திங்கள், 25 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 745

திருக்குறள் – சிறப்புரை : 745
கொளற்கரியதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.--- ௭௪௫
பகைவரால் கைப்பற்ற முடியாததாய்; வேண்டிய உணவு அளிக்க வல்லதாய்; உள்ளிருப்போர் போர் நிலைக்கு எளிதாய் அமைவது அரண்.
“உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்
நிரைபறைக் குரீஇயினம் காலைப் போகி
முடங்கு புறச் செந்நெற்றரீஇயர் ஓராங்கு
இரைதேர் கொட்பினவாகிப் பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்ந்தாங்கு.” ----அகநானூறு.
உரைத்தல் அமைந்த வளவிய புகழினையுடைய பாரியினது பறம்பு அரணில் வரிசையாகப் பறத்தலையுடைய குருவியின் கூட்டம் காலையில் புறம்போய்ச் சிவந்த நெற் கதிர்களைக் கொணர்ந்து தருமாறு திரிதலை உடையனவாகி ஞாயிறு மறையத் துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதில் மீண்டு வந்தாற்போல….
பாரியின் பறம்பு அரணை மூவேந்தரும் முற்றியிருந்த பொழுது, அகத்திருப்பார் உணவின்றி வருந்தாவாறு, கபிலர் என்னும் நல்லிசைப் புலவர் கிளிகளை வளர்த்து வெளியிலிருந்து நெற்கதிர்களைக் கொண்டுவரச் செய்தனர் என்பது வரலாறு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக