சனி, 5 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 16

பரிபாடல் – அரிய செய்தி - 16
களவே சிறந்தது என்க
(கற்பில் -  புனர்ச்சி இன்பம் எனினும் களவுப் புணர்ச்சி இன்பம் போல இயல்பாக உளதாகாது ஊடுதலானே உண்டாவதாம்.)
அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக் கொண்டு துனிக்கும் தவறு இலர் இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார் இக் குன்றுப் பயன்.
குன்றம்பூதனார். பரிபா. 9 : 22  – 25

அதனால் … கற்பொழுக்கத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வது போல – பிரிவினை அறியாத களவுப் புணர்ச்சியையுடைய மகளிர் – தம் தலைவரோடு கருத்து மாறுபாடு கொண்டு ஊடல் கொள்ளும் குற்றம் உடையவர் அல்லர் – இக்களவுப் புணர்ச்சியே களவு கற்பு என்னும் இரண்டு ஒழுக்கத்துள்ளும் சிறந்தது என்று பாராட்டுகின்ற பொருள் இலக்கணத்தை உடைய குளிர்ந்த இனிய தமிழை ஆராயாத தலைவரே – குறிஞ்சியில் நிகழும் இன்பமாகிய இக்களவு ஒழுக்கத்தினை மேற்கொள்ளார் .
 ( அகறல் – பிரிந்து போதல் ;  “அகலறியா அணியிழை நல்லார் “ என்றது. களவுப் புணர்ச்சியை உடைய தலைவியரைப் பிரிதலும் ஊடலும் இல்லாமையால் கற்பினும் களவே சிறந்தது என்பது கருத்து.

 “  சிறப்பினாற் பெயர் பெற்றது களவியலென்பது ……என்னை ? களவு கற்பு என்னும் கைகோள் இரண்டனுள் களவினைச் சிறப்புடைத்தென்று வேண்டும் இவ்வாசிரியன் “ – இறையனார் களவியல் சூ -1. உரை. – என்றும் இன்றமிழ் இயற்கை இன்பம் – சீவக சிந். 2043 – என்றும் பிற சான்றோரும் ஓதுமாற்றானும் உணர்க. – குன்றுப் பயன் – குன்றுதரும் பயன் – அஃதாவது களவுப் புணர்ச்சி இன்பம் – மலையும் மலை சார்ந்த நிலனுமாகிய குறிஞ்சி நிலத்து ஒழுக்க மாதலின் குன்று தரும் பயன் என்றார். இனி அக்களவுப் புணர்ச்சியை உடைமையால் வள்ளி சிறந்தவாறும் அத்தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் கூறுகின்றார். ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக