ஞாயிறு, 6 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி – 17-18

பரிபாடல் – அரிய செய்தி – 17-18
கடல் வணிகம்
தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்
ஏமுறு நாவாய் வரவு எதிர் கொள்வார் ….
கரும்பிள்ளைப் பூதனார். பரிபா. 10 : 38 - 39
தம்மால் விரும்பப்பட்ட துறைமுகப் பட்டினத்தை அடைந்து வணிகம் செய்து  அங்கிருந்து மீண்டும் கரையைச் சேர்ந்த – தாம் இன்பம் அடைதற்குக் காரணமான மரக்கலத்தின் வருகையினை விரும்பி எதிர்கொண்டு வரவேற்று மகிழும் வணிகர்.
பரிபாடல் – அரிய செய்தி - 18
கள்ளும் காமமும்
காமம் கணைந்து எழ கண்ணின் களி எழ
ஊர் மன்னும் அஞ்சி  ஒளிப்பாரவர் நிலை
கள்ளின் களி எழக் காத்தாங்கு ……
கரும்பிள்ளைப் பூதனார். பரிபா. 10 : 63 - 65
நெஞ்சத்திலே காமம் மிக்கு எழ – அதானானே தம் கண்களிலே அக்காமக் களிப்புப் புறத்தாற்குப் புலப்படும்படித் தோன்றும் – அதனை அறிந்து ஊரில் உள்ளார் அலர் தூற்றுவாரோ என்று அஞ்சி – காமக் களிப்பினை பிறர் அறியாதபடி மரைக்க முயல்வார் நிலைமை –
 கள் உண்டவர் தம்பால் கள்ளின் களிப்புப் புறத்தார்க்குப் புலப்படத் தோன்றி நிறக  -  தம் மனம் துன்புறும்படி ஊரவர் பழிப்பாரோ என்று அஞ்சி – அதனைப் பிறர் அறியாமல் மறைக்க முயலும் முயற்சியே  - கள் உண்ட களிப்பினை யாவரும் அறியும்படி - தாமே பரப்பி -  பின் உலகம் பழி தூற்றலைக் கேட்டு உள்ளம் நடுங்குவர். தம் கண்ணில் தோன்றும் காமக் களிப்பை மறைப்பவருடை நிலைமை   கள்ளுண்டு அதனால் உண்டாகிய களிப்பை மறைப்பருடைய நிலைமைய ஒக்கும்.
( கணைந்து – மிகுந்து ; மன்னுமஞ்சி – மிகவும் அஞ்சி; உளை – துன்பம் ; களிமதர் – கள் உண்ட களிப்பு. )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக