திங்கள், 7 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 19

பரிபாடல் – அரிய செய்தி - 19
நீர் வழிபாடு
நத்தொடு நள்ளி நடைஇறவு வயவாளை
வித்தி அலையில் விளைக பொலிக என்பார்
கரும்பிள்ளைப் பூதனார். பரிபா. 10 :  85 – 86
வையைப் புது வெள்ளத்தில் பொன்னால் செய்த நத்தை நண்டு காலினை உடைய இறால் மீன் வலிய வாளை மீன் ஆகியவற்றை விட்டு நாட்டில் விளச்சல் பெருக வேண்டும்  அதனால் உலகம் வளமுடன் பொலிய வேண்டும் என்று வேண்டி வாழ்த்தினர். இது பண்டைய தமிழர் மரபு; இன்றும் இவ்வழக்கம் உண்டு – ஆடிப்பெருக்கு – புதுப் புனல் வரவேற்றல்.
 (இறவு – இறாமீன்  இது காலுடைய மீனாதலின் நடை இறவு என்றார். )


ஒப்புமை
இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லது வெஃகி வினை செய்வார்
கரும்பிள்ளைப் பூதனார். பரிபா. 10 :  87 - 88
இல்லாமையால் வாடுவோர் நிலையினை - அவரைப் பார்த்த அளவில் உணர்ந்துகொண்டு – அவர் தம்முடைய வறுமை நிலையை வாய் திறந்து கேட்பதற்கு முன்பே – அறத்தினை விரும்பி நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் -அவர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்பார்.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.  (குறள் . 223) மேலும் காண்க :
 இம்மைச் செய்தது ………………….. புறநா.134.  பேணி யாடும் பெரும்புனல் ………… பெருங். 140 : 234 – 242.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக