வெள்ளி, 11 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 24

பரிபாடல் – அரிய செய்தி - 24
ஒப்பனை ஊட்டிய மகளிர்
மணமிக்க மலர்கள் போர்த்துப் பெருகிவந்த வையை ஆற்றுப் பெரு வெள்ளத்தைக் காணப் புறப்பட்ட மகளிர்  …..
வாச நறுநெய் ஆடி வான் துகள்
மாசறக் கண்ணடி வயக்கி வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி
வாச மணத்துவர் வாய்க் கொள்வோரும்
இடுபுணர் வளையொடு தொடு தோள் வளையர்
கட்டுவடக் கழலினர் மட்டு மாலையர்
ஓசனை கமழும் வாச மேனியர்
நல்வழுதியார். பரிபா. 12 : 19 – 25
பொன் அணிகலன்கள் – அகிற்புகை சாந்து – கூந்தலில் மணமிக்க வேர்கள் சூழ்ந்த குழல் – மலர்மாலைகள் சூடி – நீராடுவதற்குரிய புடவை உடுத்தி ………….
சிலர் கண்ணாடியின் அழுக்கு நீங்க நறுமண நெய்யைப் பூசி – வெள்ளிய கல் பொடியிட்டுத் துலக்கி -  அக்கண்ணாடியின்முன் நின்று தமது இயற்கை அழகும் செயற்கை அழகும் காதலருடன் புணர்ந்ததால் உண்டான ஒளியையும் கண்டு இன்புற்றோரும்  – ஐந்து வாசத்தோடு கூட்டி இடித்த பாக்கை வாயில் இட்டு மெல்வோரும் -  ஆணியிடும் இரட்டைவளையல் – தோள்வளை உடையோரும் – கட்டுவடத்தோடு காலாழி (சிலம்பு )  உடையோரும்  - நாற்காவத தூரம் நறுமணம் கமழும் திரு மேனியை உடைய இம்மகளிர்… நீராடும் துறையில் நிறைய……
( வண்ணம் – இயற்கை அழகு ; தேசு – செயற்கை அழகு ; வாசமணத்துவர் – “ தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் கற்பூரம் சாதியோடைந்து “. – துவர் – பாக்கு : ஒளி – கலவியால் வந்த நிறம். )  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக