செவ்வாய், 15 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி – 28 - 29

பரிபாடல் – அரிய செய்தி – 28 - 29
துறக்கம் – எளிதே கிட்டும்
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதில் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்ப
இளம்பெரு வழுதியார். பரிபா. 15 : 17 – 18
பெறுதற்கு அரிதாகிய இருக்கும் துறக்க உலகை எளிதாகப் பெறுவதற்கு உரிமை வழங்கும் சிறப்பினைக் கொண்டது திருமாலிருங்குன்றம் – அக்குன்றத்தை (மதிலின் மேல் ஏறி உரைத்தாற்போல ) பேரொலி செய்து நாம்  தொழுவோமாக.
பரிபாடல் – அரிய செய்தி - 29
முருக வழிபாடு
அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே
கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே
கேசவனார். பரிபா. 14 : 21 – 24
ஆறு முகமும் பன்னிரண்டு கைகளும் உடையாய்ச் சென்று – அழகாலே பிற மகளிரை வென்ற வெற்றியினை உடைய வள்ளியை நயந்தோனே – தலைவியர் தம்மைப் பிரிந்து சென்ற தம் கணவர் விரைந்து வந்து புணர்ந்து – பின்னர் நீங்காமைப் பொருட்டு யாழிசை எழுப்பி – நின்னைப் பரவிப் பாடுகின்ற பாட்டினை விரும்புவோனே .
( மகளிர் தம் கணவர் தம்மைப் பிரியாதிருக்க  முருகனை வேண்டிப் பாடுகின்ற வழக்கத்தைச் சிலப்பதிகாரம் 15 ஆம் காதை  - “ மலைமகள் ….” – “ குறமகள் ….” எனத் தொடங்கும் பாடல்களில்  காண்க. ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக