செவ்வாய், 8 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 20

பரிபாடல் – அரிய செய்தி - 20
வையை வளம்
ஆம் நாள் நிறைமதி அலர்தரு பக்கம் போல்
நாளின் நாளின் நளிவரைச் சிலம்பு தொட்டு
நிலவுப் பரந்தாங்கு நீர் நிலம் பரப்பி
உலகு பயம் பகர ஓம்பு பெரும் பக்கம்
வழியது பக்கத்து அமரர் உண்டி’
மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க
எண்மதி நிறை உவா இருள் மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே ?
நல்லந்துவனார். பரிபா. 11:  31 – 38
பிறை தோன்றிய நாள் தொடங்கி நாளுக்கு நாள் வளர்கின்ற பக்கம் போல நாளுக்கு நாள் பெருகி – அதன் நிலவொளி உலகில் எங்கும் பரவுமாறு போல – செறிந்த மலைச் சாரல் தொடங்கி – நிலமெங்கும் நீரைப் பரப்பி – உலகத்திற்குப் பயனை விளைத்துக் கொடுத்துப் பாதுகாத்து – அவ்வளர் பக்கத்துப் பிற்பக்கமாகிய தேய்பக்கத்து – தேவர்களுக்கு உணவாகிய அத்திங்கள் நாள்தோறும் தனது நிறைவினின்றும் ஒரு கலை அழியுமாறு போல – நீர் வரத்துச் சுருங்குதலானே நாளுக்குநாள் சிறிதுசிறிது வற்றிவருங் காலத்தும் –எட்டாம் நாள் திங்களின் அளவாதலன்றி – அமாவாசையின்கண் திங்கள் முழுதும் தேந்தொழிதல் போன்று  - வையையே நின்னிடத்து நீர் முற்றும் வற்றிய நாளினை – இவ்வுலகில் யாரே காண்கின்றனர் ..? – ஒருவரும் இல்லை என்பதாம்.
( ஆம் நாள் – தோன்றும் நாள் ; அலர்தரு பக்கம் – வளர் பக்கம்; நளி – செறிவு ; சிலம்பு – மலைச் சாரல் ; எண்மதி நிறை -  அட்டமித் திங்கள் அளவு .)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக