

பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பல் நூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி நாண் அட்டு
அழிபடர் உள் நோய்  வழி வழி சிறப்ப
இன்னள் செய்தது இதுஎன முன்னின்று
அவள் பழி நுவலும் இவ்வூர்.” –குறுந்தொகை.

பலவாகிய நூல்களைக் கொண்டு பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக் கட்டிய மாலைகளை அணிந்த, பனங்கருக்கால் உருவாக்கிய குதிரையை, அதன் கழுத்தில் கட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து, என் நாணத்தைத் தொலைத்து, காதலியின் மிக்க நினைவை உடைய உள்ளத்தில் உள்ள காமநோய் மேலும் மேலும் மிகுதியாக, இந்நிலை இவளால் உண்டானது என்று யான் கூற,  இக்கோலத்தைக் கண்ட இவ்வூரார் எல்லோருக்கும் முன்னே நின்று தலைவியினது பழியைக் கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக