வியாழன், 10 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 23

பரிபாடல் – அரிய செய்தி - 23
தை நீராடி வேண்டல்
கிழவர் கிழத்தியர் என்னாது ஏழ்காறும்
மழவு  ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும்
நல்லந்துவனார். பரிபா. 11:  120 – 121
எம் கணவரும் யாமும் கிழவர் கிழவியர் என்று உலகத்தாரால் கூறப்படாமல்  - எமது ஏழாம் பருவத்திற்குரிய ஆண்டு எய்துமளவும் – இப்பருவமே நிலைபெறும்படி இளமையை – இத் தைந்நீர்த் தவம் வரம்
தர -  யாம் செல்வத்தோடும் சுற்றத்தாரோடும் நிலைபெறும்படி அருள்க என்று வேண்டிக் கொள்வாரும்….( இங்ஙனம் வேண்டுவார் மங்கை பருவ மகளிர் ஆகலான் – யாம் எப்பொழுதும் இப் பருவத்திற்குரிய இளமையுடையராக என வேண்டினர்)
(ஏழ் – எழாம் பருவம் ; அஃதாவது பேரிளம் பெண். ஏழு பருவங்களான : பேதை. பெதும்பை. மங்கை. மடந்தை. அரிவை. தெரிவை. பேரிளம் பெண் என்பன .மழவு – இளமை ; மல்லல் – செல்வம் ; கேள் – சுற்றம் ; மன்னுக – நிலை பெறுக. ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக