புதன், 30 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 44

பரிபாடல் – அரிய செய்தி - 44

தமிழ் வழங்கும் நாடு தாழாது
தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றம் உண்டாகும் அளவு
……………. பரிபா. திரட்டு.  8.
மீன் கொடி பறக்கும் தேரினை உடைய பாண்டிய மன்னனின் பொதிய மலை இருக்கும் காலம்வரை – அவன் தலைநகரமாகிய மதுரை நகரம் – கேடின்றி நின்று நிலைத்து – குளிர்ந்த தமிழ் மொழியையே எல்லையாக  உடைய தமிழ் நாடெங்கும் புகழ் பரப்பிப் பொலிவதன்றி – தனது சிறப்பின்கண் சிறிதும் குறைதல் உண்டாகுமோ …? உண்டாக மாட்டாது.
( தமிழ் மொழி வழங்கும் பரப்பினையே எல்லையாக உடையது தமிழ் நாடு என்க. எனவே இப்புலவர் பெருமான் ஒரு நாட்டிற்கு எல்லை  அம்மொழி வழங்கும் பரப்பேயாகும் என நுண்ணிதின் ஓதியது உணர்க.)
தமிழ் வழங்கும் நிலமாவன : செந்தமிழ்ப் பாண்டிநாடும் .கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டுமாம் – இவற்றை
சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும்
சவுந்தர பாண்டியன் எனும்தமிழ் நாடனும்
சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநா டென்ப.
எனவும் –
தென்பாண்டு குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றி அருவா அதன்வடக்கு – நன்றாய
சீத மலாடு புன்னாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டென்” என வரும்  செய்யுட்களால் உணர்க.
பொதியில் செந்தமிழ் இலக்கணம் கண்ட அகத்தியனாரும் . மதுரையில் சங்கம் நிறுவி  அச்செந்தமிழ் ஆராய்ந்த சான்றோரும் இருத்ததால் – நின்று நிலை இப் புகழ் பூத்தலால் அல்லது குன்றுதல் உண்டாகாது என்றவாறு. இதனோடு –
“ பொதியிலாயினும் இமய மாயினும்
……………………………………………
நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே –
எனவரும் இளங்கோவடிகள் கூற்றினை ஒப்பநோக்குக.
இன்றுவரை….!
  எட்டுத் தொகை நூல்களாகிய நற்றிணை . குறுந்தொகை. ஐங்குறுநூறு. பதிற்றுப்பத்து. பரிபாடல் . கலித்தொகை. அகநானூறு. புறநானூறு ஆகிய நூல்களிலிருந்து அரிய – ஆய்வுக்குரிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளித்தோம். மேலும் பல உள என்பதறிந்து கற்றுணர்க.
எட்டுத்தொகை நூல்களில் அரிய – ஆய்வுக்குரிய செய்திகள் முற்றின.

பத்துப்பாட்டு –அரியசெய்திகள் …. தொடரும்…….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக