டாக்டர் வ. சுப. மாணிக்கம்.
“
வாழ்க்கைத்
தோழர்களே ..! இறுதியாக, ஒரு வள்ளுவம் கேண்மின்..! மக்கள்பால் ஆசான் கண்டறிந்த பெருங்குறை
ஒன்று உளது, அக்குறை தீர்த்தாலல்லது வாழ்வுக்கு முன்னேற்றம் இல்லை.கல்வி அறிவு செல்வங்கள்
வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு, ஊக்கம் முயற்சி மடியாமை வேண்டும் என்ற எண்ணம் நமக்கு
உண்டு, தூய்மை, வாய்மை சால்புகள் வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு, நல்லவையெல்லாம்
வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு, எண்ணிய எண்ணியாங்கு எய்தல் வேண்டும் என்ற பேரெண்ணம்
நமக்கு உண்டு, இவ்வெண்ணமெல்லாம் நிரம்பிவழியும் நமக்கு, நன்கு ஊன்றிக் கொள்மின் ! எண்ணத்
திட்பம் இல்லை, இல்லை, இல்லை..! எண்ணியதை மீண்டும் மீண்டும் பெருக்கல் வாய்பாடுபோல
நினைவுக்குக் கொண்டுவரும் எண்ணப் பயிற்சி இல்லை,
உள்ளத்தால் உள்ளிய எனைச் சிறுபெருஞ் செயலையும் திரும்பத் திரும்ப உள்ளிக் கொள்ளும்
உறைப்பு இல்லை, விரும்பிய ஒரு குணத்தைக் குறிக்கோளாகத் தேர்ந்து வைத்துக்கொண்டு, அதனைப்
பலகாலும் பயிலும் செயற்கோள் இல்லை, கோளற்ற , செயலற்ற, முறையற்ற வாழ்க்கையாகத் தள்ளிக்கொண்டு,
இறப்பு நோக்கிச் செல்கிறோம், உரம்போடா நல்வித்து விளையாமை போல, திட்பம் இல்லா எண்ணம்
செயலாதல் இன்று, நெஞ்சுரம் அற்ற மகன் நினையும் எண்ணம் பேடிகை வாள் ஒக்கும், திண்மை
பெறா எண்ணாளன் வாழ்வு விரியாது சுருங்கும் ; ஆதலின் ‘ வினைத் திட்பம் என்பது ஒருவன்
மனத் திட்பம்’ ( 661) என்பர், இத்திட்ப வள்ளுவத்தை நினைக..! நினைக..!! என்று நும்மைப்
பன்மாணும் இரப்பன்.”
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக